― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தற்கொலைப் பாதையில்... பாஜக.,! தென்படாத... தமிழகத்தின் ‘விடியல்’!

தற்கொலைப் பாதையில்… பாஜக.,! தென்படாத… தமிழகத்தின் ‘விடியல்’!

- Advertisement -

~ ஜடாயு, பெங்களூர்

தமிழ்நாடு பாஜக தலைமை பெரியாரையும் அவரது சமூக சீர்திருத்த கருத்துக்களையும் “ஏற்கிறோம்” என்று கூறுவது தொடர்கிறது.

2020 செப்டம்பரில் வானதி பெரியாரைப் புகழ்ந்தார். இப்போது அண்ணாமலை “பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்ததில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்கிறார். இது கட்சியின் மையமான இந்திய-தேசிய, இந்துப் பண்பாட்டு அடையாளத்தை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்யும் செயல். கட்சியைத் தற்கொலைப் பாதைக்கு இட்டுச் செல்லும் செயல்.

பெரியார் என்ற தமிழ்நாட்டின் சாபக்கேட்டை வைத்து திமுக எப்போதும் ஏதாவது செய்துகொண்டேதான் இருக்கும். ஏற்கனவே இருக்கும் சிலை அவலட்சணங்கள் போதாது என்று 135 அடியில் இன்னொன்று, பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவிப்பது இத்யாதி.

four bjp members

இப்போதுள்ள சூழலில், இது பாஜகவையும் தன்மான உணர்ச்சியுள்ள தமிழ் இந்துக்களையும் சீண்டுவதற்காக, தூண்டிவிடுவதற்காகவே செய்யப் படுகிறது. இதற்கெல்லாம் பாஜக எதிர்வினை ஆற்றியே ஆகவேண்டும் என்று ஒரு கட்டாயமுமில்லை. வெளிப்படையாக எதிர்க்கத் திராணியில்லை, தயக்கம் என்றால், அப்படியே அமைதி காத்து கடந்து செல்லலாம். முந்திக்கொண்டு வந்து இப்படி எதையாவது கூற அப்படி என்ன அவசியம்?

மௌனம் என்ற சிறந்த யுக்தியை தேவையான இடங்களில் பயன்படுத்துவது என்பது அனைவரும் கற்க வேண்டிய ஆளுமைத் திறன். குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு அது மிகவும் அவசியம். ஏன் தமிழக பாஜக தலைவர்களுக்கு இது எவ்வளவு சொல்லியும் புரிவதே இல்லை?

இதைக் கற்க வேறு எங்கும் போகவேண்டாம். எதிரியான திமுகவைப் பார்த்தாலே போதும். எப்படி தமிழ்நாட்டில் அத்தனை பேரும் கொண்டாடும் விநாயக சதுர்த்தி, ஆயூத பூஜை, தீபாவளி ஆகிய மாபெரும் பண்டிகைகளின் போது திமுக ஒரு சம்பிரதாயமான வாழ்த்துக் கூட கூறாமலிருக்கிறது, “விடுமுறை நாள்” என்று தனது தொலைக்காட்சியில் கூறி நக்கல் செய்கிறது, எப்படி ஊடகங்கள் வாயிலாக இந்துமதத்தையும், இந்து தெய்வங்களையும் பண்டிகைகளையும் பற்றிய வெறுப்பு பிரசாரங்களைத் தொடர்ந்து அதன் ஆதரவுக் கும்பல்கள் இங்குள்ள கிறிஸ்தவ மதவெறிக் கூட்டங்களோடு சேர்ந்து கொண்டு செய்கிறார்கள் – இவற்றையெல்லாம் பாருங்கள்.

மேற்சொன்ன பண்டிகைகள் உலகெங்கும் உள்ள இந்துக்களின் பண்பாட்டு அடையாளங்கள். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் (திமுக நீங்கலாக), கிறிஸ்தவ, இஸ்லாமிய வணிக நிறுவனங்களும் கூட இவற்றுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். ஏன், பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் என உலக நாடுகளின் தலைவர்கள் கூட தீபாவளிக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் வருடாவருடம் விநாயக சதுர்த்தி நாளில் அங்குள்ள இலங்கைத் தமிழ் இந்துக்கள் அமர்க்களமாக தேங்காய் உடைத்து பிள்ளையார் ஊர்வலம் தேரோட்டம் நடத்துவதை ஒரு கொண்டாட்டமாகவே அங்குள்ள அரசு அங்கீகரித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் வருடம் தோறும் பிரமாதமாக தீபாவளி விழா நிகழ்ச்சி நடக்கிறது.

இப்படி உலகெங்கும் ஏற்கப் பட்ட இந்துப் பண்பாட்டுப் பெருமிதங்களை திமுக எந்தத் தயக்கமும் இல்லாமல் அவமதித்தும், எதிர்த்தும் வருகிறது. இந்த அளவு மூர்க்கத்தனமாக அந்தக் கட்சி தனது இந்து எதிர்ப்புக் கொள்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இதை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் கூட அந்தக் கட்சிக்கு இல்லை.

ஆனால், கும்மிடிப்பூண்டிக்கு வடக்கே பெயர்கூடத் தெரியாத காலாவதியான அரசியல் கயவரான பெரியாரை ஏதோ பெரிய கடமைபோலப் புகழ்கிறார்கள் தமிழ் பாஜக அரசியல் தலைவர்கள். அதற்கு ஒரு சாக்குப் போக்கு, மழுப்பல்கள். வெட்கம்.

பெண் விடுதலை, பட்டியல் சமுதாயத்தினருக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு – இந்த விஷயங்களில் ஈவேரா என்கிற நபர் எந்தவித நேர்மறையான தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பது மட்டுமல்ல, முற்றிலும் தீமையையே செய்துள்ளார். இதை சிறந்த ஆய்வாளரும் சிந்தனையாளருமான ம.வெங்கடேசன் Ma Venkatesan மாங்கு மாங்கென்று ஆய்வு செய்து தனது “ஈ.வே.ராமசாமியின் மறுபக்கம்”, “தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடுபட்டதா நீதிக்கட்சி” ஆகிய நூல்களில் விளக்கியிருக்கிறாரே.

தங்கள் கட்சியின் SC/ST பிரிவின் தலைவராக உள்ளவர் எழுதிய நூலை ஒருமுறை புரட்டியிருந்தால் கூட இவர்களுக்கு தான் பேசியது எவ்வளவு தவறானது என்று தெரிந்திருக்கும். பிறகு ஏன் இப்படி? பெண்களை வெறும் பாலியல் போகப்பொருள்களாக அன்றி வேறெந்த வகையிலும் பார்க்கத் தெரியாத சீழ்பிடித்த வக்கிர மனநிலை கொண்டவர் ஈ.வே.ரா. பட்டியல் சமுதாய மக்களைக் குறித்து மிகவும் கீழ்த்தரமாகப் பேசியது மட்டுமன்றி கீழவெண்மணி படுகொலைகளுக்கு மறைமுக ஆதரவும் அளித்தவர் ஈ.வே.ரா.

இந்த உண்மைகளை பொதுத்தளத்தில் வைக்கவேண்டிய பொறுப்பிலிருக்கும் பாஜக தலைவர்கள் ஈவேராவைப் புகழ்வதும், அவருடைய “சமூக சீர்திருத்தக் கருத்துகளை” ஏற்கிறோம் என்று கூறுவதும் கொடுமை, அவலம். ஈவேரா ஒரு முடைநாற்றம் பிடித்த சாக்கடை. “அந்த சாக்கடையில் வடக்கு ஓரம் தான் எங்களுக்கு பிரசினை, தெற்கு ஓரத்தை எடுத்துப் பூசிக் கொள்கிறோம்” என்பது போல இருக்கிறது இது.

பாஜக எதிர்க்கக் கூடிய அத்தனை தீமைகளின் ஒட்டுமொத்த உருவகம் பெரியார். அவரை “ஏற்பது” என்று முடிவெடுத்து விட்டால், பிறகு தமிழ்நாட்டில் கட்சியையே கலைத்துவிட்டுப் போய்விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version