Home உரத்த சிந்தனை பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

narayanan-thirupathi
narayanan thirupathi

மிகுந்த கவலையோடு இதை பதிவு செய்கிறேன்…. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இனி மேலும் இது அதிகரிக்கும்.

ஆனால் பாஜகவினர் உட்பட அனைத்து கட்சியினரும் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. அதே போல் முக கவசங்களை அணியாமல் இருப்பது, கழுத்தில் தொங்க விட்டு கொள்வது, கைகளில் பத்திரமாக வைத்துக் கொள்வது என்று அலட்சியப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த நிலையிலும் இறப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு உயிர் மறைந்தாலும், அது பேரிழப்பே. ஆனாலும் உயிரிழப்பை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம். மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவிற்கு செயல்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம். ஆனால் அரசுக்கு நாம் ஒத்துழைக்கிறோமா என்றால், உறுதியாக இல்லை என்று தான் நான் கூறுவேன்.

அரசியல் கட்சிகளை சேர்ந்த நாம் மக்களை வலியுறுத்தி முக கவசங்களை அணிவதில், சமூக விலகலை கடைபிடிப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் கடமை. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொரோனா தொற்று பரவலாம். யாரும் விதிவிலக்கல்ல.

மதியை விட விதியே பெரிது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். போட்டியின் காரணமாக, அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் நடைபெற்று தான் கொண்டிருக்கின்றன.

ஒருவரின் மறைவு என்பது ஒட்டு மொத்த குடும்பத்தையே சீர்குலைக்கும் என்பதை நினைவில் கொண்டு உரிய பாதுகாப்போடு இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. நம் பெற்றோர்களின், கணவர் மற்றும் மனைவி, குழந்தைகளின் நலன் கருதி, முக கவசம் அணிவது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

இந்த கூட்டங்களில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படம் / வீடியோ எடுப்பவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. தங்கள் பணியை செய்வதற்கு மிக பெரிய விலையை கொடுக்க தயாராக உள்ளார்கள். உயிரை துச்சமாக மதிக்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் நம் உயிர் பிரிந்தால், அதனால் பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும். ஆனால்…நாம் மாறுவோமா? காலம் பதில் சொல்லும்.

வருத்தத்துடன்…..

  • நாராயணன் திருப்பதி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version