― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பொது இடங்களில் தலைவர்களின் சிலைகள்... தேவைதானா?

பொது இடங்களில் தலைவர்களின் சிலைகள்… தேவைதானா?

- Advertisement -

நாடு எங்கிலும் பல்வேறு தலைவர்களுக்கு, பல ஊர்களில், பல சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் விரும்பிப் போற்றும் தலைவர்களுக்கும், சிலை உள்ளது, அது போலவே, கட்சி சார்ந்த தலைவர்களுக்கும் சிலை உள்ளது. யார் ஆளும் கட்சியாக உள்ளனரோ, அந்தக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது, நமது நாட்டில் வாடிக்கை.
இந்துக்கள் கடைபிடிக்கும் இறை வழிபாட்டை, கடுமையாக எதிர்த்த ஈ.வெ.ரா அவர்களுக்கும், சிலை உள்ளது. அதுவும் இந்து மக்கள் வணங்கும் திருக்கோவிலின் அருகே, ஈ.வெ.ரா சிலை இருப்பதை காணும் போது, ஈ.வெ.ரா கூறியதை, அவரின் தொண்டர்களே ஏற்கவில்லையோ? என எண்ணத் தோன்றுகின்றது.

உயர்நீதிமன்ற உத்தரவு :

தமிழகம் முழுவதும் உள்ள பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் சிலைகளை அடையாளம் கண்டு, அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிலைகள் பராமரிப்பு செய்ய ஆகும் செலவுத் தொகைகளை, சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும், சிலைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து, அந்தத் தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் அவர்கள், 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, உத்தரவிட்டு இருந்தார்.

evr statue

சிலை வைக்க நடைமுறைகள் :

எங்கு சிலை வைக்க வைக்கப் பட உள்ளதோ, அந்த பகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியிலோ அல்லது ஊராட்சியிலோ தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தின் முடிவை இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த மாவட்ட காவல் துறையினரிடம் அனுமதி சான்று பெற்று, சிலையை நிர்வகிக்க, ஒரு குழு அமைக்கப் பட வேண்டும்.
சிலை அமைப்பதற்கான அனுமதியை தலைமைச் செயலர் வழங்கியவுடன், அதன் பின்னர் அந்த மாவட்ட ஆளுநர், சிலை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவார்.

சிலையை அமைப்பதன் மூலம், சமூக ஒற்றுமை பாதிக்கப் படக் கூடும், அதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற நிலை இருக்கும் பட்சத்தில், தலைமைச் செயலரும் காவல்துறை டி.ஜி.பி. அலுவலகமும் சேர்ந்து பேசி முடிவு எடுக்கும்.

தனியார் இடத்தில் சிலை வைப்பதாக இருந்தால், அந்த மாவட்ட ஆட்சியரே, அதற்கு உண்டான அனுமதியை வழங்கலாம்.

police evr statue

தமிழகத்தில் உள்ள சிலை :

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு, 673 சிலைகள் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் மட்டும், 40 சிலைகள் உள்ளது.

சிலை வழிபாட்டை கடுமையாக எதிர்த்த ஈ.வெ.ரா அவர்களுக்கு, 495 சிலைகள் உள்ளன. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும், 48 சிலைகள் உள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களுக்கு, 1104 சிலைகள் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே, 120 சிலைகள் உள்ளன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, 61 சிலைகள் உள்ளன. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும், 17 சிலைகள் உள்ளது.

முன்னாள் பிரதமர்களான நேரு அவர்களுக்கு 50 சிலைகளும், இந்திரா காந்தி அவர்களுக்கு 147 சிலைகளும், ராஜீவ் காந்தி அவர்களுக்கு 122 சிலைகளும் உள்ளன.

தமிழகத்தில் ஓரு மாவட்டத்திற்கு, ஒரு தலைவரின் சிலையை மட்டும் வைத்து, அவருக்காக இன்னொரு சிலை வைப்பதற்கு பதிலாக, அந்த பணத்தைக் கொண்டு, அந்த தலைவர்களின் பெயரிலேயே, பள்ளிக்கூடம் தொடங்கி இருந்தால், அதன் மூலமாக நிறைய குழந்தைகளுக்கு கல்வி கிடைத்து இருக்கும். அந்தத் தலைவர்களின் பெயரால், நிறைய குழந்தைகள் பாடம் பயின்று இருப்பார்கள். அந்தத் தலைவர்களின் பெயர்களும், குழந்தைகள் மனதில் தங்கி, அதன் மூலம் அவர்களின் புகழுக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்து இருக்கும், என சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

gandhi statue karur

சட்டம் – ஒழுங்கு :

சமுதாயத்திற்காக, பல தியாகங்கள் செய்த தலைவர்களை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அவர்களை சாதி ரீதியாக அடையாளப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, அப்படி ஒரு துயர சம்பவம், நாடு முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

சிலர் வன்முறையைத் தூண்டும் விதமாக, மக்களின் மனது புண்படும் வகையில், சிலைக்கு ஏதேனும் சேதாரத்தையோ அல்லது அவமரியாதையையோ செய்து விடுகின்றனர். அதன் மூலமாக, சமூகத்தில் பதற்றம் நிலவுவதுடன், வன்முறை சம்பவங்களுக்கும், சாதி கலவரத்திற்கும் அது காரணமாக அமைந்து விடுகின்றது.

அந்த தலைவர்களின் பிறந்த நாள் அன்றோ அல்லது நினைவு நாளன்று மட்டுமே, அவர்களின் சிலைகள் பளிச்சென மின்னும். மற்ற நாட்களில், சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தூசி படிந்து, அழுக்குடன் இருப்பதை காணும் போது, தேச பக்தர்களுக்கு மிகுந்த வருத்தமாக இருக்கின்றது.

ஆட்சி மாறியவுடன் மாற்றப் படும் தலைவர்களின் பெயர்கள்:

மாவட்டங்களின் பெயர்கள், போக்குவரத்து கழகங்களின் பெயர்கள், பல்கலைக்கழகங்களின் பெயர்கள், மருத்துவ மனைகளின் பெயர்கள் என யார் ஆளும் கட்சியாக வருகின்றனரோ, அவர்களுக்கு பிடித்த தலைவர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமான ஒன்று.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், பெரியார் மாவட்டமாக இருந்தது “ஈரோடு” ஆகவும், அண்ணா மாவட்டம் “திண்டுக்கல்” மாவட்டமாகவும், வ.உ.சி. மாவட்டம் “தூத்துக்குடி” மாவட்டமாகவும் பெயர் மாறியது.

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் கட்சிகள், தங்களின் தலைவர்களின் சிலைகளை பொது இடங்களில் வைத்து விடுகின்றனர். ஆட்சி மாறியவுடன், அந்த தலைவர்களின் சிலைகள் பராமரிப்பின்றி காணப் படுகின்றது.

பொது இடங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் சாலைகளில், சிலைகள் வைப்பதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், இல்லை என்றால் மக்கள் மனதில் அச்சத்தை போக்க முடியாது எனவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் அவர்கள், தன்னுடைய கருத்துகளை தெரிவித்து உள்ளார்.

எந்த ஒரு மனிதருக்கும், நமது வரலாறு நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும். அந்த வரலாற்றை, சிலை வைப்பதன் மூலமாகத் தான் தெரியப்படுத்த வேண்டுமா? என்பதே சமூகத்தில் எழும்பும் கேள்வியாக உள்ளது. அந்தத் தலைவர்களின் வரலாற்றைப் படித்தோ அல்லது அவர் பெயரில் நூலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமைத்தோ, அதன் மூலம் அந்த தலைவர்களின் பெயர்களை, மக்கள் மனதில் நன்கு பதிய வைக்கலாம்.

ஆனால், தங்களது கட்சியினரை திருப்திப்படுத்த, தங்கள் கட்சித் தலைவரின் சிலைகளை வைப்பதால், சமூகத்தில் வீண் குழப்பம் ஏற்படுவதை, தவிர்க்க முடியவில்லை, என்பதே நிதர்சனமான உண்மை.

– அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version