― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்அண்ணா என் உடைமைப் பொருள் (54): அண்ணா எழுத்தின் முக்கிய அம்சங்கள்!

அண்ணா என் உடைமைப் பொருள் (54): அண்ணா எழுத்தின் முக்கிய அம்சங்கள்!

- Advertisement -

அண்ணா என் உடைமைப் பொருள் – 54
அண்ணா எழுத்தின் முக்கிய அம்சங்கள்
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணா எழுத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் உண்டு. இவற்றை ஆங்காங்கே கண்டுணர முடியும். எனினும், மூன்று அம்சங்களும் தூக்கலாகத் தெரிவது ‘‘நவராத்திரி நாயகி’’யில் தான்.

முதல் அம்சம்: வேதாந்த விளக்கம்

ஹிந்து சிந்தனையைப் பொறுத்த வரை, வாழ்க்கை என்பது வீடுபேற்றை நோக்கிய பயணம் மட்டுமே.

‘‘வீடு’’ என்பது ‘‘விடு’’ என்பதன் நீட்சி, ‘‘பேறு’’ என்பது ‘‘பெறு’’ என்பதன் நீட்சி.

எதை விடுவது, எதைப் பெறுவது?

இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்குகிறார்கள். ஒவ்வொரு விளக்கமும் நம் தேசத்தின் ஒவ்வொரு சம்பிரதாயமாக மலர்ந்துள்ளது.

அண்ணா ஸ்மார்த்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர். இது ஆதி சங்கரரால் ஏற்படுத்தப்பட்டது, அத்வைதத்தை அடிப்படையாகக் கொண்டது.

பரம்பொருள் ஒன்று மட்டுமே இருக்கிறது, பிரபஞ்சம் என்பது இருப்பது போலத் தெரிவது – உண்மையில் இல்லாதது – என்பதே அத்வைதம்.

அத்வைதத்தைப் பொறுத்த வரை இந்த அறிவு தான் வீடுபேறு.

இந்தத் தத்துவத்தை நிலைநாட்டுவதற்காகச் சொல்லப்படும் விளக்கங்கள் மரபு சார்ந்தவை, காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருபவை. இந்த அம்சங்களில் சிலவற்றை அண்ணா தனக்கே உரிய விதத்தில் விளக்குவார். இவை அத்வைத மரபில் சொல்லப்படும் விளக்கங்களில் இருந்து சற்றே மாறுபடும்.

‘‘கடலும் அலையும் வேறு வேறு அல்ல’’ என்கிறது அத்வைதம். அதையே அண்ணா, ‘‘ஆம், கடலும் அலையும் வேறு வேறு அல்ல தான், ஆனால், அலையில் கடல் தோன்றுகிறது என்றா சொல்ல முடியும், கடலில் தான் அலை தோன்ற முடியும்’’ என்று விளக்குவார்.

அத்வைதம், மாயைக்கு அதிபதியாக ஈசுவரன் என்ற ஒரு தத்துவத்தைப் பற்றிப் பேசும். அண்ணா, அதை பிரகிருதி அல்லது பராசக்தி என்று சொல்லுவார்.

அண்ணா தரும் இத்தகைய விளக்கங்கள், சாக்தம் (ஆறு மதங்களில் ஒன்று. சக்தி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது.) அத்வைதம் ஆகிய இரண்டும் கலந்ததாக இருக்கும்.

அத்வைதம் என்பது அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தத்துவம் என்று சொல்லலாம் – நம் அறிவைப் பற்றியது அல்ல, பேரறிவு பற்றியது.

அண்ணா, இந்த அறிவை பக்தியின் அடிப்படையில் விளக்குவார். அத்வைத ஞானம் என்பது பராசக்தியின் அனுக்கிரகத்தால் கிடைப்பது என்பது அண்ணா சொல்லும் விளக்கம்.

எத்தனையோ இடங்களில் அண்ணா இதுபோன்ற விளக்கங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டிருந்தாலும், நவராத்திரி நாயகி நூலின் ‘‘முகவுரை என்கிற முக்கிய உரை’’யில் தான் இந்த விளக்கத்தை முழுமையாகத் தந்திருக்கிறார்.

காசியில் ஆதி சங்கரர் ஒரு புலையனை விலகிப் போகுமாறு சொன்னது மிகவும் பிரபலமான சம்பவம். இதேபோன்ற இன்னொரு சம்பவத்தை அண்ணா சுட்டிக் காட்டுவதுண்டு. இது வங்காளத்தில் பிரபலமாகச் சொல்லப்படும் கதை.

ஆசார்யாள் கங்கையில் குளிக்க வருகிறார். படித்துறையில் ஒரு பிச்சைக்காரக் கிழவி தனது கால்களை நீட்டியவாறு அமர்ந்திருக்கிறாள். ஆசார்யாளின் சிஷ்யர்கள், அவளைப் பார்த்து, ‘‘ஆசார்யாள் குளிக்க வந்து கொண்டிருக்கிறார். வழி விட்டு உட்காரம்மா’’ என்று சொல்கிறார்கள்.

அதற்கு அந்தக் கிழவி, ‘‘உங்க ஆசார்யாள் வராராக்கும்! வரட்டும், வரட்டும்! எனக்கும் அவர் கிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்னு இருக்கு’’ என்றாளாம்.

சிஷ்யர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதற்குள் ஆசார்யாள் அவளுக்கு அருகே வந்து விட்டார்.

ஆசார்யாளைப் பார்த்த அந்தக் கிழவி, ‘‘ஓய் ஆசார்யரே, இந்த லோகத்தை மாயை மாயை-ன்னு சொல்றீரே, மாயை-ன்னா இல்லாதது-ன்னு அர்த்தம் சொல்றீரே! ஆனா, இப்போ நீரும் நானும் இல்லையா? ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கலையா? இது ஏன் இப்படித் தெரியறது? இல்லாதது இல்லாததாவே இல்லையே, இருக்கறதா தானே இருக்கு? இது எப்படி சாத்தியமாறது? இதுக்கு உம்ம கிட்ட பதில் உண்டா?’’ என்று கேட்டாளாம்.

உடனே, ஆசார்யாள் அவளை நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தாராம்.

‘‘அம்மா, நீயே தானம்மா அதற்குக் காரணம்! நீ ஜகன்மாயா! லோக மாயா! மகா மாயா! அறிவுககு அப்பாற்பட்டவள் நீ! உன்னையாரால் அறிய முடியும்? உன்னை எப்படியம்மா அறிய முடியும்? உன்னை எப்படியம்மா விளக்க முடியும்?’’ என்று கேட்டாராம்.

பிச்சைக்காரக் கிழவி வடிவத்தில் வந்த பராசக்தி, தனது சுயரூபத்தில் ஆசார்யாளுக்குக் காட்சி தந்து விட்டு மறைந்தாளாம்.

ஆசார்யாள் வாழ்வில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்த சம்பவம் இது.

இந்தக் கருத்தைத் தான், அண்ணா, ‘‘நவராத்திரி நாயகி’’ நூலின் முகவுரை என்கிற முக்கிய உரையில், ‘‘மகா ஞானியரையும் அவள் மோக மயக்கத்தில் ஆழ்த்துகிறாள்’’ என்ற புராண வாசகத்தை மேற்கோளாகக் கொண்டு மிகமிக விரிவாக எழுதி இருக்கிறார்.

இரண்டாவது அம்சம்: கேள்விகள் இல்லாத நிலை

தத்துவம் என்பது அறிவு பூர்வமான விளக்கத்தைத் தருவது. ஆனால், தத்துவத்தை ஆழ்ந்து படிக்கும் போது, ஒரு கேள்விக்கான பதிலே அடுத்த கேள்வியின் துவக்கமாக அமைந்து விடும். கேள்விகள் முடிவே இல்லாமல் தொடரும்.

அப்படியானால், அறிவின் இறுதி நிலை என்ன?

கேள்விகளுக்கு பதில் கிடைக்கவே கிடைக்காது என்பதை நம் அறிவின் மூலம் புரிந்து கொள்ளும் போது தான் தெளிவு பிறக்கும்.

அண்ணாவின் எழுத்தில் இந்தக் கருத்து அவ்வப்போது இடம் பெறும். எனினும், நவராத்திரி நாயகியின் ‘‘நமஸ்காரம்’’ என்ற தலைப்பில் (பிந்தைய பதிப்புகளுக்கான முன்னுரை இது.) இந்தக் கருத்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நமது பாரம்பரியத்தில் உபதேசம் என்பது பெரும்பாலும் ரத்தினச் சுருக்கமாக இருக்கும். ஆனால், அதற்கான விளக்கம் பெரிய பெரிய வால்யூம்களாக விரியும். உதாரணமாக, பாகவதம் என்பது நாரதரால் வேத வியாசருக்கு வெறும் நான்கு சுலோகங்களில் சொல்லப்பட்ட உபதேசம் தான். அந்த உபதேசத்தைத் தான் வேத வியாசர் ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட பாகவதம் என்னும் நூலாக அமைத்தார்.

அதுபோலவே, நவராத்திரி நாயகி நூலின் ‘‘நமஸ்காரம்’’ என்ற பகுதி வெறும் பனிரண்டு பக்கங்கள் மட்டுமே. அண்ணா எழுதிய அனைத்து நூல்களும் இந்தப் பனிரண்டு பக்கங்களின் விரிவு என்பது எனது கருத்து. அண்ணா எழுத்தின் சாரம் என்று இந்தப் பகுதியைக் குறிப்பிடுவேன்.

மூன்றாவது அம்சம்: கேள்விகளே இல்லாத மனிதர்களுக்காக

கேள்விகள், அவற்றுக்கான விளக்கம், அந்த விளக்கங்ளில் இருந்து பிறக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்… இறுதியாக, கேள்விகளால் பயனில்லை என்கிற அறிவு….

இவற்றுக்கெல்லாம் காரணம், நமது மனதில் உள்ள தேடல் தானே!

நம் அறிவின் மூலம் இந்த சிருஷ்டி மர்மத்தை அறிந்து விட முடியும் என்பது தானே!

இந்த அறிவு தொலைந்து விட்டால்….?

தேடல் முடிந்து விடும்.

அறிவைத் தொலைப்பது நமக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. ஆனால், எத்தனையோ ஜனங்களுக்கு இந்த அறிவே தேவை இல்லாமல் இருக்கிறது. அறிவுக்குப் பதில் அவர்கள் மனதில் நம்பிக்கை முழுமையாக அமர்ந்திருக்கிறது.

அவர்களுக்குக் கேள்விகள் இல்லை. இந்தப் பிரபஞ்சம் என்பது படைப்பா, லீலையா, மாயையா என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த மனிதர்கள் தங்களை அசாதாரண அறிவாற்றல் ஏதும் இல்லாத சாமானியர்களாக மட்டுமே கருதுபவர்கள். பிரபஞ்சம் என்பது அவர்களைப் பொறுத்த வரை தெய்விகமானது. புராணம் என்பது தங்களுக்குத் தரப்படும் பிரசாதமாகிய பழம். அவர்கள் எந்தக் கேள்வியும் இல்லாமல் அந்தப் பழத்தைச் சுவைத்து ஆனந்தப்படுகிறார்கள்.

‘‘நவராத்திரி நாயகி’’ நூலின் புராணப் பகுதி இத்தகைய வாசகர்களுக்காகவே.

அறிவு ஏற்படுத்தும் குடைச்சல்கள் எதுவும் இல்லாமல் ‘‘அம்மா, நீ அம்மா. நான் உன் குழந்தை’’ என்று மீண்டும் மீண்டும் அம்பாளை நினைத்து ஆனந்திக்கும் வாய்ப்பைத் தருவது இந்தப் பகுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version