திருப்புகழ் கதைகள்: திருப்புகழில் ராமாயணம்!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 61
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

திருப்புகழில் இராமாயணம்
ஆரண்ய காண்டத்தில் சில காட்சிகளை அருணகிரியார் தமது 961ஆவது திருப்புகழான புருவ செஞ்சிலை எனத் தொடங்கும் திருப்புகழில் சொல்லுகிறார்.

திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்
சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி …… சிரனோடு

திரமிற் றங்கிய கும்பக னொருபது
தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு
சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் …… மருகோனே
திருப்புகழ் 961 புருவச் செஞ்சிலை (மதுரை)

லக்ஷ்மியாகிய சீதையை அழைத்துக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியம் என்னும் காட்டில் வந்த பொழுது, பயத்தோடு வந்து உலவிய (மாரீசனாகிய) பொன்மானின் உடல் பாணத்தால் சிதறி அழியவும்,

துஷ்டர்களான கொடிய கரன், திரிசிரன் என்னும் அசுரர்களையும், வலிமை கொண்டிருந்த கும்பகர்ணனையும், பத்துத் தலைகளைப் பெற்று தேவர்களை வென்றவனுமான ராவணனையும், (கோதண்டம் என்னும்) வில்லால் கொன்ற திருமாலின் நல்ல உள்ளம் மகிழ்கின்ற மருகனே – என மீதமுள்ள இராமாயணக் கதையை இப்பாடலில் பாடியுள்ளார்.

இந்தச் சம்பவங்களை மற்றொரு திருப்புகழில் மீண்டும் ஒருமுறை அருணகிரியார் பாடியுள்ளார். தண்டகவனத்தில் சூர்ப்பணகை, சீதையைத் தீண்ட முயன்றாள். அப்போது அங்கு வந்த லட்சுமணன், சூர்ப்பணகையின் மூக்கையும், காதுகளையும் சிதைத்தான். சூர்ப்பணகைக்கு உதவியாகப் பெரும்படைகளுடன் வந்த கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோர், ராமரால் கொல்லப்பட்டனர். அதன்பின் சூர்ப்பணகை, ராவணனிடம் போய் சீதையின் அழகை வர்ணித்தாள். அதன் விளைவாக ராவணன், சீதையிடம் மையல் கொண்டான்.

supramanian

மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி …… முழுமோடி
மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு …. முகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் …… மருகோனே
திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு (திருத்தணிகை)

மூக்கு அறுபட்டவளும், அறிவில்லாதவளும், பெரும் வலிமையுள்ளவளும், ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக இருந்தவளும், சூர்ப்பநகையென்ற பெயருடன், மூளியான கொடியவளும், அவமதிக்கத் தக்கவளும், மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில் பிறந்தவளும், விபீஷணருக்கு சகோதரியும், முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை, அண்ணனும் அரக்கனுமான ராவணனிடம் சென்று சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட்டாள்.

தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக் கவர்ந்து ஒற்றைத் தேரிலே வைத்து மேகமண்டலம் சென்று, பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில் (அசோகவனத்தில்) சிறை வைத்தான்.

அப்போது, அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப் போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமனின் மருமகனே என அருணகிரியார் ஆரண்ய காண்ட, கிட்கிந்தா காண்ட, யுத்த காண்ட நிகழ்ச்சிகளை அழகுறப் பாடியுள்ளார்.

கரன், திரிசரன், தூஷணன் ஆகியோர் சூர்ப்பனகையின் சகோதரர்கள். இவர்களைப் பற்றி அருணகிரியார் பல திருப்புகழ் பாடல்களில் பாடியுள்ளார். அது போல இராவணனைப் பற்றியும் பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றை நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,101FansLike
379FollowersFollow
74FollowersFollow
0FollowersFollow
3,890FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version