Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 30)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 30)

manakkula vinayakar

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 30
விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆளுமைகளுள் ஒன்றான மனம் சார்ந்த ஆளுமையை வளர்த்துக் கொள்ளும்பொழுது, அதற்கு முக்கியத் தடையாக இருப்பது மன அழுத்தம். அதைத் தகர்க்க வேண்டியது, தவிர்க்க வேண்டியது ஒருவர் முழுமையான ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் இன்றியமையாதது.கல்லாடர் என்ற புலவர்,

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி என்று.

எனப்பாடுவார். திருக்குறள்எனப்படும்அந்த ”அமுத மொழியில்” எல்லாப் பொருளும் உள, இல்லாத எப்பொருளும் இல்லையல்லவா?மனிதன் தன் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது; சமாளிக்க வேண்டியிருக்கிறது.

இரத்த அழுத்தம். பண அழுத்தம், மன அழுத்தம், காற்று அழுத்தம். நெஞ்சழுத்தம்ஆகியவை. அதில் அதிகமாக மனிதனை வாட்டியெடுப்பது அவனது ’மன அழுத்தம்’. ஆங்கிலத்தில் “STRESS” என்றும் அதைச் சமாளித்தலை “STRESS MANAGEMENT” என்றும் தலைப்பிட்டு, எந்த நிலை ஆளுமை வளர்ச்சிப் பயிலரங்கத்திலும், உரை அரங்கத்திலும், வகுப்புக்களிலும் கையாளப்பட்டு வருவது. இதனைக் கையாளுவது எப்படி என்பது பற்றி திருவள்ளுவர் தம் திருக்குறளில் எடுத்துரைத்துள்ளார்.

அழுத்தம் என்றால் என்ன? மன அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி, எப்போது, ஏன் ஏற்படுகிறது? அந்த அழுத்தம் ஒரு மனிதனை என்ன செய்கிறது? அதை எப்படிச் சமாளிப்பது? அதற்கு மருந்து எந்த மருத்துவர் கொடுப்பார், எந்தக் கடையில் கிடைக்கும்? இப்படியெல்லாம் நீங்களும் யோசித்திருக்கலாம்.அது என்ன மனக்கவலை? அதற்கும் மன அழுத்தத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ன தொடர்பு, உறவு? அதை மாற்றுதல் அரிது என்று எல்லாம் உணர்ந்த, முற்றும் உணர்ந்த திருவள்ளுவப் பெருந்தகை ஏன் கூறினார்? அதற்கு என்ன மாற்று சொல்லியிருக்கிறார் என்பதையும் சற்று பார்ப்போம்.

மன அழுத்தம் என்பது இருவகைப் படும் என்பார்கள். மூளையின் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சூழலினால் ஏற்படும் நியூராட்டிக் (Neurotic) மன அழுத்தம்.. இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பொதுவாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய காரணங்கள்.. எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.

விரைந்து செல்லும் இந்த வேடிக்கையான உலகில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் இந்த மன அழுத்தம் தாக்கி துன்புறுத்துகிறது.மூன்று வயதுக் குழந்தைக்குப் அதிகாலையில் எழுந்திருப்பது, பள்ளிக்குச்செல்வது, அவசரமாகச்சாப்பிடுவது, ஆகியனமன அழுத்தத்தைத் தருகிறது. பெற்றோர்களுக்குக் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளனர் என்று கண்டு கொள்ளவோ, அதனைச் சரிசெய்யவோ மனமும் இல்லை, நேரமும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில் வளர்ந்து பெரியவர்களான பிறகு, பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, தொடர்ந்து வேலைக்குச் செல்லுதல், வேலையில் இடமாற்றம், பணி மாற்றம், பணி உயர்வு, பணியிலிருந்து ஓய்வு, முதுமை நோய், முதுமை வாழ்க்கை இப்படி ஒவ்வொரு நிலையிலும் மன அழுத்தம்!

நாம் இருக்கும் இந்த பிஸியான உலகில் stress எனப்படும் இந்த மன அழுத்தம் நமது வாழ்வில் அன்றாட சோதனையாக மாறிவிட்டது. கடன், வேலையின்மை, குடும்பத்தில் பிரச்சினைகள், பள்ளியில் பரீட்சை போன்றவை நமக்கு மன அழுத்தத்தை தருகின்றன.. ஆனால், இந்த மன அழுத்தம் நம்மையும் நமது உடலையும் பாதிக்கின்றது என்பது இன்னும் வேதனை. இதனால் சிலரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடுகிறது..

ஆனால், மன அழுத்தம் அன்றாட வாழ்க்கையில் தொடரும்பொழுது, அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட திடீரென்று மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் காரணமாக இறந்து விடுகிறார்கள். இதை ஆய்ந்தவர்கள் இந்த நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்..

அதற்காக அச்சப்படத் தேவையில்லை. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதுதான், நேசம், பாசம் அன்பு, சந்தோஷம் போன்றவைஆகும். ஆகவே, மன அழுத்தம் உள்ள நேரத்தில் நாம் நமக்குப் பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டோ, பிடித்த வேலையில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தோம் என்றால் மன அழுத்தம் குறையும்.சரி. மன அழுத்தத்தை நிர்வகிப்பது எப்படி?வள்ளுவன் சொற்படி மன அழுத்தம் உள்ள ஒவ்வொருவரும்

”நோய் நாடி, நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

புரிய வேண்டும். மனக்கவலை அல்லதுமன அழுத்தம் பற்றி நாளை மேலும் காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version