― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அட்சய திருதியை... அட்சயமான லாபம்…!

அட்சய திருதியை… அட்சயமான லாபம்…!

- Advertisement -
guperan

வைசாக மாதம் சுக்லபட்ச திருதியை திதி அட்சய திருதியையாக புகழ்பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் இன்றைய நாளுக்கு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு விதமாக இதனை கடைபிடித்த போதிலும் சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.

அட்சய திருதியை ஒவ்வொரு தெய்வத்தோடும் ஒவ்வொரு செயலோடும் சிறப்பாக தொடர்பு கொண்டுள்ளது. வைசாக மாதம் மிகவும் சக்தி வாய்ந்தது. வைசாக மாதம் தொடங்கிய மூன்றாம் நாளே அட்சய திருதியை பண்டிகை வருகிறது.

பிரத்தியேகமான 12 மாதங்களில் அந்தந்த மாதத்திற்கு அதனதன் சிறப்பு இருந்தாலும் 12 மாதங்களுக்கும் பன்னிரண்டு புராணங்கள் உள்ளன. எந்த மாதத்தில் எந்த தெய்வத்தை வழிபட்டால் எப்படிப்பட்ட பலன் பெறலாம் என்பதை கூறும் புராணங்கள் இவை.

இவற்றுள் வைசாக புராணம் வைசாக மாதத்தின் சிறப்பை விளக்குகிறது. இதுமட்டுமின்றி தர்ம சாஸ்திரம், மந்திர சாஸ்திரங்கள், யாகங்கள், யக்யகளிலும் வைசாக மாத சிறப்பு குறித்து பேசப்படுகிறது.

மாதங்களில் கார்த்திகை, சிராவணம், மாகம், வைசாகம்.. இவை அனைவரும் அறிந்த பவித்திரமான மாதங்கள். கார்த்திகை மாதம் தீபத்திற்கு, மாகம் ஸ்நானத்திற்கும் சிறப்பானவை. வைசாக மாதம் தானம் செய்வதற்குச் சிறந்த மாதம். அவற்றுள் திருதியை அன்று செய்யும் தானம் அட்சயமாக குறைவில்லாத பலனை அளிக்கவல்லது.

அதனால் அட்சய திருதியை வாங்குவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் ஆனது அல்ல. கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட மாதம். தியாகம், தானம் இவற்றுக்கான தினம் அட்சய திருதியை நாள்.

கிரக தோஷங்கள், முற்பிறவி பலனால் தற்போது அனுபவிக்கும் துயரங்கள் போன்றவற்றை போக்கிக் கொள்வதற்கான சிறந்த சாதனம் தானம்.

தானத்தால் துக்கங்களில் இருந்து வெளிப்பட முடியும்.

அடுத்ததாக ஜபம், ஹோமம் போன்றவையும் பலன் அளிக்கக்கூடியவை.

தானம் செய்வது என்னும் செயல் சமுதாய பொறுப்பை தெரிவிக்கிறது. சங்கல்பம் செய்துகொண்டு வேதப் பண்டிதர்களுக்கு கொடுக்கும் தானம் கிரக தோஷங்களை போக்கும். தயையோடு ஏழை, எளியவர்களுக்கு அளிக்கும் தானம் நற்பலன்களை அளிக்கும்.

இந்த இருவித தானங்களுக்கும் அட்சய திருதியை நாள் பெயர் பெற்று விளங்குகிறது.

அதோடு இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய சில கடமைகளையும் சாத்திரம் எடுத்துரைக்கிறது.

கிருஷ்ண பரமாத்மாவை சந்தனத்தால் லேபனம் செய்து (பூசி) பூஜை செய்வதால் இன்றைய தினம் விஷ்ணுவின் அருளைப் பெற்றுத்தரும் என்று தர்ம சாஸ்திரம் தெரிவிக்கிறது.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் எந்த வடிவத்தை பூஜித்தாலும் இப்பலன் கிட்டும். அதனால்தான் சிம்மாசலத்தில் உள்ள ஶ்ரீவராக லட்சுமி நரசிம்ம ஸ்வாமிக்கு சந்தனோத்சவம் செய்கிறார்கள். அது மட்டுமின்றி நாம் உபாசனை செய்யும் எந்த தெய்வ வடிவத்திற்கும் இன்றைய தினம் சந்தனம் பூசுவது சிறப்பான செயலாக கூறப்படுகிறது.

நரசிம்ம ஸ்வாமி என்றால் அக்னி தத்துவம் . வைசாக மாதம் என்றால் அடர்ந்த சூரிய ஒளி கிடைக்கும் மாதம். அதனால அக்னி தத்துவம் கொண்ட நரசிம்ம ஸ்வாமிக்குச் செய்யும் சந்தனப் பூச்சு, விஸ்வம் முழுவதும் வியாபித்துள்ள விஷ்ணுவுக்கு குளுமை அளிக்கிறது.
விசுவம் முழுமையாக குளுமை அடையும் என்பதால் நரசிம்ம ஸ்வாமிக்கு சந்தன உற்சவம் செய்யப்படுகிறது.

ஜபம், ஹோமம், பித்ரு தர்பணம், தானம் இவற்றை இன்றைய நாளில் செய்வதால் பலன் அட்சயமாக, குறைவின்றி கிடைக்கிறது.

நாம் உபதேசம் பெற்ற மந்திரத்தை, அட்சய பலன் பெறுவதற்காகவும், தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காகவும் சங்கல்பம் செய்துகொண்டு இன்றைய தினம் ஜபம் செய்வதால் சிறப்பான பலனை பெற முடியும்.

சிறிதளவு செய்தாலே குறைவில்லாத பலனை அளிப்பதால் இன்றைய திதிக்கு அட்சய திருதியை என்று பெயர்.

அதேபோல் ஹோமங்கள்…! தெய்வங்கள் தொடர்பாக செய்யும் ஹோமங்கள் தெய்வ அருளைப் பெற்றுத்தரும்.

தேவதைகளை மகிழ்விப்பதற்கு பூஜை, ஜபம் இவற்றோடு ஹோமத்திற்கும் முக்கிய இடமுள்ளது. ‘அக்னி முகாவை தேவாஹா’ என்று கூறியுள்ளார்கள். மனிதன் வாயிலிட்ட உணவு உடலுக்கு சக்தி அளிப்பது போல, அக்னியிலிட்ட ஆஹூதி தேவதைகளை சென்றடைவதால் இன்று செய்யும் ஹோமங்கள் அட்சயமான பலனை அளித்து தெய்வ அருளை குறைவின்றி பெறும்படி செய்யும்.

அடுத்து தானம். தகுதியுள்ள வேத பிராமணருக்குச் செய்யும் தானம், அனுஷ்டானம் செய்யும் சிரத்தை உள்ளவருக்குச் செய்யும் தானம், நிரந்தரம் இறை தொடர்பான மந்திரம் மற்றும் செயல்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும், இறைமய வாழ்வு வாழ்பவர்களுக்கும் செய்யும் தானம்… இவை கிரக தோஷங்களைப் போக்கும் பலனை. அளிக்கக் கூடியவை அதனால்தான் ‘பாத்திரமறிந்து தானம்’ செய்வது சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

ஏழை எளியவர்களுக்குச் செய்யும் தானத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானங்கள் வெயிலின் வெப்பத்தை கருத்தில் கொண்டு அளிக்கப்படவேண்டும். விசிறி, குடை, செருப்பு இவற்றோடு கூட ‘தச தான’ ங்களாக பத்துவித பொருள்கள் கூறப்படுகின்றன. தங்கம், வெள்ளி,ஆடை, பசு, பூமி… போன்றவற்றை அவரவர் சக்திக்கேற்ப தானம் செய்யலாம்.

பிரத்தியேகமான சங்கல்பத்துடன் யாரேனும் தம் இஷ்ட தெய்வத்திற்கான விரதங்களை இன்றைய நாளில் செய்தால் அதிக பலனைப் பெற முடியும்.

பித்ரு தர்ப்பணம் இன்று சிறப்பானது. இது முக்கியமான தேவையாக கூறப்படுகிறது. இதன் மூலம் பித்ருக்களுக்கு அட்சயமான புண்ணிய லோகங்கள் கிட்டும். தர்ப்பணம் செய்பவர்களுக்கு பித்ரு தேவதைகளின் அனுக்கிரகமும், தெய்வ அருளும் கிடைக்கும். அனைத்திற்கும் முக்கியமானது பித்ரு தேவதைகளின் அருள்தான். அதன் பிறகே தெய்வ அருள் என்பது சாஸ்திர வாக்கு.

வெயில் காலமானதால் வைசாக மாதத்தில் எல்லா நாட்களிலும் செய்யக்கூடிய செயல் ‘உத கும்ப’ தானம். இது பற்றி மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. தண்ணீர் நிரம்பிய குடத்தை தானம் அளிப்பது சிறப்பான பலனை அளிக்கக்கூடியது. இதுவே உதகும்ப தானம். உயிர்களின் தாகம் தீர்க்கும் செயல் இது. சாந்தி அளிக்கக்கூடியது.

ஒவ்வொரு ஜீவனுக்கும் மூன்று வித தாபங்கள் உண்டு. ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம், ஆதி தெய்விகம். இந்த மூன்று தாபங்களும் அமைதி பெற்றால் அதுவே மோட்சம்.

அதனால்தான் சாந்தி, சாந்தி, சாந்திஹி என்று மூன்று முறைய மந்திரம் கூறுகிறோம்.

அதனால் தாக சாந்திக்காக நீர்க் குடங்களை தானம் அளிப்பது சிறந்தது.

ஜீவன் உடலைத் துறந்து பயணிக்கையில் அதிகம் துன்புறுவது தாகத்தால் தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து புராணங்கள் வர்ணித்துள்ளன. அந்த நிலைமை மரணத்திற்குப் பின்புதான் தெரிய வரும். உயிரோடு இருப்பவருக்குப் புரியாது. சாஸ்திரம் மூலம் அறியவேண்டும். அத்தகைய தாபத்தைப் போக்கும் சக்தி உதகும்ப தானத்தில் உள்ளது. அது பித்ருக்களுக்கு மட்டுமல்லாமல், உயிரோடு இருக்கும் போதே உதகும்ப தானம், குளிர்ந்த நீர் தானம் அளிக்கும் மனிதருக்கும் மரணத்திற்குப்பின் உத்தமமான நிலையும் சாந்தியும் கிடைக்கும் என்று நம் புராணங்கள் எடுத்து இயம்புகின்றன. இவை மிகவும் ஆழமான விஷயங்கள். இவற்றை எளிதாக எடுத்து எறிவதற்கு இல்லை.

இன்று சமுத்திர ஸ்நானத்திற்கு கூட சிறப்பு உள்ளது. தானம் எத்தனை சிறந்ததோ ஸ்நானமும் கூட அதே போல் உயர்ந்ததே. இன்றைய திதியில் சங்கல்பத்தோடு தீர்த்த ஸ்நானம், சமுத்திர ஸ்நானம் செய்வதால் அட்சயமான பலன் கிடைக்கும்.

தீட்சையோடு இருப்பவர்கள் உபவாசம் விரதம், நக்த விரதம் போன்றவற்றிற்கு இன்று முக்கியத்துவம் அளிப்பார்கள். நக்த விரதம் என்றால் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷ வேளையில் சிவ பூஜை செய்து நிவேதனம் செய்த பிரசாதத்தை ஏற்று உபவாசத்தை பூர்த்தி செய்வது.

இன்று இன்னுமொரு சிறப்பு பரசுராமர் ஜெயந்தி.

இன்றைக்கு பரசுராமருக்கு அர்க்கியம் அளிப்பது சிறப்பான செயலாக கூறப்படுகிறது. பரசுராமர் ஆவேசாவதாரம் என்று போற்றப்படுகிறார். இவர் ஜமதக்னி முனிவரின் புதல்வர்.

parasuram

தவ சக்தியால் விஷ்ணுவின் இரண்டு கலைகள் பரசுராமரிடம் ஆவேசித்தன. லோக கல்யாணத்திற்காக துஷ்ட சக்திகளை அழித்தார். பின், நாராயணன் ராமாவதாரம் எடுத்தபோது சீதாராம கல்யாணத்திற்குப் பின் பரசுராமர் தன் வைஷ்ணவ தனுசை கொடுக்கும் சந்தர்ப்பத்தில் அவ்விரண்டு கலைகளையும் இராமருக்கு கொடுக்கும் விதமாக விஷ்ணுவிடம் சேர்ப்பித்தார்.

அதன்பின் பரசுராமர் மகரிஷியாக மட்டுமே விளங்கினார். பரசுராம மகரிஷி பாரத தேச கலாசாரத்திற்குச் செய்த உபகாரம் மிக அதிகம்.

பரசுராமருக்கும் தத்தாத்தரேயருக்கும் நடந்த சம்வாதம் திரிபுரா ரகசியம் என்னும் ஞான நூலாக கிடைக்கிறது. இது அம்பாள் உபாசனைக்கு அவசியமான மிக உயர்ந்த நூல்.

அதேபோல் பரசுராம கல்ப சூத்திரங்கள் என்ற பெயரில் ஸ்ரீவித்யா ஆகமங்களை கூட பரசுராமர் படைத்துள்ளார்.

துர்வாசர், பரசுராமர் போன்றோர் அம்பிகை உபாசகர்களில் சிறந்தவர்கள். தத்துவத்தின்படி தேவி உபாசனையை எடுத்து விளக்கியவர்கள்.

இந்த விபரங்களை பகவான் ஸ்ரீரமண மகரிஷி, காவிய கண்ட கணபதி முனி போன்றவர்கள் தவச் சக்தியால் கிரகித்து எடுத்துரைத்துள்ளார்.

குறிப்பாக பரசுராமரின் பிறப்புக் கதையிலேயே ஸ்ரீவித்யா தத்துவம் மறைந்து உள்ளது என்று கூறப்படுகிறது.

வைசாக சுத்த திருதியை ‘தாருணா ராத்ரி’ எனப்படுகிறது. இன்று இரவு கடைபிடிக்கும் விரதத்திற்கு சிறப்பு உள்ளது. பகல் முழுவதும் நியமத்தோடு இருந்து இரவு நேரத்தில் அம்பாளை வழிபட்டால் சிறந்த பலனை அருள்வாள். நவராத்திரியில் அஷ்டமி, நவமி மற்றும் தீபாவளி போன்றவற்றைப் போலவே அட்சய திருதியை அன்று இரவுக்குக் கூட அத்தகைய முக்கியத்துவம் உள்ளது.

இதை மனதில் கொண்டு தாருணா ராத்திரி விரதத்தை கடைபிடித்தால் தாருணங்கள் நீங்கும். முற்பிறவியின் தீய பலன்களே தாருணங்கள்.
சாதகர்கள் இன்று இதனை நன்கு பயன்படுத்தி நற்பலன் பெற முடியும்.

சாதனைக்கான நாள் இது. செல்வத்திற்காக வந்த நாள் அல்ல என்பதை ஆன்மீக அன்பர்கள் அறியவேண்டும்.

சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் மீது தாராபாத்திரம் இருக்கும். அதிலிருந்து இடைவிடாது ‘சந்தத தாரை’ யாக அபிஷேகம் நிகழும்.

வைசாக மாதம் முழுவதும் சந்தத தாரை நிகழும் விதமாக தாராபாத்திரம் அமைத்துக் கொடுப்பதன்மூலம் அந்த ஊரிலும் அந்த நாட்டிலும் வறட்சியோ பஞ்சமோ ஏற்படாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

அட்சய திருதியை அன்று சிவபெருமானுக்கு அட்சய தாரையாக அகண்ட அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு .

இளநீர், வெட்டி வேர் சேர்த்த குளிர்ந்த நீர்,சந்தன நீர் … இவற்றால் சிவாபிஷேகம் செய்வது சிறப்பானது. பலனை எதிர்பார்த்து அபிஷேகம் செய்பவர்கள் சந்தத தாரையாக, இடைவிடாது பொழியும்படி செய்வது சிறப்பு.

தாபம், வேதனை, கவலை, வருத்தம், திகில் இவை அனைத்தும் அக்னி தத்துவத்தோடு. தொடர்புடையவை இவை நீங்கி அமைதி கிடைக்க வேண்டும் என்றால் அட்சய திருதியை பண்டிகையை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலன் பெற வேண்டும்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.
தமிழில்: ராஜி ரகுநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version