Home உரத்த சிந்தனை புனித நாமத்தை இழிவுபடுத்துவது பற்றி… சுஜாதா எழுதியவை!

புனித நாமத்தை இழிவுபடுத்துவது பற்றி… சுஜாதா எழுதியவை!

நாமத்தை இழிவுபடுத்துவது பற்றி: சுஜாதா
(ஓரிரு எண்ணங்கள் – புத்தகத்திலிருந்து)

சில நாட்களுக்கு முன் பாண்டிச்சேரி பட்ஜெட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று அவர்கள் ஒரு நூதனமான மறியல் செய்தார்கள். அத்தனை இளைஞர்களும் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு விநோதமாக ஏதோ ஒரு கட்டிடத்தின் முன்பு உட்கார்ந்திருந்தார்கள்.

இந்த நாமம் போடுவது. பட்டை நாமம் தீட்டுவது என்பதெல்லாம் கேலிக்கு பயன்படும் விஷயமாகிவிட்டது வருந்தற்குரியதே !! வைணவர்களுக்கு புனிதமான குறியீடு அது. விஷ்ணுவின் திருப்பாதங்கள், சங்கு, சக்கரம்… இவைகளின் சின்னமாக கருதப்படுகிறது. நான் ஒரு வைணவன் என்று உலருக்கு அறிவிக்கும் முறையாகவும் திருநாமம் பயன்படுகிறது. இதைக் கேலி செய்யும் துணுக்குகளையும். ஜோக்குகளையும் வெளிவிடாதீர்கள் என்று தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு புத்தூர் சுவாமி திரு கிருஷ்ணசாமி ஐயங்கார் பலமுறை எழுதி, அவர்கள் பிரசுரிக்கரமல் தன் பத்திரிகையான ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனத்தில் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

“முஸ்லிம்களின் பிறையையோ, கிறிஸ்தவர்களின் சிலுவையையோ, சைவர்களின் குறுக்குப் பட்டையையோ இவ்வாறு இழிவுபடுத்தத் துணியமாட்டார்கள். ஊருக்கு இளைத்தவர்களான வைணவர்களின் நாமத்தை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் பத்திரிகைகளின் விற்பனை பாதிக்காது. ஹாஸ்ய உணர்ச்சிக்கு இரை போடுகையில் பத்திரிகை விற்பனையும் அதிகரிக்கும். எனவே 111 போன்ற தெருப் பொறுக்கிகளுக்கான பாஷையைப் பயன்படுத்தும் கடிதங்களுக்குத்தான் பத்திரிகைகள் இடமளிக்குமே தவிர, பண்புடன் மறுத்து எழுதும் வைணவர்களின் கடிதங்களுக்கு இடமளிக்காது” என்று காட்டமாக எழுதியிருக்கிறார்.

இது யோசிக்க வேண்டிய விஷயம், கீதை போன்ற விஷயங்களைக் கிண்டல் செய்து என்ன வேண்டுமானாலும் எழுது கிறார்கள். (இவ்வாறு எழுதுபவர்கள் பெரும்பாலும் இந்துக்களே) கமலஹாசனின் ‘காதலா காதலா’வில் முருகப் பெருமானைக் கிண்டல் செய்து பல காட்சிகள் உள்ளன. அதை ஒருவரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பம்மல் சம்பந்தத்திலும் சிவபெருமானை parody செய்கிறார். அங்கங்கே பேசிக்கொள்ளும் போது நண்பர்கள் மனம் புண்படுவதைக் குறிப்பிட்டதோடு சரி. ஆனால் சிறுபான்மை மதக்காரர்களின் சின்னங்களையும், கடவுள்களையும் (இதில் அம்பேத்கரின் சிலையும் சமீபத்தில் சேர்த்தி) ஏதேனும் சொல்லிவிட்டால் ரத்த ஆறு ஓடுகிறது.பஸ்கள் எரிக்கப்படுகின்றன. சாலை மறியல்கள் நடக்கின்றன. இந்த விளைவின் சமூக இயல் தாக்கங்களை நோக்குவது சுவாரஸ்யமானதே!

நாட்டில் பொதுவான அவல நிலையாலும், சிறுபான்மை ஸ்திதியாலும் அரசிடமிருந்து சலுகைகளை எப்படியாவது. பறித்துத் தக்கவைக்கும் நோக்கமுள்ளவர்கள் எல்லாரும் இவ்வாறு ஏதாவது ஒரு விஷயத்துக்காகக் கோபித்து மறியல் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய அபத்திரமான சமூக நிலைமைதான்.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ‘ஏழ்மைக் கோட்டின் கீழ் நீங்கள் இல்லை’ என்று மைய அரசு, மாநில அரசுக்குப் புள்ளிவிவரம் தந்தால், அதை எதிர்த்து மறியல்கள் நடக்கின்றன. காரணம் பி.டி.எஸ். போன்ற திட்டங்களில் மாநில அரசின் பங்கு பாதிக்கப்படும்…

வைணவர்கள் போன்ற கோபிக்காத ஜன்மங்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைக் கண்டு கொதிக்காமல் ‘துஷ்டனைச் கண்டால் தூர விலகு’ என்கிற அடிப்படையில் வேற்று மாநிலங்களுக்கோ, தேசங்களுக்கோ போய், அங்கே இவ்வாறான அவமானங்கள் இல்லாமல் வாழப் பழகிவிட்டார்கள்.

கோபப்பட அவர்களுக்குத் தைரியமும் இல்லை: நோமும் இல்லை; ஏழ்மையும் இல்லை. இதுதான் யதார்த்தமான உண்மை. ஆனால் இந்த நிலை அதிக நாள் நீடிக்காது. குஜராத்தில் பி.ஜே.பி. அரசு வந்ததும் ஒரு ஹிந்து பாக்லாஷ் (backlash) ஏற்பட்டது. அதன் தீவிரமான பின் விளைவு தூங்கும் சிங்கம் போல. அது என்றாவது ஒருநாள் தன் சோம்பேறித் தூக்கத்திலிருந்து எழுந்து பிராண்டத் தொடங்கிவிடும். அந்த நாளை இந்த தேசம் தாங்க முடியாது.

இதற்கு ஒரே பரிகாரம், நம் ஏழ்மையை நீக்குவதுதான். எல்லாருக் கும் வேலை இருந்து, பணம் பண்ணுவதில் கவனமாக இருந்து விட்டால் கோபித்துக்கொண்டு மறியல் செய்ய நேரமிருக்காது.


இந்தக் கட்டுரையை சுஜாதா, எப்போது / எந்தப் பத்திரிக்கையில் எழுதினாரென்று நினைவில்லை. இப்போது ஒட்டுமொத்தமாக அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும், விதிவிலக்கில்லாமல், திமுக வசம் சென்றுவிட்டதால் இது போன்ற கட்டுரைகள் இனி வர வாய்ப்பில்லை. இதில் சுஜாதா தைரியமாக தம் கருத்துக்களை முன் வைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக, பெரும்பான்மையான படித்த இந்துக்கள் தைரியமாக முன்வந்து இவற்றை பேச மாட்டார்கள். இவர்களை இன்று சில பதிவர்கள் நடுநிலை நக்கிகள் என்று அழைப்பது மிகச் சரியே.

ஒரு வைணவன் என்ற முறையில் இந்தப் பதிவிலிருக்கும் சில விஷயங்கள் பற்றி என் கருத்துக்களை முன்வைத்தே ஆக வேண்டும்.

சுஜாதா மேற்கோள் காட்டியிருக்கும், புத்தூர் சுவாமி திரு கிருஷ்ணசாமி ஐயங்கார் சுட்டிக்காட்டியுள்ளது போல, இன்றைய பத்திரிக்கைகள் மட்டுமல்ல, சினிமாக் காட்சிகள், சில சில்லறை / பெரிய கட்சிக்காரர்களின் பேச்சுக்கள் ஆகியவையும் பிராமணர்களை பெரும்பாலும் சீண்டுவதும், கேவலமாகப் பேசுவதும் வழக்கமாகப் போய்விட்டன.

கிண்டல் / கேலி செய்பவர்கள் சைவர்கள் / வைணவர்கள் என்று பேதம் பார்ப்பதில்லை. பார்ப்பனர்கள் என்று ஒட்டுமொத்தமாக ஒரே முத்திரையை குத்திவிடுகிறார்கள் என்பதே உண்மை.

சுஜாதா வைணவர்களைப் பற்றி சொல்லும்போது “கோபப்பட அவர்களுக்குத் தைரியமும் இல்லை: நோமும் இல்லை; ஏழ்மையும் இல்லை” என்கிறார். இதுவும் தவறுதான். வைணவர்கள் / சைவர்கள் இரு பாலரிடமும் வறுமையில் வாடும் குடும்பங்கள் நிறையவே இருக்கின்றன.

என்னுடைய தந்தை அடிக்கடி சொல்லுவார் “பிராமணனுக்கு முதல் எதிரி இன்னொரு பிராமணன் தான்” என்று. இது முற்றிலும் உண்மை. நான் நன்றாக, வசதியாக இருந்தால் அது என் உறவினர்களுக்கு ஆகாது. வயிறெரிவார்கள். எனவே இவர்களுக்குள் பொதுவாக ஒற்றுமையும் இல்லை.

கல்லூரியில் முதலில் பி எஸ் சி கெமிஸ்ட்ரி முடித்துவிட்டு, மதுரையில் சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் – Sundaram Fasteners – என்ற நிறுவனத்தில் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு வைணவர் என்னிடம் ஆச்சரியமான / அதிர்ச்சியளிக்கும் கேள்விகளைக் கேட்டார்.

“உன் பெயர் ஸ்ரீதர்…..சரி உன் தந்தை பெயர் ராமச்சந்திரன். நீங்கள் வைணவமா? சைவமா?” என்று கேட்டார்.

“வைணவம்” என்றேன் எனக்கு வந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு.

“வைணவம் என்றால் வடகலையா? தென்கலையா?” என்று அடுத்த கேள்வி அவரிடமிருந்து வந்தது.

நான் என்னுடைய கொப்பளிக்கும் கோபத்தை அடக்கிக்கொண்டு, “சார், நான் அப்ளை செய்து வந்திருப்பது லேப் அசிஸ்டன்ட் – Lab Assistant – வேலை. இதற்குத் தேவையான கெமிஸ்ட்ரி பட்டம் என்னிடம் உள்ளது. அதில் 84% சதவீதம் பெற்றுள்ளேன். எனவே, உங்கள் கேள்வி இதில் எங்கு சேரும் என்று தெரியவில்லை” என்றேன்.

பட்டென்று தன் முன்னிருந்த ஃபைலை மூடியவர், “சரி, நீங்கள் போகலாம். வேலைக்குத் தேர்வானால் தகவல் வரும்” என்று சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு வந்து நடந்த கூத்தை அன்று இரவு என் தந்தையிடம் சொன்னபோது, “விடு, இந்த வேலை உனக்குக் கிடைக்காது. மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றாயே அதற்கான வேலையைப் பார்” என்றார்.

அவர் சொன்னது போலவே எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. நானும் மேற்படிக்கு என் விருப்பப்படி ஆங்கில இலக்கியம் சேர்ந்துவிட்டேன் என்பது வேறு கதை.

  • ராம் ஸ்ரீதர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version