
இந்தியா ஆஸ்திரேலியாமூன்றாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானம், 22.03.2023
ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது
ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன் (மிட்சல் மார்ஷ் 47, அலக்ஸ் கேரி 38, ஹெட் 33, லபுசேன் 28, ஸ்டொயினிஸ் 25, அப்பாட் 26, பாண்ட்யா 3/44, குல்தீப் 3/56, அக்சர் படேல் 2/57, ஷமி 2/37) இந்திய அணியை (49.1 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட், கோலி 54, பாண்ட்யா 40, கில் 37, ரோஹித் 30, ஆடம் சாம்பா 4/45, அகர் 2/42) 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஸ்டீவன் ஸ்மித் தவிர அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடினர். அனைவரும் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர்.
தொடக்க வீரர்கள் ஹெட் (33 ரன்), மார்ஷ் (47 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். ஹார்திக் பாண்ட்யாவின் முதல் மூன்று ஓவர்களில் முதலில் ஹெட், பின்னர் ஸ்மித், அதன் பின்னர் மார்ஷ் என மூவரும் ஆட்டமிழந்தனர். அதனால் ஆட்டம் இந்திய அணியின் கைக்கு வந்தது.
அதன் பின்னர் குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கி வார்னர் (23), லபுசேன் (28), அலக்ஸ் கேரி (38) ஆட்டமிழந்தனர். சீயன் அப்போட் (26 ரன்), அக்சர் படேல் பந்திலும் ஆஷ்டன் அகர் (17 ரன்) மற்றும் ஸ்டார்க் (10) இருவரும் சிராஜ் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (30 ரன்), சுப்மன் கில் (37 ரன்) நன்றாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். அதன் பின்னர் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் இணைந்து நன்றாக விளையாடினார்கள். சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் இந்த போட்டியிலும் அவுட்டானார்.
முக்கியமான தருணங்களில் ராகுல், கோலி, பாண்ட்யா, ஜதேஜா ஆகியோர் ஆட்டமிழக்கவே இந்தியா வெற்றிவாய்ப்பை இழந்தது.
ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஆடம் சாம்பா வும் தொடர் நாயகனாக மிட்சல் ஸ்டார்க்கும் அறிவிக்கப்பட்டனர்.