Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 13)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 13)

இகழ்வோமே புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண் வல்லபை கோன் தந்த வரம்.

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 13
விளக்கம்: கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் 13 – வெண்பா

புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே – இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண்
வல்லபை கோன் தந்த வரம்.

பொருள் – நாம் அனைவரும் கணங்களின் அதிபதியான விநாயகனின் பாதக் கமலங்களைப் பணிவோம். அதனால் நாமது புகழ் நாள்தோறும் வளரும். தீய குணமுள்ள பாதகர்களின் பொய்யினை நாம் இகழ்வோம். இதுதான் வல்லபையை தன் மடியில் இருத்திக்கொண்டுள்ள விநாயகன் தரும் வரமாகும்.
பாடல் ‘புகழ்’ எனத் தொடங்கி ‘வரம்’ என முடிகிறது.

விநாயகர் கணங்களின் அதிபதி. அதனால்தான் அவர் ‘கணபதி’ என அழைக்கப்படிகிறார். கணங்கள் பதினெட்டு ஆகும். அவையாவன: (1) சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், (2) தேவர்கள், (3) அரம்பையர்கள், (4) அசுரர்கள், (5) தானவர்கள் (6) தைத்தியர்கள், (7) நாகர்கள், (8) கருடர்கள் (9) கின்னரர்கள், (10) கிம்புருசர்கள், (11) யட்சர்கள் & யட்சினிகள், (12) வித்தியாதரர்கள், (13) அரக்கர், (14) கந்தர்வர்கள், (15) சித்தர்கள் (16) சாரணர்கள், (17) பூத கணங்கள் (18) பிசாசர்கள் ஆகியோர் ஆவர்

பாடல் 14 – கலித்துறை

வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலமை விருப்பமுமையமுங் காய்ந்தெறிந்து
சிரமீது நங்கள் கணபதி தாண்மலர் சேர்தெமக்குத்
தரமேகொல்வானவர் என்றுளத்தேகளிசார்ந் ததுவே

பொருள் – கணபதியை வணங்கினால் நமக்கிக் கிடைக்கும் வரம் என்ன என்பதைக் காண்போம். கணபதியின் திருவடியில் மலர் சேர்த்து வணங்கினால் கவலையும் வஞ்சனையும் மறையும்; புலமை விருப்பமும் அமையும்; வானுலகில் வாழும் தேவர்கள் நமக்கு ஈடாக மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையை நாம் அடைவோம். நம் உள்ளம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.
பாடல் ‘வரம்’ எனத் தொடங்கி ‘சார்ந்ததுவே’ என முடிகிறது.

பாடல் 15 – விருத்தம்

சார்ந்து நிற்பா யெனதுளமே, சலமுங்கரவுஞ் சஞ்சலமும்
பேர்ந்து பரம சிவானந்தர் பேற்றை நாடி,நாடோறும்
ஆர்த்த வேதப் பொருள் காட்டும் ஐயன்,சக்திதலைப்பிள்ளை,
கூர்த்த விடர்கள் போக்கிடு நங் கோமான் பாதக் குளிர் நிழலே.

பொருள் – ஓ நெஞ்சமே கணபதின் பாதக் குளிர் நிழலைச் சார்ந்து நிற்பாயாக. அவ்வாறு சார்ந்து நின்றால் நம்மிடையே இருக்கும் தணியாத கோபமும் (சலம்) வஞ்சனையும் (கரவு) மனக்குழப்பமும் நீங்கும். பரமசிவனின் அருட்பேற்றை உடைய கணபதி நமக்கு வேதங்கள் சொல்லிய உண்மைப் பொருளை காட்டுவான். அன்னை சக்தியின் தலைப்பிள்ளையாகிய அவன் நம்முடைய துன்பங்களை எல்லாம் போக்கிடுவான்.
பாடல் ‘சார்ந்து’ எனத் தொடங்கி ‘நிழலே’ என முடிகிறது.

பாடல் 16 – அகவல்

நிழலினும் வெயிலினு நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினு மபாயந் தவிர்த்து
மண்ணினுங் காற்றினும் வானினு மெனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
உள்ளத்தோங்க நோக்குறும் விழியும் 5
மௌன வாயும் வரந்தரு கையும்
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ்பதியும் பிரமனும் யாவுந் 10
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள் 15
ஏழையர்க் கெல்லாம் மிறங்கும் பிள்ளை
வாழும்பிள்ளை மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே 20

பொருள் – நிழலிலும் வெயிலிலும் எங்களுக்கு வாய்க்கின்ற ஓர் நற்றுணையாக வருபவர்; நெருப்பிலும் நீரிலும் ஏற்படும் அபாயங்களைத் தவிர்ப்பவர்; இந்த நிலத்திலும், காற்றிலும், அந்த வானத்திலும் (bio-sphere, atmosphere and outer space) எனக்கு எதிரிகள் ஏற்படுமோ என்ற பயத்தைப் போக்குபவர் விநாயகர்.

மனதிலே நிலைபெற்று விளங்கும் பெற்றியை உடைய கண்கள் கொண்டவர், எப்போதும் மௌனமாக இருப்பவர், வரத்தினைத் தருகிற கையை உடையவர் நம்முடைய விநாயகப் பெருமான் நம்முடைய உணர்விலே நிற்பவர். ஓம் என்ற நிலையில் ஒளியாகத் திகழ்பவர்; வேதமறிந்த முனிவர்கள் எல்லாம் கூறிய தேவகுரு, நான்முகக்கடவுள் எல்லாம் அவனே; அவனே தனி முதற் கடவுள். பற்றற்றவர்களின் ஞானமாகத் திகழ்பவன்; முக்தி நிலைக்கு மூலவித்து; சக்தி எனவும் உண்மை எனவும் நான்கு மறை கற்ற முனிவர்கள் நித்தமும் போற்றுகின்ற நிமலமான கடவுள் அவர்.

ஏழை எளியோருக்கு இரக்கத்தோடு அருள்கின்ற பிள்ளை அவர்; மணகுளப்பிள்ளையாராக வாழ்கின்ற பிள்ளை அவர். வெள்ளை நிற ஆடை அணிகின்ற திருமால அவர்; அந்தத் தேவனை முப்பொழுதும் பணிவதுதான் நாம் செய்ய வேண்டிய பணியாகும்.

பாடல் ‘நிழலினும்’ எனத் தொடங்கி ‘முறையே’ என முடிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 3 =

Translate »