Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 12)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 12)

கு.வை. பாலசுப்பிரமணியம்

விநாயகர் நான்மணிமாலைபகுதி 12

பாடல் 12 – அகவல்

சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்

பல்லுருவாகிப் படர்ந்த வான் பொருளை,

உள்ளுயிராகி உலகங் காக்கும்

சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை,

சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப் 5

பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,

ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,

சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று,

யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,

யார்க்கும் அன்பனாய், யார்க்கும் மினியனாய், 10

வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீ யிதை

ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை

சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க்கெல்லாம்

கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,

தேறித் தேறி, நான் சித்திபெற்றிடவே, 15

நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,

பொன்னா லுனக் கொரு கோயில் புனைவேன்;

மனமே, எனை நீ வாழ்த்திடுவாய்

வீணே உழலுதல் வேண்டா,

சக்திகுமாரன் சரண் புகழ்வாயே. 20

பொருள் – விநாயகா உன் புகழைச் சொல்லால் சொல்லிவிட முடியுமா? முடியாது ஏனெனில் அது சொல்லிற்குரியது. சூழ்ச்சிகளில் உன்னை சிக்க வைக்க இயலாது ஏனெனில் நீ சூழ்ச்சிக் கரியன். நீ இந்த உலகில் பல உருவங்கள் கொண்ட பல்லுயிர்களாய் வாழ்கின்றவன். ஒவ்வொரு உயிரிலும் உள்ளுயிராகி உலகத்தைக் காப்பாற்றுகின்ற சக்தியாக விளங்குபவன். நீயே ஒரு தனிச்சுடர்ப் பொருள்; சக்திகுமாரன். அந்த பிறைசூடி சிவபெருமானினைப் பணிந்து பழம் பெற்றவன் அல்லவா நீ. ஓம் என்னும் வடிவத்தில் இருப்பவனே, நீ சக்தியை காக்கும் தந்திரம் பயின்றவன் நீ. அனைவருக்கும் எளியவனாக இருந்து, வலியவனாகவும் இருந்து, அன்பனாகவும் இனியவனாகவும் இருந்து வாழ நான் விரும்புகிறேன். 

 ஓ என் நெஞ்சே! நீ இப்பெருமகனின் புகழை மனதில் கருதி, ஆய்ந்தாய்ந்து, பல முறை தொழுது, மனத்தெளிவு பெற்று, பின்னர் உன்னைச் சூழ்ந்தோர்க் கெல்லாம் அவர் பெருமையைக் மீண்டும் மீண்டும் கூறி, குறைவின்றி அவரை அறிந்துகொண்டு நான் எல்லாச் சித்திகளும் பெற உதவி செய்தாய் எனில் உனக்கு ஒரு கோயில் கட்டிக் கும்ம்பிடுவேன். என் நெஞ்சே என்னை வாழ்த்துவாயாக. வீணாக மனக்குழப்பத்தில் ஆழ்ந்திட வேண்டாம், சக்திகுமாரன் விநாயகன் புகழ் பாடுவாயாக.  

பாடல் ‘சொல்’ எனத் தொடங்கி ‘புகழ்வாயே’ என முடிகிறது.

அட்டமா சித்திகள்

 நான் எல்லா சித்திகளையும் பெறவேண்டும் என்று பாரதியார் கூறும்போது அட்ட மகா சித்திகள் பற்றிக் கூறுகிறார். அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.

                             அனி மாதி சித்திகளானவை கூறில்

                             அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை

                             வேகார் பரகாய மேவல்

                             அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.

(திருமூலர்–திருமந்திரம்-668வது பாடல்)

               அட்டமா சித்திகள் விளக்க முற்பட்டால், அணிமா என்பது அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்; மகிமா என்றால் மலையைப் போல் பெரிதாதல்; இலகிமா என்றால் காற்றைப் போல் இலேசாய் இருத்தல்; கரிமா என்பது கனமாவது, அதாவது மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்; பிராப்தி என்றால் எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல் அதாவது மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்; பிராகாமியம் என்பது தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்); ஈசத்துவம் என்பது நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். வசித்துவம் என்றால் அனைத்தையும் வசப்படுத்தல். இதனை விளக்குகின்ற ஒரு பாடல் சிவதருமோத்திரம் என்ற நூலில் ஒரு பாடலில் உள்ளது. அந்தப் பாடல்

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்

               அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,

திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,

               சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,

பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை

               பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி

மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை

               வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

என்பதாகும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version