― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்நியூமராலஜிநியூமராலஜி: 1ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 1ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

numerology image

நியூமராலஜி: 1ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 1

பிறந்த எண்ணிலும், கூட்டு எண்ணிலும் சூரியன் ஆதிக்கம் வருவதால் நல்ல உயரமான, ஒல்லியான உடல், சிவப்பான நிறத்திலிருக்கும். கண்களும் சிவந்து காணப்படும். முடி சுருள் சுருளாக நீண்டிருக்கும். பேச்சில் துடுக்குத்தனமும் உண்டாகியிருக்கும்.

மானத்தை உயிர் என மதிப்பவர். வாக்கு தவற மாட்டர், கருணையுடனும், பெருந்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர். பகைக்கு பணிய மாட்டார். பிறரைக் கெடுக்கும் எண்ணம் இவருக்கு இருக்காது. எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் திட்டமிட்டும் செய்யும் ஆற்றல் கொன்டவர். நன்கு நிர்வகிக்கும் சாமர்த்தியமும், கலை, ஈடுபாடும் கொண்டவராக இருப்பர்.

காதலில் ஈடுபாடு கொண்டவராக இருப்பர். எதற்கும் அஞ்சாமல் காரியத்தை செய்து முடிப்பார். இவர் நண்பர்களை அதிகம் விரும்புபவராகவும் எல்லோரும் அதிசயிக்கும்படி தனிப்பட்ட வாழ்க்கை நடத்துபவராகவும் இருப்பர். இவருக்கு நல்ல மனைவி அமையும், பெண்களுக்கு கணவர் சரிவர அமைவது சற்று கடினமே.

இவ்வெண்ணில் இருப்பவர் அரசாங்கப் பதவிகளில் இருப்பர். உழைப்பால் உயரும் எண்ணம் கொண்டவர். நகை, ரத்தினம், வியாபாரம், இயந்திரப் பொறியாளர், தலைவர் என எதிலிருந்தாலும் பெரிய பதவியில் இருப்பவர். வெப்பம் உள்ள உடல் என்பதால் ரத்த அழுத்தம், சர்க்கரை, தலைவலி, கண் கோளாறு என வந்தால் எளிதில் நீங்காது.

 பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 2

சூரியனில் சந்திரனாதிக்கம் கொண்ட இவர் சூரியன் போல் தோற்றமும், சந்திரன்படி மனமும் முன்னேறும் எண்ணமும் கொண்டவர். நடுத்தரமான உயரமும், உறுதியான உடலும் உள்ள இவர்கள் சஞ்சலம் கொள்ளும் மனமுள்ளவர். உடல் தோற்றம் அழகாகவும் தலை முடி அதிகமாகவும் இருக்கும்.

பிறரை கவரக்கூடிய வகையில் பேசுவர். பிறருக்கு யோசனை சொல்லும் இவர் சமயத்தில் தாமே குழம்பித் தவிப்பார். நன்றாகப் படித்து பட்டம் பெறும் திறமை உள்ளவர். பேச்சில் தன்மை மிஞ்ச ஆள் இல்லை என்று நினைப்பவர். பெண்களை அதிகம் கவர வேண்டும் என்று நினைத்து அதற்காக அதிக சிரமப்படுபவர். தாமும் குழம்பி பிறரையும் குழப்பும் குணம் கொண்டவர்.

இவர்களுக்கு பெற்றவர்கள் ஆதரவு பூரணமாக அமையாது, அல்லது யாரேனும் உறவினரிடம் வளந்தவராக இருப்பார். வறுமையிலும், வளமையிலும் மாறி மாறி வளர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கல்வித்தடை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலையாக ஏற்படாது.

சூரியன் ஆதிக்கம் பலமாக இருப்பதால் அச்சு வேலை கிடைக்கும். புகைப்படத் தொழில், டிசைனிங், தையல், மதுபானக்கடை ஆகியவை சுயமாக நடத்தலாம். பிறருடன் அனுசரித்துப் போக முடியாதென்பதால் தொழிலில் பிரச்னை ஏற்படும். நரம்பு மண்டலப் பலவீனத்தால் தலை சுற்றல் இருக்கும், வயிறு வலி, பல் கோளாறு, மூட்டு வலி, முதுகு வலி போன்ற கோளாருகள் உண்டாகும்.

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 3

சூரியனில் குரு பகவானுடைய பலன் சேருகிறது. நல்ல உயரமும், செந்நிறமும் கொண்டவர். தலைமுடி சுருட்டையாகவும், கரு கருவென்றும் அமைந்திருக்கும். புருவங்கள் நன்கு நீண்டு வளைந்திருக்கும். முகம் உருண்டையாகவும் மேல் நெற்றி மேடாகவும் இருக்கும். கண் அழகாகவும் காட்சியளிக்கும்.

அழகாக ஆணித்தனமாகப் பேசுவர். இவர் பேச்சி அளவாகவும், யோசனைகள் இலாபகலமாகவும் அமையும். பிறருக்கு ஏற்றார் போல் பேசும் தன்மை கொண்டவர். எதையும் ஆழமாக சிந்தித்து செயல்படுபவர். சோம்பலின்றி உழைப்பவர். அமைதியாக பேசுவதும், நடப்பதும் இவருடைய இயல்பு. சிக்கனமாகச் செலவு செய்யும் குணம் கொண்டவர்.

பெரிய குடும்பத்தில் பிறந்தவர். மனமொத்த வாழ்க்கைத் துணைவி அமைவர். இவர் வருமானத்தில் தான் குடும்பம் நடக்கும். தம் உழைப்பாலும், புத்தியாலும், கல்வியனுபவத்தினாலும் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்திடுவர்.

கல்வியிலும், பேச்சியிலும் சிறக்கும் இவர் பேராசிரியர், லேபாரட்டரி, ஆய்வாளர் என விளங்குவர். சாஸ்திரம், ஜோதிடம், பூஜை, யோகம் எனப் பல நல்ல துறைகளில் அறிவை செலுத்துவர். கணக்கு, சினிமா, அரசியல், பொதுநலம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர்கள் பிறரிடம் வேலை செய்வதால் விரையம் ஏற்படும்.

வயிற்று உபாதை, தோல் வியாதி, கட்டிகள், குறைந்த ரத்த அழுத்தம், கபம், மலேரியாக் காய்ச்சல், பித்த வாந்தி முதலிய நோய்கள் தாக்கலாம்.

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 4

சூரியனுடன் ராகு சேர்ந்த ஆதிக்கம். இவர் இரட்டை நாடி சரீரமாக உயரத்துடன் ஆஜானுபாகுவாக இருப்பவர். முதலில் மெலிந்த தோற்றம் இருந்தாலும் நாளடைவில் வாட்டசாட்டமாக ஆகி விடுவர். மாநிறமாக இருப்பர். சதுரமான முகமும் எடுப்பான மூக்கும் உடையவர். பற்கள் வரிசையாகவும் கண்கள் மேலாகவும் இருக்கும்.

இவர் தெய்வ நம்பிக்கை உடையவர். ராஜ தோரனையும் பண்டைய பழக்க வழக்கங்களை மதித்து நடப்பவர். சூழ்நிலைக்கேற்ப நடக்கும் திறன் கொண்டவர். நன்கு பேசும் திறமையும், சாத்திர சம்பிரதாயப்படி நடக்கும் குணமும் கொண்டவர். சாதாரண நிலையிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்துப் போராடி முன்னேறுவர். அனைத்து விஷயத்திலும் ஓரளவு அறிவு பெற்று இருப்பவர். யாரலும் வெறுக்கப்படாத மனிதராக வாழ்வார்.

சுக நாட்டமுடைய இவர் சரீசுகம், வசதிகளை விரும்புவர், சாதாரண நிலையிலிருந்து குடும்ப நிலையை உயத்துவர். குடும்ப வாழ்க்கையில் சிரமம் இருக்கும். சகோதர, சகோதரி, உற்றார் உறவினருடன் ஒன்றாக வாழவே விரும்புவர்.

இவ்வெண் கொண்டவர் அரசு அதிகாரிகளாக இருப்பார். அச்சகம், பத்திரிக்கை, எழுத்து, சினிமா தொழிற்சாலைகளில் வேலை புரிவர். எத்தொழிலும் இவரால் சிறப்பாகச் செய்யப்படும்.

வாயு தொடர்பான நோய்களும், உடல் பருமன் ஒரு குறையாகும். ரத்த அழுத்தம், சைனஸ், மலேரியா, மஞ்சள் காமலை போன்ற பாதிப்பு ஏற்படும்.

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 5

சூரியனும், புதனும் ஆதிக்கம் செலுத்தும் மனிதராவார். அளவான உயரத்துடன் பளிச்சென்று அழகாகக் காணப்படுவார். பூசினாற்போல் சதைப்பற்றிருக்கும் நல்ல நிறத்துடன் இருப்பதுடன் கை, கால் அளவெடுத்தாற் போல் அமைந்திருக்கும். வசிகரிக்கும் கண்களும், இளமை கவர்ச்சி மாறாமலும் இருப்பார்.

சாந்த குணமும், பிறரிடம் நன்றாக பேசும் தன்மையும் கொண்டவர். சிந்தனை திறன் உடையவர். நன்கு படிப்பவர், சற்று அவசரமும் பரபரப்பும் இருக்கும். கை, கால், விரல்கள் சற்று நீளம் போல இருக்கும். நல்ல நகைச்சுவை உணர்வும், பேச்சினால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் கொண்டவர். புதிது புதிதாக எல்லாவற்றையும் அறிவதில் ஆர்வம் கொண்டவர்.

காதல் தோன்றினாலும் காதல் விவாகம் ஒத்து வராது. மிகவும் நெருங்கியவரும் கூட இவரைப் புரிந்து கொள்ள முடியாததும், இவருடைய கண்டிப்பும், சபல சித்தமுமே காரணம். வறுமை இருக்காது.

சொந்த தொழில் செய்வதையே இவர் விரும்புவர். அக்னி, எரிப்பொருள், இரும்பு சம்பந்தமான தொழில்களிலும் ஈடுபடுவர். என்ஜின்கள், மோட்டார் உறுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதில் வல்லவர்.

வெப்பம், நரம்பு தொடர்பான நோய் பாதிக்கும். ரத்தப் புற்று நோய், வயிற்று வலி, குடல் புற்று நோய் வரும் வாய்புள்ளது.

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 6

சூரியனும், சுக்கிரனும் ஆதிக்கம் செலுத்த அமையும் வாழ்க்கை இவருடையது. இவரது தோற்றம் உயரமாகவும், உடல் வாகு சற்று பெண்மை கலந்தும் இடுப்பு, மார்புப் பகுதிகளில் சதைத் திரட்சியுடன் காணப்படுவர். யானை போன்ற நடையும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். இவருக்கு முடி அடத்தியாகவும், இவரின் கையெழுத்து அழகாகவும் இருக்கும்.

இவ்வெண் கொன்டவருக்கு நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். அனைவரும் கவரும் விதத்தில் பேசுவார். எதிலும் முதலில் இருக்க ஆசைப்படும் இவர் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்று நினைப்பவர். விதவிதமாக உடை உடுத்த வேண்டும் என்றும் தாம் வாழும் விதத்தை கண்டு அனைவரும் மெச்ச வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்.

வாழ்க்கையை அனுபவித்து வாழும் இவர் உற்றார் உறவினரோடு கூடி வாழ வேண்டும் என்று நினைப்பவர். பெண்கள் மீது பற்றுள்ள இவர்கள் பெண்களாளே பிரச்னைகள் அடைவர். வாழ்க்கையில் பணக்கஷ்டம் இன்றி அதிர்ஷ்டம் பெறுவர்.

இவர்கள் குறைவான உடலுழைப்பும் அதிக லாபமும் உள்ள தொழில் புரியவே விரும்புவார்கள். பட்டு, ஜவுளி வியாபாரம், நவரத்தினக் கற்கள், வாசனைப் பொருட்கள், பகட்டுப்பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரம் இவை தொடர்பான நிறுவனப் பணியாளராகவோ இருப்பார்.

கண், தொண்டையில் கோளாறு, இதயப் பலவீனம், பித்தம், வாதம் தொடர்பான நோய்கள் பற்றலாம். காய்கறிகளும், நாரிழைச் சத்தும், ஆரஞ்சு நலம் தரும்.

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 7

இவ்வெண் கொண்டவர்கள் சூரியனும், கேதுவும் இணைந்து தரும் பலனை அடைவர். தூய நல்லாடை உடுத்தி கௌரவமாகக் காட்சியளிப்பவர். உயரமாகவும். ஒல்லியாகவும் கண்கள் உள்ளடங்கி  கூர்மை பார்வையும் கொண்டவர். அநேகர் கண்ணாடி அணிந்திருப்பார்.

இவர்களுக்கு மனோவலிமை அதிகம், ரகசியத்தைக் காபாற்றிக் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அசாத்தியமான மூளை படைத்த சாமத்தியசாலி. இவ்வெண் கொண்டவர் யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரிந்தவர். அரசியலில் ஆர்வம் மிருந்தவராக இருப்பார்கள்.

உறவினருடனும், மனைவியிடமும் கருத்து வேறுபாடிருக்கும். சொத்து, சுகம் உண்டு. சண்டையும் சச்சரவுமாகவே குடும்ப வாழ்க்கை நடக்கும். குழந்தைகள் நல்ல நிலை அடைவார்கள்.

சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் இவருக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எழுத்து, பத்திரிக்கை, சினிமாத் துறைகளில் மிகப் புகழுடன் விளங்குவோரும் உண்டு. மனசாட்சிக்கு உட்பட்டு நடப்பர்.

வெப்பம் அதிகமாதலால் பித்த நோய்கள், தோல் வியாதிகள், மலச்சிக்கல், வாத நோய், மூலம், வயிற்றுப் கோளாறுகள் ஏற்படும்.

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 8

இந்த எண் கொண்டவர்களுக்கு சூரியனுடன் சனி இணைந்து பலன்களை தருவார். அளவான உயரத்துடனும் உடல் பலத்துடனும் இருப்பார். சிரித்த முகத்துடன் அழகாக காணப்படுவார்.

இரக்க குணம் கொண்ட இவர் தயாள மனத்துடன் தாராளமாகத் தானம் செய்வார். நன்கு உடல் உழைப்பையும், தடைகளையும், துன்பங்களையும் நன்றாகத் தாங்கி எதிர்நீச்சல் போடும் குணம் கொண்டவர். எந்ந காரியத்திலும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி காண்பார். இவரின் திருமணம் காதல் கலாட்டா கல்யாணம் ஆகும்.

இவர்களின் சிறுவயது வாழ்க்கை சிறப்பாகவும், கல்வி செல்வச் செழிப்பில் தந்தை ஆதரவில் நன்கு நடக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் வரும்.

சொந்தத் தொழியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. இரும்பு, எரிபொருள், மின்சாரம் தொடர்பான வேலை வாய்ப்பு கிட்டும். பலர் தொழிற்சாலைகளில், எலக்ட்ரிக், எந்திரப் பொறியாளராக விளங்குவர். எத்தொழில் புரியினும் நிறையச் சம்பாதிப்பர்.

ஜுரம், மலச் சிக்கலால் வாதம், மூலம், தலைவலி, வயிற்று வலி உண்டாகும். முதுகு வலி, சிறுநீரகக் கேடு வரும். அடிக்கடி காயம் படும். சர்க்கரை வியாதி, சைனஸ் போன்ற கோளாறுகள் ஏற்படும்.

பிறந்த எண் 1-ல் கூட்டு எண் 9

இவர்கள் சூரியனுடன் செவ்வாய் இணைந்த பலன் அடைவர், நெடிதுயர்ந்து பார்க்கக் கம்பீரமாக வாட்டசாட்டமாகவும் உடல் பலத்துடன் வாழ்வர். காயம், தழும்பு ஆங்காங்கே இருக்கும்.

துணிவு கொண்டு எதிர்த்து எதிலும் போராடி வெற்றி பெறக் கூடியவர். இவ்வெண் கொண்டவர் எவரையும் எதிர்த்துச் சண்டையைத் தொடங்கி விடுவர். சொல்வதை புரிந்துக்கொண்டு நடக்கும் குணம் உள்ளவர். அரசியலில் ஈடுபடும் ஆர்வம் மிக்கவர்.

பிறந்தது நல்ல செல்வக் குடும்பமானாலும் அதைவிட சொந்த சம்பாத்தியத்தில் நன்கு வாழ்வார். மணவாழ்க்கையில் சற்று போராட்டம் ஏற்பட்டாலும் பிறகு அமைதி நிலவும். இவருக்கு சொந்தமாக தொழில் அமையும். குடும்பத்தில் உள்ளவரிடம் கவனமாக இருந்தால் பிரச்னையை தவிர்க்கலாம்.

அக்னி, அமிலம், மின்சாரம், இரும்பு ஆகிய தொடர்புள்ள தொழிலக வேலை அல்லது வியாபாரம் பொருத்தமானதாக இருக்கும். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் மிகப் பெரிய பதவி கிடைக்கும். வெளி மாநிலம், வெளிநாடு சென்று தொழில் புரியும் யோகமும் இவருக்கு ஏற்படும்.

பித்தம், கபம் மிகுந்தவர், கோபமும் அதிகம் உள்ளவர். வயிற்று வலி, கண் வலி, தீப்புண் காயமுண்டாதல், இடிபாடுகளில் சிக்குதல் போன்றவற்றிக்கு ஆளாகலாம்.

பலன்கள் கணிப்பு: எழுத்தாளர் ஸ்வாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version