― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்காரடையான் நோன்பு: பூஜை செய்வது எப்படி?! வழிமுறை, சுலோகங்களுடன்!

காரடையான் நோன்பு: பூஜை செய்வது எப்படி?! வழிமுறை, சுலோகங்களுடன்!

- Advertisement -

காரடையான் நோன்பு – 14.03.2020 சனிக்கிழமை
காலை 10.30 முதல் 11.30 மணி வரை!

காரடையான் நோன்பு – இதற்கு ஸாவித்ரி விரதம் என்று பெயர். பதி வ்ரதையான சாவித்ரி தேவி யமனிடமிருந்து தன் கணவனை மீட்டது இந்த நாளில்தான். மாசி மாதத்தில் உபநயனம் செய்து கொள்வதும், நோன்புக் கயிறு கட்டிக் கொள்வதும், புதிய திருமாங்கல்ய சரடு மாற்றிக் கொள்வதும் அனைத்து நன்மைகளையும் தரும்.

காரரிசியை மாவாக்கிப் புதிதாக விளையும் துவரையுடன் அடை தட்டிக் காமாக்ஷிக்கே நிவேதனம் செய்து, நோன்புச் சரடு கட்டிக் கொள்ளவேண்டும்.

ஸுமங்கலிப் பெண்கள் அன்று காலையிலிருந்தே மடியுடன் விரதமிருந்து இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும். முதலில் அரிசி மாவினால் கோலம் போட்டு குத்து விளக்கேற்ற வேண்டும். வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொரு வருக்கும் ஓர் இலை வீதம் எண்ணி, நுனி வாழை இலைகளாகக் கோலத்தின் மீது (இலையின் நுனி வடக்குப் பக்கம் இருக்குமாறு) போட வேண்டும். அந்த இலையின் நுனிப் பக்கத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப் பழம், சரடு (நடுவில் பூ கட்டி) இவைகளை வைக்க வேண்டும். இலையின் நடுவில் இரண்டு வெல்ல அடைகளும் வெண்ணையும் வைக்க வேண்டும்.

வயதானவர்கள் தங்கள் இலையில் அம்மனுக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒற்றைப் படையில் இலை வந்தால் ஒரு இலையை அதிகமாக்கி இரட்டைப்படையில் இலையைப் போட வேண்டும். பெண்கள் பெண் குழந்தைகள் எல்லோரும் ஒவ்வொரு இலைக்கு முன்பாகவும் ஒருவர் நின்றுகொண்டு ஜலத்தினால் மூன்று முறை இலையைச் சுற்றி கீழ்க்காணும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும்.

உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்.

பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு சரட்டினை அம்மனுக்குக் கட்டிவிட்டு மற்றொரு சரட்டினை ஸ்வாமி படத்தின் முன் நின்று தானும் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு குழந்தைகளுக்கும் அதேபோல் (ஸ்வாமி படத்துக்கு முன்னால் நின்று) சரட்டை கட்டிவிட வேண்டும். பிறகு அந்த அடையையே உட்கொள்ள வேண்டும்.

(அடையில் ஒன்றை தனது கணவருக்காக என தனியாக எடுத்து வைத்து கணவரிடம் கொடுக்கவும்) அதில் இரண்டு அடையை மறுநாள் பசுமாட்டுக்குக் கொடுக்க வேண்டும். இவ்விதம்
செய்யப்படும் நோன்பால் செய்பவருக்கும், கணவருக்கும் நீண்ட ஆயுளும், குடும்பத்தில் அமைதியும் ஏற்படும். இன்று முழுவதும் மோர் தவிர்ப்பது நல்லது.

நோன்பு சரடு கட்டிக்கொள்ள நல்ல நேரம்

14-03-2020 (வாக்யம்) சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.00 மணிக்குள் காரடையார் நோன்பு சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக்கொள்ள மந்திரம். (சுமங்கலிகள் உடல்நிலையை உத்தேசித்து உப்பு, காரமில்லாமல் நீராகாரம் எடுத்துக் கொள்ளலாம்.)

விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே, சிசிர ருதௌ மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் சுபதிதௌ ஸ்திர வாஸர, விசாகா நக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷன் நாம யோக தைத்துளை கரண ஏவங்குண சகல விசேஷேன வசிஷ்டாயாம் அஸ்யாம் பஞ்சம்யாம் சுபதிதௌ ஸ்ரீ காமாக்ஷி / சாவித்ரீ ப்ரஸாத ஸித்யர்த்தம்….

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுக்ஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா **
ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே!

மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக வ்ரதமிருந்து நான் எனது கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ ஸந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றம் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்.

சரடு கட்டிக்கொள்ளுதல்

பக்தப்ரியே மஹாதேவி ஸர்வைச்’வர்ய ப்ரதாயினி|
ஸூத்ரம் தே தாரயிஷ்யாமி மமாபீஷ்டம் ஸதா குரு||
(என்று சொல்லி சரடு கட்டிக்கொள்க)

அர்க்ய ப்ரதானம்

கங்காதி புண்யஸலிலை: நாநாகந்த ஸுவாஸிதை:|
அர்க்யம் தாஸ்யாமி வரதே க்ருஹாணேச்’ங்க ஹாரிணி ||

இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
(உத்தரணியில் ஜலம் எடுத்து கிண்ணத்தில் ஒரு முறை விடவும்)

உபாயன தானம்
பவான்யாச்’ச மஹாதேவ்யா: வ்ரதஸம்பூர்த்தி ஹேதவே |
ப்ரீதயே த்விஜவர்யாய வாயனம் ப்ரததாம்யஹம் ||
என்று சொல்லி பிராம்மணருக்கு தாம்பூல தக்ஷிணை அளிக்கவும். பிறகு சுவாஸினிப் பெண்களைப் பூஜித்து, பழம், தாம்பூலம் ஸமர்ப்பிக்கவும்.

|| ஸ்ரீ: ||

ஸ்வர்ண கௌரீ விரத மஹிமை

ஸூத பௌராணிகர் சொல்கிறார்:
இந்த விரதத்தைப்பற்றி ஸ்கந்த பகவான் சிவபெருமானை வினவ, பரமேசுவரன் அருளிச்செய்ததாவது:-

முன்னொரு காலத்தில் ஸரஸ்வதீநதிக் கரையில் விமலம் என்றொரு பட்டணமுண்டு. அங்கு சந்திரப்பிரபன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பட்டமஹிஷிகள் இருவர் உண்டு. அவர்களில் முதல் மனைவியிடம் அவனுக்கு ஆசை அதிகம்.

அவன் ஒருநாள் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அங்கு வெகுநேரம் வேட்டையாடியபின் களைப்புற்று, தண்ணீருள்ள ஒரு தடாகத்தைத் தேடியலைந்து சென்றான். அங்கே அப்ஸரப் பெண்கள் ஒரு விரதத்தை அனுஷ்டித்து வந்தார்கள். அவர்களை, ‘இது என்ன விரதம்?’ என்று கேட்க, அவர்களும் ‘இது ஸ்வர்ணகௌரீ விரதம்’ என்று பதிலுரைத்தனர்.

“இந்த விரதம் எப்போது எப்படிச் செய்யவேண்டும்? என்ன பயன்”? என்று அரசன் கேட்கஅவர்கள்; “ஆவணி மாதம் சுக்லபக்ஷ த்ருதீயையன்று இந்த விரததத்தை, கௌரீதேவியைக் குறித்து 16 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்; இதனால் சகல சுகமும் உண்டாகும்” என்றுசொல்லி அதன் முறையைக் கூறினார்கள்.

அவர்கள் கூறிய முறையை அரசன் அறிந்து, 16 முடிகள் உள்ள தோரகத்தை (சரட்டை) வலது கையில் கட்டிக் கொண்டான். பிறகு, விரதத்தை அங்கேயே அனுஷ்டித்து அரண்மனைக்கு வந்தான். அங்கு தன் மனைவிகளிடம் தான் செய்த கௌரீ விரத பூஜையைப் பற்றி விவரித்தான்.

இதைக் கேட்டுச் சினம் கொண்ட இவனுடைய முதல் மனைவி, அவன் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்து வெளியில் தோட்டத்திலிருந்த ஒரு உலர்ந்த மரத்தின்மீது எறிந்து விட்டாள். ஆனால், அந்தக் கயிறு தொட்ட மாத்திரத்தில் அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டாவது மனைவி வியப்பும் வெட்கமும் கொண்டு, ஓடிப்போய், அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே கணவனுக்கு மிகவும் அன்பு மனைவியாகி விட்டாள்.

முதல் மனைவியோவென்றால், தான் செய்த தவற்றுக் காகக் கணவனால் ஒதுக்கப்பட்டு வனம் சென்று, தேவியைத் துதித்துக் கொண்டு முனிவர்களின் ஆசிரமங்களில் சுற்றி வந்தாள். அங்கும் முனிவர்களால், “பாவியே! இங்கே தங்காதே” என்று விரட்டப்பட்டாள். பிறகு இங்குமங்கும் திரியும்போது ஒரு தடாகத்தைக் கண்டாள். அதன் கரையில் உள்ள மரத்தின்மீது
ஒரு அழகிய வனதேவதை பூஜை செய்வதைக் கண்டு அருகில் செல்ல, அவளும் இவளை அங்கிருந்து விரட்டினாள்.

ஆயினும், இவள் எந்த வேளையிலும் கௌரீ தேவியைத் தியானம் செய்துவந்த காரணத்தால், கௌரீ தேவி அருள்கூர்ந்து இவளுக்கு எதிரில் வந்து தரிசனம் தந்தாள்.

தேவியைப் பலவகையில் துதி செய்து, கௌரீ பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, தேவியின் அருளால் சௌபாக்ய வரம்பெற்று நாடு திரும்பினாள். அங்குக் கணவனால் அன்புடன் வரவேற்கப்பட்டு சகல சுகங்களையும் அனுபவித்து வந்தாள்.

எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண் களுக்குச் செல்வமும் சுகமும் வளரும், பகைவர் நீங்குவர், இவ்வுலகில் எல்லா போகங்களையும் அனுபவித்தபின் சிவ ஸாயுஜ்ய முக்தியும் இவர்களுக்கு ஏற்படும்.
(ஸ்காந்த புராணத்திலிருந்து)
ஸ்வர்ணகௌரீ விரத பூஜை முற்றிற்று.

புனர் பூஜை

பூஜை முடிந்த அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி,
“அஸ்மாத் பிம்பாத் ஸ்வர்ண கௌரீ தேவீம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி”|| க்ஷேமாய புனராகமனாய ச| – என்று கூறி, வடக்கு முகமாக ஸ்வர்ண கௌரீ விக்ரஹத்தை (படத்தை) நகர்த்தி வைக்கவும். பிறகு முறைப்படி த்யானம் ஆவாஹனம் செய்து, புஸ்தகத்தில் கூறப்பட்டது போல் பூஜை செய்யலாம்.

  • வேதிக் ரவி

ரவி சாஸ்திரிகள் (வேதிக் ரவி)
ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர்
12, கிஆப விஸ்வநாதன் தெரு, மாருதி நகர்,
ராஜகீழ்பாக்கம், சென்னை – 600 073.
போன் : 2227 2645 செல் : 98407 87957
E-mail : [email protected]
Web : www.vedicravi.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version