
- ஆனந்த் வெங்க்ட்
ஒரு காலத்தில் பல பிராமணர்கள் பாஜகவில் இருந்து அந்தக் கட்சியை தூக்கி நிறுத்தினார்கள். உண்மைதான்.
காரணம் நமது நாட்டில் விதைக்கப்பட்ட மொத்த விஷத்தையும் முதன்முதலாக முழுமையாக உள்வாங்கியது இந்த தமிழகம்தான். அதனால் பாஜகவில், தமிழகத்தில் மிக அதிக அளவில் பிராமணர்கள் இருந்து வேலை பார்த்து, அந்த விஷத்தை கரைத்து குறைத்து நீர்த்து போக வைக்க முயன்றார்கள்.
சிறிதும் பெரிதுமாக வெற்றிகளை ஈட்ட முயன்று வந்தார்கள். அதற்காக கடுமையாக முயற்சித்தார்கள், வெட்டப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், மிரட்டப்பட்டார்கள். இன்று அந்தக் கட்டத்தை தாண்டி விட்டோம். ஜாதியை தூக்கிப் பிடித்தது போதும். பிராமணர்கள் உயர வேண்டும் என்பதற்காகவோ பிராமண ஜாதியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவோ பிராமணர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவோ பிராமணர்கள் தமிழகத்தில் பாஜகவில் இணைந்து வேலை செய்யவில்லை.
தர்மத்தை காப்பாற்ற வேண்டும், கோவில்களை, நமது சம்பிரதாயங்களை, ஹிந்துக்களை, பசுக்களை, சாமானிய மக்களை என்று அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் அன்று பிராமணர்கள் பாடுபட்டார்கள்.
எவ்வளவு பாடுபட்டாலும் சரி. எவ்வளவு மேலே கொண்டு வந்தாலும் சரி. எவ்வளவு பெரிய சமஸ்தானத்தை நிறுவினாலும் சரி. பிராமணர்கள் அதில் சிம்மாசனம் ஏறி கோலாச்ச வேண்டும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஆசை இருந்தால் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்ளாமல் செய்து கொள்ளட்டும்.
மக்களுக்கு ஹிந்து உணர்வை ஊட்டவும், தர்மத்தை நிலை நாட்டவும் மட்டும்தான் இத்தனை உழைப்பு உழைத்தோம். என்றைக்கு பாரதிய ஜனதா கட்சி என்பது வெகுஜனத்தின் மனதில் இடம் பிடிக்க துவங்கியதோ, அன்றே தேர் நிலையை விட்டு நகர துவங்கி விட்டது.
மிகவும் கண்ணியமாக பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்து மிகவும் சரியான நபரை தேர்ந்தெடுத்து அவரை முன்னெடுத்துச் செல்லச் சொல்லி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பல சுயநலம் பிடித்தவர்கள் எப்படியாவது ஜாதிய வெறியை முன்னிறுத்தி தாங்கள் தனிப்பட்ட முறையில் நன்மை அடையலாம் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள், ஜாதியை காட்டி பிராமணர்களை ஹிந்து அமைப்புகளிடமிருந்து தேசிய கட்சிகளிலிருந்து பிரிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.
இது போன்ற எண்ணங்கள் கொண்டவர்களை எக்காலத்திலும் நாடோ, தர்மமோ மன்னிக்காது. அரசாங்கம் கொடுத்த சான்றிதழை வைத்துக்கொண்டு ஜாதியை புறங்கையால் நக்கிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
அசல் பிராமணன் என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள்தான் பிராமண ஜாதி வெறி கொண்டு அலைகிறார்கள். இந்த நாடு முக்கியம், தர்மம் முக்கியம், நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் முக்கியம், சனாதன தர்மம் முக்கியம், மக்களும் அமைதியும் பசுக்களும் மற்ற அனைத்து பிராணிகளும் செடி கொடிகளும் முக்கியம். இவ்வாறாக உலக நன்மைக்காக, தேச நன்மைக்காக மட்டுமே உழைத்து, தேவையென்றால் முள் கிரீடமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அரியணையில் அமர்ந்து செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு அடுத்த தலைமுறையை உருவாக்கிவிட்டு, நல்ல சந்ததி உருவாகிவிட்டது என்பதை அறிந்ததும், அவர்களிடம் தலைமையை ஒப்படைத்து விட்டு, ராஜகுருவாக இருந்து விலகி நின்று வழிகாட்டுவதோடு இருப்பான் ஒரு நல்ல பிராமண வித்து.
தானே முன்னிலையில் நின்று அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். தன் மீது தான் மொத்த வெளிச்சமும் விழ வேண்டும். தனது பல்லக்கை எல்லோரும் வந்து தூக்க வேண்டும் என்றெல்லாம் எண்ண மாட்டான்.
ஒரு காலத்தில் தேவதாசிகளிடமிருந்த நாட்டியமும் பாட்டும் யாரும் காப்பாற்ற இல்லாததால் பிராமணர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். இன்று அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆள் கிடைத்து விட்டது. அதனால் அவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை.
ஒரு கட்டத்தில் சுதந்திரத்திற்காக பலர் தலைமை ஏற்று போராட வேண்டி இருந்தது. அதையும் செய்தார்கள். பின்னர் நிறைய பேர் கிடைத்தார்கள் அதனால் அவர்கள் விலகி நின்றார்கள்.
ஒரு கட்டத்தில் நாட்டை வழிநடத்த, தேசபக்தியை ஊட்ட அமைப்புகள் என்று எதுவும் இல்லாமல் இருந்தது. அது கிடைப்பதற்காக உருவாக்குவதற்காக பிராமணர்கள் முயன்றார்கள். பலர் சேர்ந்ததால் அதிலிருந்து விலகி நின்று நாடு முன்னேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படித்தான் தமிழக பாரதிய ஜனதாவும் அதில் இருந்த பிராமணர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
மற்றவர்கள் எல்லோரும் விலகி நில்லுங்கள். நாடு முன்னேறுவது மட்டுமே முக்கியம். தர்மம் சீராக செழிப்புடன் இருப்பது மட்டுமே முக்கியம். எல்லாரும், எல்லாமும் நன்றாக இருந்தால் போதும்.
வந்தே மாதரம்.