
அருப்புக்கோட்டை அருகே, மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் தனபாலன் (57). காரியாபட்டி அருகே, நாகனேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2008 முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் மாணவ, மாணவியர் 40 பேர் படித்து வருகின்றனர். தனபாலன் மற்றும் ஒரு ஆசிரியை மட்டும் பள்ளியில் உள்ளனர்.
கடந்த 10ம் தேதி மதியம் ஆசிரியர் தனபாலன், 3ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேரை சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு அழைத்து சென்று, தனது செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். பின் 3 பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வகுப்பறையில் மாணவர்கள் கூச்சலிட்டதால், ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க 5ம் வகுப்பு மாணவி ஒருவர் தனபாலனிடம் வந்தார். அப்போது அவர், மாணவிகளிடம் ஆபாச படம் காண்பித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக செல்போனை பறித்துள்ளார்.இதில் செல்போன் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 மாணவிகளும், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளின் பெற்றோர், ஊர்மக்கள் திரண்டு நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் தனபாலனிடம் கேட்டுள்ளனர். அப்போது, ‘தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று கெஞ்சியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். எஸ்ஐ ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தனபாலனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை திருவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூர்த்தியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர் தனபாலன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மாணவிகளுக்கு ஆசிரியரே செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது அருப்புக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.