டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க தமிழிசை அறிக்கை

நாமக்கல் மாவட்ட ‘டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க வேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விஷ்ணுபிரியாவின் உயிரிழப்பு பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறது. அவரின் உயிரிழப்பு முழுமையாக விசாரிக்கப்பட்டு அவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது முக்கியம். அதே நேரத்தில் ஒவ்வொரு உயிரிழப்புகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போதுமா சி.பி.ஐ. வேண்டுமா? என்று விவாத பொருளாகி சில நாட்கள் உரக்க பேசப்பட்டு அடுத்த சம்பவம் நடைபெறும் வரை மறக்கப்பட்டு, மறுபடியும் விவாதப் பொருளாக மாற்றப்படும் என்ற நிலையிலேயே ஒவ்வொரு சம்பவமும் சென்று கொண்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

குறிப்பாக பெண் அதிகாரிகள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பணியின் காரணமாக வெளிப்படை தன்மையோடு விவாதிக்க இயலாத நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பொது கலவரங்களில் கூட தங்களின் தன்மான உணர்வுகள் இடற்படுத்தப்பட்டு அவமானத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால் அவர்களின் பிரச்சனைகளை உண்மையாக உள்வாங்கி வழிகாட்டும் ஒரு குழு அமைக்கப்படுவது நலம் என கருதுகிறேன்.

ஒய்வு பெற்ற பெண் நீதிபதி, உயர் பெண் காவல்துறை அதிகாரி, பெண்கள் நல மருத்துவர், மனநல மருத்துவர், இவர்களை போன்றவர்களை இணைத்து ஒரு குழு அமைத்து வழிகாட்டினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வரும் என்றும், தொல்லைகள் எல்லை மீறி போகாது எனவும், மன அழுத்தத்திற்கு வடிகால் கிடைக்கும் என்பதும், அதன் மூலம் அவர்கள் பணியாற்ற வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதும் எனது கருத்தாக இருக்கிறது.

தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணை போதுமென்று அறிவித்துள்ளது. ஆனால் அதிலும் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதும் முழுமையான விசாரணை முடிவடையாத வழக்குகள் பல உள்ளன என்பது யாவரும் அறிந்ததே. ஏதோ சி.பி.ஐ. வேண்டாம் என்று சொல்வதன் மூலம் உண்மைகள் மறைக்கப்படுகின்றனவா? என்ற நிலை உருவாவதும் சரியல்லை.

சி.பி.ஐ. விசாரணை அறிவிப்பதோடு, ஒரு வழிகாட்டுதல் குழுவை அமைத்து அரசாங்கம் நடைமுறை படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை வலியுறுத்தி பா.ஜ.க. மாநில இளைஞரணி சார்பில் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் 26-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.