― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சமஸ்கிருத நியாயமும் விளக்கமும்(30): ஸ்மசான வைராக்ய ந்யாய..(2)

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும்(30): ஸ்மசான வைராக்ய ந்யாய..(2)

- Advertisement -

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 30 தொடர்ச்சி
தெலுங்கில் –பி.எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ஸ்மசான வைராக்ய ந்யாய:

ஸ்மசானம் – இறுதிக் கிரியை நடத்தும் இடம்
வைராக்யம் – துயரங்களை நீக்கும் தெளிவு

தற்காலிகமாக ஏற்பட்ட ஆவேசத்தில் எடுக்கும் முடிவுகள் அதிக காலம் நீடிக்காது. இந்த வைராக்கியத்தில் முக்கியமான மூன்று பிரசித்தியானவை. மயான வைராக்கியம், புராண வைராக்கியம், பிரசவ வைராக்கியம்.

மயான வைராக்கியம் –

இந்திய சம்பிரதாயங்களின்படி இறந்த உடலை தீக்கிரையாக்குவர். சிலர் மண்ணில் புதைப்பர். பதினாறு சமஸ்காரங்களில் அந்தியக் கிரியை இறுதியானது. ஜீவனுக்கு சேவை செய்த இயற்கையிடம் உடலைத் திரும்ப கௌரவத்தோடு சமர்ப்பிப்பது அந்தயக் கிரியையில் உள்ள சிறப்பு. தமக்கு விருப்பமானவர்களின் உடலை தகனம் செய்தவுடன், அல்லது புதைத்தவுடன் அங்கு கதறியழும் உறவினர்களைப் பார்த்து அனைவருக்குமே வைராக்கியம் ஏற்படும். உறவு, பாசம் எல்லாம் ஒரு போலி நாடகம் என்ற பாடல் கூட நினைவுக்கு வரும்.

உடலைத் துறந்தபோது நம்மோடு கூட வருவது நாம் செய்த தர்மமே என்ற குருமார்களின் சொற்களும் நினைவுக்கு வரும். உறவினர்களும் நண்பர்களும் திரும்பிப் பார்க்காமல் சென்று விடுவார்கள். அதைப் பார்க்கையில் இறை சேவையும் பரோபகாரமும் செய்து கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு கண நேரத்தில் ஏற்பட்ட கோபமோ, சோகமா, துக்கமா அதிக காலம் நீடிக்காது என்பது இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்த வரம். இந்த அனுபவங்கள் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பல கதைகளிலும் புராண, இதிகாசங்களிலும் கூட இதைப்பற்றி படித்துள்ளோம். கேட்டுள்ளோம்.

ராமாயணத்தில் சுக்ரீவனின் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், ராமனிடம், “ராமா, வாலி எனக்கு அண்ணன். அவனே எனக்கு எதிரியும் கூட. நான் சுகமாக இருக்க வேண்டும் என்றாலும் உயிரோடு இருக்க வேண்டும் என்றாலும் அவன் இறந்தால் தான் நடக்கும்” என்று கூறுவான்.

ஸ்ரீராமர் வாலியை வதைத்த பின்பு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வாலி, சுக்ரீவனிடம், “அங்கதனை நீ பெற்ற மகனாக எண்ணி பார்த்துக்கொள்” என்று கூறி தன் கழுத்தில் இருந்த காஞ்சனமாலையை சுக்ரிவனுக்கு அணிவித்து, அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரை விட்டான். அங்கிருந்த குரங்குகள் எல்லாம் ஹோவென்று அழுதன.

தாரை கண்ணீரால் கணவனின் உடலுக்கு அபிஷேகம் செய்தாள். சுக்ரீவனின் இதயம் கரைந்தது. மயான வைராக்கியம் அவனைச் சூழ்ந்து கொண்டது. ராமனிடம், “ராமா, வாலி ஒரு மகாத்மா. எனக்கு அண்ணா. அப்படிப்பட்ட அண்ணனைக் கொன்ற பிறகு எனக்கு சொர்க்க ராஜ்ஜியம் கிடைக்குமா? என்னை மகா பாபம்தான் சூழும். நான் இனி மேல் உயிரோடு இருக்க மாட்டேன். அக்னியில் குதித்து மடிவேன். உன் கட்டளைப்படி இந்த வானர வீரர்கள் உனக்கு சீதையைத் தேடுவதில் உதவி செய்வார்கள். நான் குல நாசனம் செய்த மகா பாவி” என்று துயரமடைந்தான்.

ராமனுக்குக் கூட கண்ணீர் வந்தது. இனி தாரையைப் பார்ப்போம். “ராமா, வாலியை வதைத்த பாணத்தாலேயே என்னையும் கொன்று விடு. நானும் வாலியோடு சேர்ந்து சொர்க்கத்துக்குச் செல்கிறேன். பெண்ணைக் கொல்வது குற்றமென்று எண்ணாமல் என்னைக் கொல்” என்று அழுதாள். அதன் பிறகு நடந்த கதை நாம் அறிந்ததே.

உயிருக்கு உயிரானவர்கள் மரணிக்கும் போது அந்த துயர நேரத்தில் கொந்தளித்து வரும் ஆலோசனைகளும் ஆவேசங்களும் சற்று நேரத்தில் சமநிலைக்கு வந்து விடும். வரவேண்டும். அதுவே விஷ்ணுவின் மாயை. அதுவே மயான வைராக்கியம். தன்னோடு சேர்ந்து வாழ்ந்த மனிதர் தீயில் எரிந்து சாம்பலாகும்போது யாருக்குத்தான் துக்கம் வராது?

அதன் பிறகு மறதி ஏற்பட வேண்டும். அதுதான் இயற்கை. இறந்த அன்று வீட்டில் இருந்த சூழ்நிலை பத்தாவது நாள் இருக்காது என்பதை நாம் பார்க்கிறோம். அதுவே க்ஷண காலத்தில் மறையும் மயான வைராக்கியம்.

புராண வைராக்கியம் –

இறுதித் தேர்வுக்கு முன் வைத்த பரீட்சையில் நாற்பது மார்க் எடுத்த மாணவன் தன் தவறை உணர்ந்து வரப்போகும் இறுதித் தேர்வில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்வான். அலாரம் வைத்து விடியற்காலையில் எழுந்து படிக்கத் தொடங்குவான். இரண்டு மூன்று நாட்கள் ஆன பின்பு அவனுடைய சிந்தனை மாறும். எப்போதோ வரும் பரீட்சைக்காக இப்போதே எதற்காக படிக்க வேண்டும் என்று சோம்பலாக படுத்துறங்குவான். இது ஒரு வித புராண வைராக்கியம்.

ரத்தப் பரிசோதனை முடிவைப் பார்த்ததும் சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்ததும் உணவிலும் பழக்க வழக்கங்களிலும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்றும் நாவை அடக்க வேண்டும் என்றும் சாப்பிடக்கூடாதவற்றை திரும்பிக் கூட பார்க்கக் கூடாது என்றும் பிரதிக்ஞை எடுத்துக் கொள்வார்கள். எத்தனை நாட்கள்? ஓரிரு நாட்கள். மீண்டும் பழைய கதை தான். இது கூட புராண வைராக்கிய நியாயத்திற்கு உதாரணமே.

ஆன்மீகப் பிரவசனம் கேட்கும் சமயத்தில் எடுத்துக் கொள்ளும் புதிய தீர்மானங்கள் வெளியில் வந்த உடனே காற்றில் பறந்து போகும். புண்ணியச் செயல்கள் மீது ஆர்வம் நிலையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனித மனம் அதில் ஈடுபட விடாது. அதுவே புராண வைராக்கியம்.

இதைப் போன்றவை நமக்குப் பழக்கம்தானே. புராண வைராக்கியம் பற்றி ஒரு சுவாமிஜி ஒரு கதை கூறுவது வழக்கம்.

தன் ஆசிரமத்தில் நடந்த ஒரு ஆன்மீக முகாமிற்கு வந்த ஒரு இல்லாள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு அதன் தாக்கத்தால், “சுவாமிஜி, வரும் மாதத்தில் எங்கள் இரண்டாவது மகளுக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. அதன் பிறகு என் பொறுப்பெல்லாம் தீர்ந்துவிடும். இனி உங்கள் ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்து கொண்டு நீங்கள் கூறும் தெய்வீக பிரசங்கங்களைக் கேட்டு உய்வடைவேன்” என்று பணிவோடு கூறினாள்.

அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அவளைப் பார்த்த சுவாமிஜி, “நன்றாக இருக்கிறாயா, அம்மா, சௌக்கியமா? உன் இரண்டாவது பெண்ணுக்குத் திருமணம் ஆனதா? ஆசிரம சேவைக்கு எப்போது வருகிறாய்?” என்று புன்னகையோடு கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “சுவாமிஜி, பெரிய பையனுக்கு மகன் பிறந்திருக்கிறான். அதற்காக அமெரிக்கா செல்கிறேன்” என்றாள்.

புராணம் செவிமடுத்த ஆயிரம் பேரில் ஒருவருக்கு கடவுள் மீது பற்று ஏற்படும் என்று கீதாச்சாரியன் கூறினான் அல்லவா?

சுலோகம்
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே|
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத:||
-7/3

பிரசவ வைராக்கியம் –

குழந்தையை பிரசவிக்கும் தாய் படும் அவஸ்தை வர்ணனைக்கு எட்டாதது. ஆண்களுக்குப் புரியாத வேதனை இது. சிலருக்கு இந்த வலி மணிக்கணக்காக இருக்கும். பிரசவ வலியில் பெண்கள் துடிதுடித்து அழும்போது மீண்டும் குழந்தையே பெறக் கூடாது என்று தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பிரசவமான பின்பு குழந்தையின் முகத்தைப் பார்த்த உடனே ஆனந்தத்தில் அந்த வைராக்கியம் எல்லாம் காணாமல் போய்விடும். இது இயற்கை நியதி.

இந்த மூன்றும் புல்லில் பிடித்த தீ போல சற்று நேரம் இருந்து அணைந்து விடக் கூடியவை என்பதே இதன் கருத்து. அவ்வாறு இல்லாமல் நிலையான வைராக்கியம் ஏற்பட்ட மனிதன் சுயமாக நாராயணனே ஆவான் என்பது சாஸ்திர வாக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version