― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் 1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல்: புதிய தமிழகம் வெளியீடு;...

ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் 1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல்: புதிய தமிழகம் வெளியீடு; ஆளுநரிடம் மனு!

- Advertisement -
krishnasamy met governor

ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் 1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல்: புதிய தமிழகம் வெளியீடு; ஆளுநரிடம் மனு!

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் :

1) மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை.

2) ஆயத் தீர்வை விதிகளின்படி, மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயத் தீர்வைகள் வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவுக்குச் செலுத்தப்படும். ஆனால், இப்பொழுது தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மதுபானங்களில் 60% சரக்குகளுக்கு ஆயத்தீர்வை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 40% சரக்குகளுக்கு எவ்விதமான ஆயத்தீர்வையும் வசூலிக்கப்படாமல் கள்ளத்தனமான விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்களும், அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கக்கூடியவர்களுமே பெரும் பயன் அடைகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய ஆயத்தீர்வை வரியுடன், லாபமும் அரசியல் பிரமுகர்களின் கஜானாவை நிரப்புகின்றன. மதுபான கொள்முதலில் மட்டுமே ஆண்டொன்றுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கோடி அளவிற்கு மேல் ஊழல் நடைபெறுகிறது. அதில் ரூ 25,000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

3) ஆண்டொன்றுக்கு ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் கோடி முதல் ரூபாய் ஐம்பதாயிரம் கோடி வரை வரி வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறை எப்பொழுதும் நட்டத்தில் இயங்குவதாகவே கணக்கு காண்பிக்கப்படுகிறது. மேலும், மதுபான கிடங்குகளில் உள்ள மதுபான பாட்டில்களை அடகு வைத்து ரூ 500 கோடி முதல் ரூ 1,000 கோடி வரையிலும் பல்வேறு வங்கிகளில் டாஸ்மாக் நிறுவனம் கடன் பெற்று வட்டி செலுத்தி வருகிறது. தினமும் விற்பனையாகக் கூடிய மதுபானங்களின் அளவை சொத்தாகக் கணக்குக் காட்டி வங்கிகளில் கடன் பெற்று இருப்பதே வங்கிகளை ஏமாற்றுவதற்கும், அரசுத் துறையே மோசடி செய்வதற்கும் சமமாகும். ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் கோடி வரி வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறை நட்டத்தில் இயங்குவதாகக் கூறுவதே மோசடியும், ஊழலுமாகும். எனவே இதுகுறித்து முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும்.

4) மதுபான உற்பத்தி செலவுடன், பாட்டிலின் விலை, மூடியின் விலை, லேபிள் விலை என தனித்தனியாக ஒவ்வொன்றிற்கும் அபரிமிதமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு அவற்றில் கிடைக்கக்கூடிய லாபங்கள் அனைத்தையும் ஆளும் கட்சியின் அரசியல் உயர் மட்டத்தில் இருக்கக்கூடியவர்களே அபகரித்துக் கொள்கிறார்கள். இதன் மூலமாக அரசுக்கும் பேரிழப்பு ஏற்படுகிறது. தோராயமாக மூடி, பாட்டில், லேபிள் முறைகேடுகளால் மட்டுமே ஆண்டுக்கு ரூ 5,000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.

5) ஒட்டுமொத்தமாக 19 மதுபான ஆலைகளிலிருந்து மதுபானம் கொள்முதல் செய்யப்படுகின்ற பொழுது, அது எல்லா ஆலைகளிலிருந்தும் சீராக கொள்முதல் செய்யப்படாமல், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து அல்லது நெருக்கமான நிறுவனங்களிடமிருந்து மட்டுமே அதிகமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, SNJ என்ற நிறுவனம் மிக அண்மையில் துவக்கப்பட்டது. இருப்பினும், இப்பொழுது SNJ நிறுவனத்திடமிருந்து மட்டுமே அதிக அளவில் மதுபான கொள்முதல் நடைபெறுகிறது. SNJ நிறுவனத்தின் உரிமையாளர் இன்றைய முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர் என்பதும், அவரது வீட்டிற்கு எதிரே குடியிருந்து வருகிறார் என்பதும், கலைஞரின் ’உளியின் ஓசை’ என்ற படத்தின் தயாரிப்பாளர் ஜெயமுருகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் மதுபான ஆலைகளின் உரிமையாளர்கள் அரசியல் பிரமுகர்களாகவும், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களாகவும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்துச் செயல்படுகிறார்கள்.

6) ஒவ்வொரு மதுபான ஆலையிலிருந்தும் கொள்முதல் செய்யப்படக்கூடிய மதுபானங்கள் எந்தெந்த சில்லறை விற்பனை மதுக் கடைகளுக்கு எவ்வளவு அனுப்பப்படுகின்றன என்பது குறித்து எவ்விதமான தகவலும் அரசிடம் இல்லை; அவை கணினி மயமாக்கப்படவுமில்லை; அவைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. சில்லறை விற்பனை கடைகளுக்கு தனித்தனியாக லைசன்ஸ் வாங்காமல் ஒட்டு மொத்தமாக 5362 கடைகளுக்கும் ஒரே உரிமம் பெற்று உள்ளார்கள். அதுவே மெகா ஊழலின் ஊற்றுக்கண்ணாகும். இதன் காரணமாக மதுபானங்களின் தரம் குறித்து சோதனை செய்யவோ, தரம் மோசமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எவ்வித வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.

7) பொதுவாக, டாஸ்மாக் சில்லறை மதுக் கடைகளில் விலை குறைவான மதுபானங்களே அதிகமாக விற்பனையாகும். ஆனால், அந்த ரகங்களில் அதிக லாபம் கிடைக்காது என்கிற காரணத்தினால் மது உற்பத்தி ஆலை அதிபர்கள் விலை கூடுதலான உயர் ரக மதுபானங்களை உற்பத்தி செய்து, டாஸ்மாக் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு டாஸ்மாக் சில்லறை கடைகளின் விற்பனை ஊழியர்கள் மீது திணிக்கப்பட்டு அதிக விலையுடைய மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுபோன்று மது பிரியர்களால் விரும்பப்படாத விலை உயர்ந்த மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் வாங்கி குவிப்பதால் மட்டுமே ஆண்டுக்கு ரூ 1,000 கோடிக்கும் மேலாக விற்கப்படாத மதுபான சரக்குகள் ஆங்காங்கே கடைகளில் தேங்கிக் கிடக்கின்றன.

😎 ஏறக்குறைய 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற TASMAC நிறுவனம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆயத்தீர்வை மூலம் வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனத்திற்கு மதுபான ஆலைகளிலிருந்து மதுபானங்களை கிடங்கிற்குக் கொண்டு வரவோ அல்லது டாஸ்மாக் நிறுவனத்தின் கிடங்கிலிருந்து சில்லறைக் கடைகளுக்கு எடுத்துச் செல்லவோ சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லை. ஒப்பந்தங்கள் – வாடகை வாகனங்கள் மூலமாக மட்டுமே மதுபானங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அது ஏன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

9) டாஸ்மாக் கிடங்கிலிருந்து சில்லறைக் கடைகளுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒப்பந்த வாடகை வாகனங்களுக்கான டெண்டர் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. அண்மையில் நடைபெற்ற டெண்டரில் கூட வேறு எவரையும் பங்குபெற விடாமல் தடுத்து, தமிழகம் முழுவதும் மூன்று வருடத்திற்கு ஒரே ஒருவருக்கு மட்டுமே ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் நடைமுறையில் உள்ள ஒரு கி.மீ ரூ 8 என்ற கட்டணத்தை விட, இரண்டு மடங்கு கூடுதலாக ரூ 15 எனக் கட்டண நிர்ணயம் செய்து குறிப்பிட்ட அரசியல் புள்ளி ரூபாய் ஐந்து கோடி அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறார்.

10) மதுபானங்களை அனுமதிக்கப்பட்ட TASMAC சில்லறை விற்பனை மதுக் கடைகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்; மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும்; ஒவ்வொரு மதுபான கடையின் அருகாமையிலும் மதுபானக் கூடங்கள் (BAR) இருக்க வேண்டும்; மதுக்கூடங்களில் எந்தவித மது விற்பனையும் செய்யக் கூடாது என்பன விதிகளாகும்; நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி, மதுக்கூடங்களில் மது விற்பனை செய்வது சட்ட விரோதமாகும். ஆனால், சட்ட விரோதமாக இயங்கும் 4000-க்கும் மேற்பட்ட மதுக்கூடங்களில் விடிய விடிய மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, பன்மடங்கு கூடுதலான விலையுடனும் விற்பனை செய்யப்படுகின்றன.

11) இந்த மதுக் கூடங்களில் வெளி மாநில மதுபானங்களும், போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பொட்டலங்களில் – பாட்டில்களில் அடைக்கப்பட்ட பொருட்களை தவிர, மதுக்கூடங்களில் அடுப்பு வைத்துச் சமையல் செய்து எவ்விதமான பொருட்களும் விற்பனை செய்யப்படக் கூடாது. மாறாக, மாமிச வகைகள் சமைத்து விற்கப்படுகின்றன. இந்த முறைகேடுகள் எவராலும் கண்காணிக்கப்படுவதில்லை. விலைப் பட்டியல் காட்சிப் படுத்தப்படுவதில்லை. தனி ஊழல் ராஜ்ஜியமாகப் பட்டவர்த்தனமாக நடக்கிறது.

12) தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களைச் சேகரிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயில் 1.80% பணம் டாஸ்மாக் சில்லறை கடை விற்பனைத் தொகை செலுத்தப்பட வேண்டும். அதற்காக மட்டுமே பார்கள் டெண்டர் விடப்படுகின்றன. சராசரியாக ஒரு பார் ஒரு மாதத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூபாய் மூன்று லட்சம் வரையிலும் அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பார் எடுத்தவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அல்லது வேண்டப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 2 மாதத்திற்கு பணம் செலுத்துவது, அதற்குப் பிறகு பணம் செலுத்தாமல் அந்தப் பார்கள் மூடப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். ஆனால், எதார்த்தத்தில் இந்த பார்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். பார்களிலிருந்து அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய மாதாந்திர தொகை செலுத்தப்படுவதில்லை. மாறாக, அந்த தொகை அரசியல் அதிகாரம் பெற்றவர்களுக்குச் சென்று விடுகின்றன. தமிழகத்தில் ஏறக்குறைய 4,000 பார்கள் சட்டவிரோதமாக இயங்குகின்றன. இதன் வாயிலாக மாதம் ரூ 750 கோடி முதல் ரூ 1000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ 15,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது.

13) மதுவை ஏக போக விற்பனை செய்யும் உரிமை அரசிடமே இருக்க வேண்டும் என்பதற்காகவே TASMAC டாஸ்மாக் நிறுவனம் துவங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது 60 சதவிகித மது விற்பனை மட்டுமே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக் கடைகள் மூலமாக நடைபெறுகிறது; 40 சதவிகித மது விற்பனை உரிமம் பெறாத சட்டவிரோத பார்களுக்கு சென்று விடுவதால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் தோராயமாக ரூ 10, 000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது மிகப்பெரியக் குற்றமாகும்.

14) தமிழகத்தில் உரிமம் இல்லாமல் ஆயிரக்கணக்கான மதுக்கூடங்கள் சட்ட விரோதமாக ’மது விற்பனை நிலையங்களாக’ செயல்படுகின்றன. இந்த சட்ட விரோத – உரிமம் பெறாத பார்கள் மூலமாக மட்டும் சராசரியாக ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் பதினைந்து லட்சம் வரையிலும் இடத்திற்கு தகுந்தவாறு கள்ளத்தனமாக மது விற்பனையாகின்றன. இவ்வித மது விற்பனையில் சராசரியாக தினமும் ரூ 100 கோடிக்கும் மேலாக, ஆண்டொன்றிற்கு ரூ 50,000 கோடி அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் கஜானாவுக்குச் சென்று விடுகிறது. இது மெகா ஊழலாகும்.

15) சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் Elite மால்கள் என்று அழைக்கப்படக்கூடிய பெரு வணிக நிறுவனங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது. தென்சென்னையில் மட்டும் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட மால்களில் ’Elite’ என்ற உயர்ரக மதுபானங்கள் விற்கும் மதுபான கடைகள் உண்டு. அந்த கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நேரடியாக வாடகைக்கு எடுக்காமல் குறிப்பிட்ட இரு இடைத்தரகர் மூலமாக வாடகைக்கு எடுப்பதால் உண்மையான வாடகையை விட இரண்டு மூன்று மடங்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு தெரிந்தே இழப்பு ஏற்படுகிறது. சென்னையில் மட்டுமே Elite பார்கள் மாதத்திற்குக் கூடுதலாக ரூ ஐம்பது இலட்சத்திற்கு வாடகைக்கு இரு குறிப்பிட்ட நபர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் கொடுக்கிறது. இதேபோன்று தமிழகத்தின் அனைத்து பெரு நகரங்களிலும் ஊழல் மித மிஞ்சி நடைபெறுகிறது. தோராயமாக ’Elite’ பார்கள் அனுமதி மற்றும் விற்பனையில் ரூ 500 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.

16) உச்சநீதிமன்ற விதிகளின்படி, நெடுஞ்சாலைத் துறையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் மட்டுமே மதுபான கடைகள் இருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றங்களையும் ஏமாற்றக்கூடிய வகையில் நெடுஞ்சாலைகளிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய ஒரு கிராம சாலையில் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டு பின்புறம் வழியாக விற்பனைகள் செய்யப்படுகின்றன.’ மனமகிழ் மன்றங்கள்’ என்ற பெயரில் துவங்கக்கூடிய அந்த மனமகிழ் மன்ற மதுக்கூடங்களுக்கு அனுமதி பெற ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெறப்படுகின்றன. இந்த ஆட்சியில் சுமார் 2000 உரிமங்கள் தரப்பட்டுள்ளன. தினமும் புற்றீசல் போல மனமகிழ் மன்ற – மது விற்பனை நிலையங்கள் உத்தித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும், திட்டமிடப்பட்டு அந்த மனமகிழ் மன்றங்கள் அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை மதுக் கடைகளின் விற்பனையைப் பாதிக்கக் கூடிய வகையில் மிக அருகாமையிலேயே அரசே அனுமதி அளிக்கிறது. நெடுஞ்சாலை பகுதிகளில் மூடப்பட்டதாக கூறிய பல கடைகள் மீண்டும் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. இதிலும் பெரும் முறைகேடுகளும் ஊழலும் நடைபெறுகின்றன. இதன் வாயிலாக ரூ 1000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.

17) காலிப் பாட்டில்கள், காலி அட்டை சேகரிப்பிலும், அதனுடைய விற்பனையிலும், மிகக் குறைந்த அளவிற்கு டெண்டர் விடுவதிலும் பட்டவர்த்தனமாக மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.

18) டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் தினமும் லட்சக்கணக்கான மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் 180 மி.லி அளவுள்ள ரூ 140 மதிப்புள்ள ஒரு மதுபாட்டில் கூடுதலாக ’ரூ 10 முதல் ரூ 20 வரை வைத்து கரூர் பார்ட்டிகளின் உத்தரவின் பேரில் ரூ 150 – 160 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், எந்தப் பகுதி மதுபான கடைக்கும் தமிழகத்தில் பில் கொடுப்பதே இல்லை. அவை கணினி மயமாக்கப்படவுமில்லை. இத்தகைய முறைகேட்டின் மூலம் தினமும் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை ‘கரூர் பார்ட்டிகள்’ என்ற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் கைப்பற்றிச் செல்கிறார்கள். ஒத்துழைக்க மறுக்கும் ஊழியர்களை மிரட்டுவதும், பணி இட மாறுதல் செய்வதும் வாடிக்கையாகியுள்ளன. இதன் வாயிலாக தினமும் ரூ 10 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெறுகிறது. மேலும், இந்த கரூர் பார்ட்டிகள் யார்? என்பது குறித்து தனியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால் தினமும் ரூ 10 கோடி; மாதம் ரூ 300 கோடி என ஆண்டுக்கு ரூ 3600 கோடி வரை ஊழல் நடைபெறுகிறது.

19) நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு கடைக்கு ஒரு பார் என்பதற்கு பதிலாக தமிழ்நாட்டினுடைய மூலை முடுக்குகள்; தென்னந்தோப்புகள் என மூன்று முதல் ஐந்து பார்கள் மூலம் மதுபானங்கள் விற்பனையாக கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. எந்த கிராமத்திலும், எந்த நகரத்திலும் அத்தியாவசிய பொருட்கள் எது கிடைக்கிறதோ இல்லையோ, மது தாராளமாகக் கிடைக்கிறது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் நடைபெறக் கூடிய ஊழலையும், அதில் புரளும் தொகையையும் எளிதில் கணக்கிட முடியாது.

20) இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என்று எவ்விதமான வயது மற்றும் பாலினம் பாராமல் அனைவருமே குடிப்பழக்கத்திற்கு ஆளாவதும், அதனால் அவர்களுடைய உடல் நலமும் மிகப்பெரிய பாதிப்புக்கும் ஆளாகி, மரணம் எய்தும் துயர சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. ஒரு காலத்தில் வேலை செய்த பின்பு, உடல் வலிக்காக குடிப்பது என்ற நிலை இருந்தது, ஆனால் இப்பொழுது ’வேலைக்குச் செல்வதே குடிப்பதற்காகச் சம்பாதிக்கத்தான்’ என்ற அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கட்டுமானம், ஆட்டோ ஓட்டிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், தினக் கூலிகள் உள்ளிட்ட அடிமட்ட தொழிலாளர்கள் தங்களது தின வருமானத்தின் பெரும் தொகையை மது குடிப்பதிலேயே செலவழிக்கிறார்கள். அதனால் அவர்களது குடும்பம் சீரழிக்கப்பட்டு வருகிறது. ’மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு; உடல் நலத்திற்கும் கேடு’ என்று மட்டும் பாட்டிலில் இந்த அரசு எழுதி வைக்கிறது. ஆனால், நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தி, வீட்டுக்கும் இழப்பை ஏற்படுத்தி, அவர்களது உடல் நலத்திற்கும் பட்டவர்த்தனமாக கேடு செய்கிறது. மதுபானங்கள் எளிதாக கிடைக்கின்ற காரணத்தினால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்திலும் இந்த பழக்கங்கள் எளிதாக
தொற்றிக் கொண்டு மதுவிற்கு மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களுக்கும், சூதாட்டம் போன்ற பழக்கங்களுக்கும் இரையாகிறார்கள். மதுபானங்கள் தங்கு தடையின்றி எந்த நேரத்திலும் கிடைப்பதால் மதுபானம் அருந்திய வாகன ஓட்டிகளால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும், சாதாரண பிரச்சனைகள் கூட வன்முறையாகி கொலை வரை செல்வதும், எண்ணற்ற ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி ஈரல் கெட்டு மரணமெய்துவதால் பல பெண்கள் விதவையாகும் நிலைகளும் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

21) 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரையிலும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும்; முதல்வரது புதல்வர் இன்றைய அமைச்சர் உதயநிதியும்; நாடாளுமன்ற உறுப்பினரும், முதல்வரின் சகோதரியுமான கனிமொழி அவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பிரச்சாரங்களின் போதும் ”திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த ’முதல்’ கையெழுத்திடுவோம்; டாஸ்மாக் கடைகளை மூடுவோம்” என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் மதுபான விற்பனையைக் குறைப்பதற்கு உண்டான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், ஒவ்வொரு ஆண்டும் அதனுடைய வரி வருவாயை அதிகரிப்பதற்கு மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தான் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கிறது. தமிழக அரசினுடைய தலைவர் – ஆளுநர் என்ற காரணத்தினால் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதைக் காப்பாற்றாத இந்த அரசு மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.!

22) டாஸ்மாக் நிறுவனம் நிறுவப்பட்ட பொழுது ஏறக்குறைய 35,000 பேர் ஊழியர்களாக இருந்தனர். அதில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி பணியாளர்கள் என ஒவ்வொரு கடையிலும் தலா மூன்று பேர் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், இந்த 20 வருடத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய பலர் குடிப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, ஏறக்குறைய 6000-க்கும் மேற்பட்டோர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, பலர் உடல் நலம் குன்றி உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

23) பெரும்பாலும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் MA, BA படித்த பட்டதாரிகளே ஆவர். அவர்களுக்கான மாத சம்பளம் ரூ 14,850, ரூ12,350, ரூ11,340 மட்டுமே. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரக்கூடிய அந்த பணியாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களுக்கு ESI மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் கிடையாது; பணி பாதுகாப்பும் இல்லை; பணி நிரந்தரமும் இல்லை. ஆனால், மாநில அளவில் – மாவட்ட அளவில் இருக்கக்கூடிய உயர் அதிகாரிகள் கொள்ளையோ கொள்ளை என்று டாஸ்மாக் மூலமாகக் கொள்ளை அடிக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களோ ஈவிரக்கமின்றி சுரண்டப்படுகிறார்கள்.

24) டாஸ்மாக் பார்கள் வெளிப்படையாக Online Tender விடப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் BOX Tender மூலமாக பினாமிகளின் பெயர்களிலேயே பார்கள் டெண்டர் எடுக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான பார்கள் கரூர், பெங்களூரைச் சார்ந்தவர்களின் பெயரிலும்; பெரம்பலூரில் இருக்கக்கூடிய பார்கள் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்களின் பெயரிலும் டெண்டர் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல பார்கள் பெண்கள் பெயரிலும் உரிமம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பார் உரிமையாளர்களுடைய பெயர்கள், விலாசங்கள் என அனைத்தும் போலியாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ”ராஜேந்திரன், சிம்மக்கல், மதுரை” என்று மட்டுமே தகவல்கள் இருக்கிறது. அது போன்ற ஒரு விலாசத்தை வைத்து எவராலும் மதுரையில் அவரை கண்டுபிடிக்க முடியாது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டெண்டர் மோசடியை விசாரிக்க தனி ஆணையத்தையே நியமிக்க வேண்டும் என இன்றுள்ள அனைத்து பார்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.

25) அபரிமிதமான மது விற்பனை உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி 24 மணி நேரமும் சட்டவிரோத மதுக்கூடங்களில் மது விற்பனை வியாபித்து இருப்பதால் பெரும்பாலான தமிழ் மக்கள் இம்மதுப் பழக்கத்திற்கு ஆளாகி, தங்கள் உடல் நலத்தையும், பொருளாதாரத்தையும் இழந்து வருகிறார்கள். தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற ஐயமே அனைவரிடத்திலும் எழுகிறது. கோடிக்கணக்கான தமிழ் மக்களுடைய உழைப்புகளை சட்டப்பூர்வமாக அரசு சுரண்டியும், சட்ட விரோதமாக ஒரு மிகப்பெரிய கும்பல் ஒன்று ரூபாய் 1 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் செய்து, தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தையும் சீரழிக்கிறார்கள்.

26) தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செந்தில் பாலாஜி என்ற அமைச்சரின் கீழ் இருக்கிறது. அவரது துறையில் நடக்கும் இது போன்ற எண்ணற்ற முறைகேடுகள் அவரின் கவனத்திற்கு வராமலோ, அவருக்கும் இதில் பங்கு இல்லாமலோ நடக்க வாய்ப்பே இல்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் கொள்முதல் முதல் விற்பனை வரை ஊரெங்கும் வீதியெங்கும் நடைபெறுகின்ற மிகப்பெரிய ஊழலுக்கு செந்தில் பாலாஜி மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். இன்றைய அரசும் தாங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஒரு பக்கம் தரமற்ற மூன்றாம் தர மதுக்களை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறார்கள். மறு பக்கம் ஆண்டொன்றுக்கு ரூ 1½ லட்சம் கோடி முதல் ரூ 2 லட்சம் கோடி வரையிலும் விற்பனையாகும் மதுவின் மூலம் தமிழக மக்களுடைய பொருளாதாரம் சுரண்டப்படுகிறது. மக்களிடமிருந்து சுரண்டப்படுகிற அப்பணத்தினையும் பல்வேறு முறைகேடுகள் செய்து ரூபாய் 1 லட்சம் கோடிக்கும் குறைவில்லாமல் முதல்வர் குடும்பம், ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களாக விளங்கக்கூடிய திமுகவின் முன்னணி தலைவர்கள், உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள், ஆளும் கட்சியின் அனைத்து உயர் மட்ட பிரிவினர் என பலரும் பயன் அடைவதோடு மட்டுமின்றி, தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தைச் சுரண்டவும், அழிக்கவும் செய்கிறார்கள்.

1937 ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த ராஜாஜி அவர்கள் மதுவால் ஏற்படும் தீங்குகளை அறிந்து பூரண மதுவிலக்கை சேலத்தில் முதல்முறையாக அமல்படுத்தினார். மதுவால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் இப்பொழுது 86 வருடம் கழித்தும் பூரண மதுவிலக்கு நிழலாகவே இருக்கிறது; நிஜமாகவில்லை; எட்டாக் கனியாகவும் தேர்தல் வாக்குறுதிகளாகவும் மட்டுமே இருக்கிறது.

எனவே, மேதகு ஆளுநர் அவர்கள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியும் முறைகேடாக பணம் சம்பாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர், முதல்வர் குடும்பத்தினர் மற்றும் மதுவிலக்கு துறைச் சார்ந்த செயலாளர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version