― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்விஜயநகரத்தில் நடந்தேறிய 'சிரிமானோற்சவ' வைபவம்!

விஜயநகரத்தில் நடந்தேறிய ‘சிரிமானோற்சவ’ வைபவம்!

- Advertisement -

விஜயநகரத்தில் இன்று வைபவமாக “சிரிமானோற்சவம்” நடந்தேறியது.

இருநூற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன் கனக துர்க்கையின் அம்சமாக அவதரித்த “பைடிதல்லி” என்ற கன்னிகையை தெய்வமாகப் போற்றும் கொண்டாட்டம் இது. இவள் ஊர் பெரிய குளத்தில் ‘பைடிமாம்பா’ வாக வெளிப்பட்டாள். அந்த நிகழ்வையே தசரா முடிந்த பின் வரும் முதல் செவ்வாய்க்கிழமை ஒவ்வோர் ஆண்டும் சிரிமானோற்சவமாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு மாத காலம் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களில் விஜயதசமிக்கு பிறகு வரும் செவ்வாய்க்கிழமை “சிரிமானு” திருவிழா மிகச் சிறப்பாக பக்தர்களால் பக்தி பரவசத்தோடு கொண்டாடப்படுகிறது.

வடக்கு ஆந்திராவின் சொந்த மகளாக… பக்தர்களுக்கு அருள் வழங்கும் அம்மனாக வழிபடப்படுகிறாள் பைடிமாம்பா. இவளை அன்போடு ‘பைடிதல்லி’ என்றும் அழைக்கிறார்கள். பைடிதல்லி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் உற்சவம் சிரிமானோற்சவம்.

இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் வரலாற்றின் பக்கங்களைப் புரட்ட வேண்டும். பொப்பிலி யுத்தம் பற்றி சிறிதாவது அறிந்திருக்க வேண்டும். சுமார் 260 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு சமஸ்தானங்களான விஜயநகரமும் பொப்பிலியும் அருகருகில் தனி நாடுகளாக இருந்தன. விஜயநகர அரசன் பொப்பிலி மீது நிகழ்த்திய போரே பொப்பிலி யுத்தமாக வரலாற்றில் நிலைத்து விட்டது. அதோடு கூட ஒரு ஆன்மீக ஒளியும் தோன்றியது அதிசயம்தான்!

அன்றைய விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் அரசன் பெத்தராமராஜு. அவனுடைய தங்கையே சிறுமி பைடிதல்லி. பொப்பிலி சேனாதிபதியின் சதித்திட்டத்தால் 1757 ல் நடந்தது பொப்பிலி போர். துர்கா தேவியை உபாசனை செய்து வந்த சிறுமி பைடிதல்லி இந்த சதியை முன்பே உணர்ந்து தன் அண்ணனான விஜயநகர சமஸ்தான அரசர் பெத்தவிஜயராஜுவிடம் யுத்தம் வேண்டாம் என்று தடுத்தாள். ஆனால் அதனை கேட்காமல் யுத்தத்திற்குச் சென்றான். ஆனாலும் விடாமல் எதிரி அரசனின் சதியை எப்படியாவது அண்ணனுக்கு விவரிக்க வேண்டும் என்று பின்தொடர்ந்து சென்றாள் சிறுமி பைடிதல்லி. அதற்குள் ‘தாண்ட்ற அப்பாராயுடு’ வின் கையால் அரசன் வீரமரணம் எய்தினான். அந்தச் செய்தியை அப்பலநாயுடு என்ற உதவியாளர் மூலம் சிறுமி பைடிதல்லி அறிந்தாள். அதனைத் தாங்க இயலாமல் உயிர் துறந்தாள்.

சிறிது காலம் கழித்து அப்பலநாயுடுவின் கனவில் தோன்றி தான் ஊருக்கு மேற்கில் உள்ள பெரியகுளத்தில் விக்கிரக வடிவில் தோன்றி இருப்பதாகக் கூறினாள். அதனை எடுத்து வந்து பூஜை செய்தால் நல்லது நடக்கும் என்று தெரிவித்தாள். அப்போதைய அரசன் ஆனந்தகஜபதிராஜு தலைமையில் விக்கிரகத்தை வெளியே எடுத்து சிறுமி பைடிதல்லி உயிர் துறந்த இடத்திலேயே ஆலயம் கட்டி ஒவ்வொரு ஆண்டும் உற்சவம் நடத்தி வருகின்றனர். அதுவே தற்போது விஜயநகரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள “வனங்குடி” என்றழைக்கப்படும் ஆலயம். அதன்பிறகு பக்தர்களின் சௌகரியத்தை முன்னிட்டு ராசகோட்டைக்கருகில் மற்றுமொரு ஆலயத்தை நிர்மாணித்தார்கள். அதனை ‘சதுர்குடி’ என்றழைப்பர்.

‘பைடிதல்லி ஜாத்தர’ எனப்படும் இந்த திருவிழாவில் மிகவும் ரமணீயமான பண்டிகை சிரிமானோற்சவம். இந்த ‘சிரிமானு’ எனப்படும் மரக்கொம்பைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்பது உண்மையிலேயே பக்திரசம் நிரம்பிய சம்பிரதாய செயல். அம்மனின் மகிமைக்கு நிஜமான நிதர்சனம். ஒவ்வொரு ஆண்டும் உற்சவத்துக்கு முன்பாகவே ஆலய பிரதான பூஜாரியின் கனவில் தோன்றி தனக்குத் தேவையான சீரிமானு எனப்படும் மரக் கொம்பு எங்கே கிடைக்கும் என்பதை அம்மனே போதிப்பாள். அதன்படி எடுத்து அந்த மரத்திற்கு பூஜைகள் செய்வர். சிரினிமானுவிற்கு புளியமரத்தை மட்டுமே உபயோகிப்பர் என்பது விசேஷம். எடுத்து வந்த புளியங்கிளையை நிபுணர்களான தச்சர்களிடம் கொடுத்து அம்மனுக்கு அடையாளமாக மாற்றுவார்கள்.

இந்த உற்சவத்தில் முதலாவதாக விஜயதசமிக்குப் பின் வரும் முதல் திங்கட்கிழமை ‘தோலேலு’ உத்ஸவம் கொண்டாடப்படுகிறது. இது விவசாயிகளின் தொடர்பான பண்டிகை. சதுர்குடியிலிருந்து கலசங்களை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். மத்தியில் குரஜாட அபபாராவு அவர்களின் வீட்டிற்குச் சென்று அந்த குடும்பத்தாரின் நைவேத்தியத்தை ஏற்று அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உள்ளது. கலச ஊர்வலத்தில் தூப தீபங்களால் வேண்டுதல்களை பக்தர்கள் தீர்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் கலசங்களை சதுர்குடிக்கு கொண்டு சேர்ப்பார்கள். அன்று பூஜாரி அனைவருக்கும் தானியங்களை அளிப்பார். அவற்றை வயல்களில் தெளித்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தற்போதைய அரச வம்சத்தினர் பிறந்துவிட்டு சீராக புடவை ரவிக்கை வளையல் மஞ்சள் குங்குமம் பூ பழம் எல்லாம் கோட்டையில் இருந்து எடுத்து வந்து சதுர்குடியில் பைடிதல்லி அம்மனுக்கு சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.

அடுத்தநாள் சிரிமானோற்சவம். முன்பு மிருகபலி அளிக்கும் வழக்கம் இருந்தது. தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. துர்கா தேவியின் அம்சமாக போற்றப்படும் பைடிதல்லியை ஆகாயத்தில் ஊர்வலம் எடுத்து வரும் சம்பிரதாயமே சிரிமானோற்சவம்.

சுமார் 55 அடி நீளமான ‘சிரிமானு’ ரதத்தில் அம்மன் ஆவஹித்த பூஜாரி அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். அம்மனுக்கு சர்ப்பிக்க நினைத்த வாழைபப்ழ காணிக்கைகளை மேலே எறிந்து வேண்டுதலை தீர்த்துக் கொள்ளும் வித்தியாசமான வழக்கத்தை இங்கு மட்டுமே காண முடியும்.

யானை ஊர்வலத் திருவிழாவில் யானை வடிவில் செய்யப்பட்ட வண்டியில் ஆண் பெண் வேடமணிந்து பைடிதல்லியின் சகோதர சகோதரிகளாக அவர்களை அமர வைத்து அதனை ஊர்வலமாக எடுத்து வருவர்.

அஞ்சலி ரதம் என்னும் திருவிழாவில் அம்மனின் சிலையை நீரிலிருந்து எடுத்து வந்த வலைஞர்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. கோட்டையைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து கோயிலின் முன் மக்கள் தரிசித்துக் கொள்வார்கள்.

விஜயநகர வாசிகள் உலகில் எங்கிருந்தாலும் கட்டாயம் இந்த பண்டிகைக்கு வந்து தரிசித்துச் செல்வார்கள். வடக்கு ஆந்திர மக்கள் மட்டுமின்றி ஒரிசா கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டு அம்மனின் கருணையை பெற்றுச் செல்வார்கள்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version