Home கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 7)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 7)

திருமகள், பாரதி, உமை என முப்பெருந்தேவியரையும் குறிப்பிடுகிறார். பாடல் ‘கடமை’ எனத் தொடங்கி ‘களித்தே’ என முடிகிறது.

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாடல் ஆறுகலித்துறை

காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனு நாட்டி னிறுத்தல் குறியெனக்கே.

பொருள் – கனபதியே உன் திருவடிகளை கண்ணில் ஒற்றித் தொழுகிறேன். இந்த விநாயகர் நான்மணி மாலை என்ற நூலை வெண்பா, கலி, விருத்தம், அகவல் எனப் பலப்பலவாக இயற்றும்போது, ஒரு நொடியேனும் தவறு நிகழா வண்ணம் நல்ல செயல்கள் செய்து உன் புகழை என் மனதில் நிலைநாட்டுவாயாக.

‘கால்’ எனத் தொடங்கி, ‘எனக்கே’ என பாடல் முடிகிறது.

பாடல் ஏழுவிருத்தம்

எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி,
மனத்திற் சலன மில்லாமல், மதியிலிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வய திவையுந்தர நீகடவாயே.

பொருள் – எனக்குத் தேவையான வரங்களைக் கேட்கிறேன், கணபதியே செவிமடுப்பாயாக. மனதில் சலனம் ஏற்படாமல் இருக்க வேண்டும்; மதியில் அறியாமை இருள் வரக்கூடாது; நான் எண்ணுபோதெல்லாம் உன்னை நினைக்கும் மௌன நிலை நீ அருளவேண்டும்; மிக அதிகமான செல்வம், நூறாண்டு காலம் வாழும் ஆயுள் ஆகிய ஐந்தினையும் நீ எனக்கு அருள்வாயே.

பாடல் ‘எனக்கு’ எனத் தொடங்கி ‘கடவாயே’ என முடிகிறது.

பாடல் எட்டுஅகவல்

கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி, 5

அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும்
தேவருந்தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல்
இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும் 10

கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில், 15

எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்;
அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே. 20

பொருள் – இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் இன்பமாய் வாழ நான் செய்யவேண்டிய கடமைகள் நான்காகும். அவையாவன (1) தன்னைக் கட்டுதல், (2) பிறர் துயர் தீர்த்தல், (3) பிறர் நலம் வேண்டுதல், (4) உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல் ஆகியனவாகும் இத்தகைய கடமைகள் செய்வதால் கிடைக்கும் பயன்கள் நான்காகும். அவை அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகியன ஆகும். என்னுடைய ஐம்புலங்களைக் கட்டி ஆளும் தன்மை நான் பெற்றுவிட்டால் மீதமுள்ள எல்லா செயல்களும் கூடும்; எல்லாப் பயங்களும் கிட்டும். எனவே எனக்கு அசையாத நெஞ்சமருள்வாய் மணகுளவிநாயகனே.

 ‘உலகம் காக்கும் ஒரு இறைவன்’ அதாவது ‘ஒருவனே தேவன்’ என்று கூறுகையில் விநாயகனாய், வேலுடைய குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாகிய சிவபெருமானாய் என இந்து மதம் சொல்லும் கடவுளர்களை பாரதியார் குறிப்பிடுகிறார். மேலும் பிற நாட்டிருப்போர் வணங்கும் அல்லா, யெஹோவா ஆகிய தெய்வங்களையும் குறிப்பிடுகிறார்.  திருமகள், பாரதி, உமை என முப்பெருந்தேவியரையும் குறிப்பிடுகிறார்.

பாடல் ‘கடமை’ எனத் தொடங்கி ‘களித்தே’ என முடிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =

Translate »