― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

- Advertisement -
voting by vips

2024 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில், வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் முதல் கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 

நூறு சதவீத வாக்குப் பதிவு என்பது குறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டார்.

அதில், 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது! – என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்திருந்து வாக்கை பதிவு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்று உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “கோவை தொகுதியில் பாஜக., வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. அப்படி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். களத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டிருக்கிறேன். நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும். ஆள்பவர்களோடு தொப்புள்கொடி உறவு நீடிக்க வாக்களிக்க வேண்டும். பணநாயகத்திற்கு கோவை மக்கள் முடிவு கட்டுவார்கள்.

ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள்தான். எங்கு இருந்தாலும் மாலை 6 மணிக்குள் வாக்களித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். கேள்வியாகவும், தவமாகவும், வெளிப்படையாகவும் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். தேர்தல் திருவிழா நாளில் அனைவரும் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும். திராவிடக் கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் முடிவு கட்டப்படும். மாற்றம் ஏற்பட வாக்களிக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி நல்ல முடிவு கிடைக்கும். 39 தொகுதிகளும் வெல்வோம்.

கொங்கு மண்டலத்தில் எப்படியாவது மக்களை விலைக்கு வாங்கலாம் என்று திமுக நினைப்பது கவலை அளிக்கும் விஷயம். ஜூன் 4ம் தேதி வெளிவரவிருக்கும் கோவை மாடல் நாடு முழுவதும் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். 

சென்னை கோயம்பேடு வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஓட்டளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2047ல் இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும். இதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். 

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஓட்டளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தபோது,  “கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெல்லும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். நாடு செழிக்க வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். அகில இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் பிரதமர் மோடி மேலும் நல்ல மாற்றங்களை கொண்டு வருவார்” என்று கூறினார்.  

திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மிக முக்கியமான நாள் இது. திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது. நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்று கேட்கிறார்கள். நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல” என்றார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும். தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது” என்று கூறினார்.   

தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் அவர் இது குறித்துக் கூறியபோது, “இந்திய தேசத்தினுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடிதான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன்” என்றார்.

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பிரபலங்கள், நடிகர்கள் உள்ளிட்ட்டோரும் இன்று காலை முதலே வாக்குச் சாவடிகளில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர். நடிகர் அஜித்குமார் தனது வாக்கினைச் செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வந்து வாக்களித்தார். 

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version