
கெளரி கல்யாணம் வைபோகமே! ஒரு ஆரவாரம் இல்லை, சத்தமில்லை, களேபரமில்லை, பேனர் இல்லை, மாபெரும் பந்தல் இல்லை, நாள் கணக்கில் விருந்து இல்லை, மாபெரும் தலைவர்கள் வரவில்லை…. இப்படி எத்தனையோ இல்லை இல்லை இல்லை ரகம்தான்! ஆனால் ஒரு மங்கல நிகழ்வுக்கான அனைத்தும் அங்கே நிறைந்திருந்தது.
இவ்வளவுக்கும் அவருக்கு அப்பெண் ஒரே மகள்தான். நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இல்ல திருமணம் பற்றிய பதிவினைத்தான் பலரும் வியந்து போய் சமூகத் தளங்களில் இன்று பதிவிட்டு வருகிறார்கள்.
நிர்மலா சீதாராமனின் ஒரே மகள் ப்ரகலா வாங்மயிக்கும் ப்ரதீக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெங்களூர் தனியார் ஹோட்டலில் ஜூன் 7ம் தேதி புதன்கிழமை நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண வைபவத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்ட உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்தர் சுவாமிகள் மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். அரசியல் வாடையே இல்லாமல் எளிமையிலும் எளிமையாக இந்தத் திருமணம் ஆன்மிக முக்கியத்துவத்துடன் நடைப் பெற்றுள்ளது பலரையும் வாய்பிளந்து பார்க்க வைத்துள்ளது.
திருச்சியின் செல்லமகளான நிர்மலா சீதாராமனின் செல்ல மகளுக்கு நடந்த திருமணம் பற்றி சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ள பலரும் தங்களது ஆசிகளையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
உலகின் மிக சக்திவாய்ந்த ஒரு நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஒரே மகளின் திருமணம் நேற்று பெங்களூரில் நடந்தது. தலைவர்கள் இல்லை, தொழில்அதிபர்கள் இல்லை, மேடை அலங்காரம் இல்லை. (கவனிக்க ஜமக்காளம், பின்புறம் தொங்கும் பூச்சரம் .. ) முக்கியமாக குத்து டான்ஸ் இல்லை, லெக்கிங்ஸ் போட்ட மாமிகள் இல்லை, பெர்முடாஸ் , டீ சர்ட் மாமாக்கள் இல்லை.. பாழ் நெற்றி, தலைவிரி கோலத்தில் லெஹங்காக்குள் (உரலுக்கு உரை போட்ட மாதிரி) திரியும் ஐடி மகள், மாட்டுப்பெண்கள் இல்லை… இரண்டு அகத்து வாத்தியார்.. அப்புறம் அந்த உடுப்பியோ, சிருங்கேரி மடாதிபதியோ அனுப்பிய வஸ்திரம்… ஓதி இடறதுகூட இருந்திருக்காது! – என்று ஒருவர் ஆச்சரியத்துடன் பதிவு செய்திருந்தார்.