― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பெண்கள் முன்னேற்றம் குறித்து அன்றே சிந்தித்த... ஔவையார்!

பெண்கள் முன்னேற்றம் குறித்து அன்றே சிந்தித்த… ஔவையார்!

- Advertisement -

உலகப் பெண்கள் தினம் – 08.03.2022
அறிந்துகொள்வோம் – ஔவையார்

-> முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெண்கள் எப்போதுமே சிறப்பாக மதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்மைக்காலத்தில் பெண்களைப் பற்றிய நூல்களை எழுதுபவர்கள் “லீலாவதியின் மகள்கள்” என்று பெயரிடுகிறார்கள். ஏன் தெரியுமா?

பாஸ்கராச்சார்யா என்ற கணித அறிஞரின் மகள் பெயர்தான் லீலாவதி. அவளுக்கு ஜோதிடப்படி திருமணம் நடைபெறவில்லை. எனவே அவளை உற்சாகப் படுத்த பாஸ்கராச்சார்யர் லீலாவதி கணிதம் என்ற நூலை எழுதினார் என்பது வரலாறு. ஒரு கணிதப் புதிரை பாஸ்கராச்சார்யா சொல்வது போலவும் லீலாவதி அப்புதிரை விடுவிப்பது போலவும் அந்த நூல் இருக்கும் லீலாவதியும் தனது தந்தையைப் போல அறிவாளிதான். இன்றைய தினம் மேற்கத்திய தாக்கத்தின் காரணமாக நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம். வாழ்த்துகள் பரிமாறிக்கொள்கிறோம்.

ஆனால் பாரதத்தின் பெருமைமிகு பெண்களை நினைவிற்கொள்வதைல்லை. அக்குறையைப் போக்க இன்று நாம் ஔவையாரைப் பற்றி நாம் அறிந்துகொள்வோமா? ஔவையார் சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒவராகத் திகழ்ந்தவர். அதியமானின் வீரத்தையும், கொடையையும் பொருளாகக் கொண்டு பாடியது அவர் பெரும்புகழ் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது எனலாம். ஔவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஒருவரா? அல்லது பலரா? ஒருவராக இருந்தால் அவர் எங்ஙனம் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருந்தார்? என்ற பற்பல வினாக்கள் நம் உள்ளத்தே எழுகின்றன. ஔவை என்ற பெண்பாற் புலவரின் ஆளுமை காலங்கடந்தும் நிற்பதற்கு அவரின் படைப்புகளும் அவரின் வாழ்க்கையுமே காரணமாகும்.

ஔவையார் ஒருவரா? பலரா?

சங்க கால ஔவையாரையும் கி.பி. 17,18-ஆவது நூற்றாண்டுகளில் பந்தனன்தாதி என்னும் வணிகக் குலப் புகழ் பாடும் நூலாசிரியராகிய ஔவையாரையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் காண்கிறோம். இடைப்பட்ட காலத்திலும் ஔவையார் பலர் வாழ்ந்திருக்கின்றனர். தமிழில் சிறந்து விளங்கும் பெண் குழந்தைகளுக்கு இந்த நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயரை வைப்பது ஒரு வழிவழி வந்த செயலாக இருக்கிறது. பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ. அவர்கள் ஔவை மரபைக் குறித்து – ‘‘பண்பாடு, சமயம், கவிதை யாவற்றிலும் சிறந்ததைக் குறிக்கும் மரபாகத் தமிழ்நாட்டில் ‘ஔவை’ வழங்குகிறது என்று குறிப்பிடுகிறார்.

பிள்ளைகள் முதலிற் படித்து நெட்டுருப் பண்ணும் வாக்கியங்கள் பெரும்பாலும் ஔவையாரின் வாக்கியங்கள் என்று சொல்லப் படுவதால் உலகத்தார், ஔவையார் வாக்கியங்களல்லாத பழஞ்சொற்களையும் அவர் வாக்கியங்கள் என்றே வழங்குவர். சங்கத் தமிழ் வளர்த்த ஔவையார் பெயரைக் கொண்டே ‘‘சங்கத் தமிழ் மூன்றும் தா’’ என்பது போன்ற புராணக் கதையெல்லாம் வரலாற்றில் புகுந்துவிட்டன.

தமிழிலக்கிய வரலாற்றில் ஔவையார் பலர் வாழ்ந்திருக்கின்றனர். ஔவையாரைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறிப் போந்துள்ளனர். ஔவையார் பெயருடன் இயைத்து எழுதப்பட்டும், கர்ண பரம்பரையாகவும் வழங்குகின்ற கதைகள் அளவில்லாதன. புலவர் புராணமுடையாரே ஔயைார் இருவர் எனத் துணிந்து, முன் ஔவை கலிவருட மூன்றாவதாயிரத்தாள் பின் ஔவை நான்காவதாயிரத்திற் பிறந்திட்டாள்’ என்று ஔவையார் பலர் என்பதை உறுதிப்படுத்துவார்.

1901இல் முருகதாச சுவாமிகள் அவர்களால் இயற்றப்பட்ட புலவர்புராணக் கருத்தை அடியொற்றி, ‘‘அவ்வையார் இருவர் இருந்தனர் என்பதற்கே ஆதாரம் ஏற்பட்டுள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் அவ்வையார் பாட்டுக்களென்று காணும் பாட்டுக்கள் இயற்றியவர் ஒருவர்…..

மற்றைப் பிற்காலத்துப் பாட்டுக்களையும் அவ்வையார் பெயரால் வழங்கும் நூல்களையும் இயற்றியவர் அவர் பெயரைக் கொண்ட வேறொரு புலவராதல் வேண்டும்’’ என திரு.எஸ்அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் மொழிவர். நான்கு ஔவையார்கள் நந்தமிழ் நாட்டில் உலா வந்திருக்கின்றனர்.

(1) கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் ஒருவர்.

(2) சமய காலத்தில் வாழ்ந்த ஔவையார் ஒருவர்.

(3) கம்பர் – ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த ஔவையார் ஒருவர்.

(4) அதன் பின்னர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலான அற நூல்களை அள்ளி வழங்கிய ஔவையார் ஒருவர் என்று பேராசிரயிர் மு.கோவிந்தாரசன் குறிப்பிடுகிறார்.

ஔவை என்னும் சொல்லிற்குத் தாய், தவம் செய்யும் பெண், கிழவி எனச் சென்னைக் கழகத் தமிழ்க் கையகராதி பொருள் கூறுகின்றது. அவ்வா என்னும் சொல் கன்னடத்தில் ‘அம்மை’ என்னும் பொருளில் நாம் அம்மா எனப் பெண்களை அழைத்தற் பொருளில் வருகிறது.

அதே சொல் தெலுங்கில் இன்று ‘பாட்டி’ என்னும் பொருளைத் தருகிறது. எனவே ஔவையாரைப் பாட்டியாக்கி ஒருவித குழப்ப நிலையைத் தோற்றுவித்துவிட்டார்கள் என்ற பேராசிரியர் மு. கோவிந்தராசனின் கருத்துப் பொருந்துவதாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையிலும் அமைந்துள்ளது. இதேபோல், ‘‘அதியமான் நெடுமானஞ்சி, பாரி, மலையமான், பொகுட்டெழினி, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவென்கோ, கிள்ளிவளவன், தொண்டைமான், முடியன், கொண்கானத்து நன்னனன் இப்படிப் பல மன்னர்களையும் குறுநில மன்னர்களையும் பாடியவர் ஒருவராக இருக்க முடியாது.

கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகிய ஆஸ்தானக் கவிஞர்களிடையிலும் சுந்தரமூர்த்தி நாயன்மார் காலத்திலும் இருந்த ஔயைார் ஒருவராக இருத்திருக்க வாய்ப்பில்லை.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி மற்றும் தனிப்பாடல்கள் பாடிய ஔயைாவர் நாடோடிப் புலவர் என்ற கருத்தும் சிந்தனைக்கு உரியதாக அமைந்துள்ளது எனலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version