Home அடடே... அப்படியா? வர்தாவின் கீதாயி மந்திர் !

வர்தாவின் கீதாயி மந்திர் !

geethayi-mandir
geethayi mandir கீதாயி மந்திரின் நுழைவுவாயில்

கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

“கீதாயி- என் அன்னை. நான் விழும் போதும், அழும் போதும் என்னை அவள் கவனித்துக் கொள்வாள்,” என்ற விநாயக் நரஹரி பாவே என்னும் ஆசார்ய வினோபா பாவே அவர்களின் வாசகங்களே பார்வையாளர்களை வர்தாவில் உள்ள கீதாயி மந்திரில் வரவேற்கின்றன.

1930-ம் ஆண்டு, தன்னுடைய அன்னை ருக்மிணிதேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக வினோபா பாவே பகவத் கீதாவை மராட்டியில் கீதாயி ( கீதா+ஆயி =கீதை அன்னை) மொழிப்பெயர்க்க முடிவெடித்தார். இரண்டு ஆண்டுகளில் வினோபா பாவே தன்னுடைய மொழிப்பெயர்ப்பை முடித்தார். கீதாயி- யின் முதல் பதிப்பை காந்தியின் அபிமானியான ஜம்னாலால் பஜாஜ் 1932-ம் வருடம் வெளியிட்டார்.

ஷீகாகண்ட் கற்களில் பொறிக்கப்பட்டுள்ள கீதாயின் ஸ்லோகங்கள்

லேட் கமல்நயன் பஜாஜ் தன்னுடைய குருவான வினோபா பாவேவின் கீதாயிக்காக ஒரு நினைவுச்சின்னம் எழுப்ப விழைந்தார். அந்த நினைவுச்சின்னமானது காந்தியடிகள், வினோபா பாவே மற்றும் ஜம்னாலால் பஜாஜ் அவர்களது தத்துவங்களை பறைச்சாற்றும் விதமாக எளிமையான, புனிதமான, அழகானதாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
புதுதில்லியின் கமல்நயன் பஜாஜ் சாரிடபிள் டிரஸ்ட் கீதாயி மந்திரை நிர்வகிக்கிறது.

விநாயக் புரொஹித் என்பவர் கீதாயி மந்திரின் டிசைனை வடிவமைத்தார். அவர் கமல்நயன் பஜாஜின் விருப்பப்படி, கீதாயி மந்திரின் முன்புறத்தில் இருந்து பார்த்தால் காந்தியின் ராட்டைப் போலவும், பின்புறத்தில் இருந்து பார்த்தால் ஜம்னாலால் பஜாஜுக்கு பிடித்த பசுமாடுவின் உருவத்தைப் போலவும் வடிவமைத்தார்.

ஷீகாகண்ட் கற்களில் பொறிக்கப்பட்டுள்ள கீதாயின் ஸ்லோகங்கள்

கீதாயி மந்திரின் பூமிபூஜை விழாவானது 1964-ம் வருடம் நவம்பர் 4-ந் தேதி அன்று வினோபா பாவேவினால் செய்யப்பட்டது. எல்லை காந்தியான கான் அப்துல் கபார் கான் அவர்களின் கரத்தால் கீதாயி மந்திரின் அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு, கமல்நயன் பஜாஜ் அவர்களின் மறைவினால் கட்டமைப்பு வேலைகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது.

பின்னர், 1977-ம் ஆண்டு மீண்டும் கீதாயி மந்திரின் வேலைகள் தொடங்கப்பட்டது.

கீதாயின் 18 அத்தியாயங்களின் ஸ்லோகங்கள் 18 வகையான ‘ ஷீலாகண்ட்’ எனப்படும் கற்களில் செதுக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லானது 9 அடி உயரமும், 2 அடி அங்குலமும் உள்ளது. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு ஸ்லோகம் பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களின் அளவுகள் ஒரே மாதிரியாகவும், 8-10 அடி தூரத்தில் நின்று கொண்டு படிப்பதற்கும் ஏதுவாக பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுச்சின்னம் கீதாயி மந்திர் என்றழைக்கப்பட்டாலும், பாரம்பரிய கோவிலின் கட்டடமைப்போ, வழிபடுகிற தெய்வங்களோ, தரையோ, சுவர்களோ, கூரையோ கிடையாது. இயற்கை அன்னையின் மடியில் அமைக்கப்பட்டுள்ள அருமையான இடம்.

கீதாயி மந்திரின் ஒரு பகுதி

ஆசார்ய வினோபா பாவே கீதாயி மந்திரை 1980-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஏழாம் நாள் தொடங்கி வைத்தார்.

கீதாயி மந்திர்- எளிமையின் அடையாளமாக, புனித இடமாக, அழகான கோயிலாக மக்களுக்கு நல்வழிப்படுத்தும் ஒரு சின்னமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version