Home உரத்த சிந்தனை உயிர் நண்பன் பிடிக்காத செயலையும் நம் நன்மைக்காக தான் செய்வான் !

உயிர் நண்பன் பிடிக்காத செயலையும் நம் நன்மைக்காக தான் செய்வான் !

செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.

பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான்.

பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள்.அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.ஒரு நாள் செங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள். செங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான்.

 

“”என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்” என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான்.அவன் குதிரையில் பயணித்த போது பருந்து கம்பீரமாக அவன்
முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.

பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் செங்கிஸ்கான் அடையாளத்துக்காக!. அந்தக் குல்லா தலையில் இருக்கும்வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லக் கூடாது.

அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான் செங்கிஸ்கான்.பருந்து பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.

அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை. செங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான்.

பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது. செங்கிஸ்கானும் நண்பர்களும் களைப்பு வரும்வரை வேட்டையாடினார்கள். விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் செங்கிஸ்கான் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான்.

மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது.செங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது. நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான்.அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது.தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது.

தன் கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது.

இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன்.

இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.”
செங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்துத் தன் வலக்கையில் பிடித்துக் கொண்டான்.

பருந்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். “இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ நீ செத்தாய்’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.

வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.  பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன்.

பருந்து மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன். பருந்து வெட்டுண்டது. என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.

பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. சொட்டிக் கொண்டிருந்த நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது.

இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான். பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி இருந்தது.

அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான். அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும்.

மன்னன் அந்த நீரை உண்டிருந்தால் உடனே செத்திருப்பான். அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான செங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.

நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்தில் ஒரு பருந்தைச் செய்து வைத்தான்.அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.

“கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன.”

மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது

“உன்னுடைய உண்மையான நண்பன் உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான்”.’ .ஒரு செயலை எடை போடும் போது அந்தச் செயலை மட்டும் பார்க்காமல் அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும்.

நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில் நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள். அதற்காக அவர்களை விட்டு விலகிச் சென்று விடக் கூடாது. நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்தகைய நண்பர்களைப்பற்றி ஏதாவது குற்றம் குறையை சொல்லி நம்மைக் கவிழ்க்க நினைப்பவர்கள் நம்மைப் புகழ்வார்கள். நமக்குப் பிடித்ததைச் செய்வார்கள்.

ஆனால், அவர்கள் நோக்கம் நம்மை வீழ்த்துவதுதான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இது எல்லாவற்றையும் மீறி கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பிறழாமல் வாழ்பவன் பின்தங்க மாட்டான்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version