
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 31
தெலுங்கில் –பி.எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
கூப மண்டூக ந்யாய: – (கூப: – கிணறு, மண்டூக: – தவளை)
கிணற்றுத் தவளை போல…
கிணற்றில் பிறந்து வளர்ந்து அங்கேயே வாழும் தவளை அந்த கிணற்றையே உலகம் என்று எண்ணுகிறது. இந்த ‘கூப மண்டூக’ நியாயத்தின் கருத்து கடல் போல் பெரியது. நமக்குத் தெரியாத உலகம் இன்னும் எத்தனையோ பெரியதாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும், பணிவோடு இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறது இந்த நியாயம். கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு என்று கூறுகிறது இந்த நியாயம். நமக்கு இருக்கும் சிற்றறிவின் அளவு பெரிய அறிஞரோடு உரையாடும் போது புரியவரும்.
வாழ்நாள் முழுவதும், தான் இருக்கும் நிலையே உயர்ந்தது என்று எண்ணும் மனிதரின் நிலை, தான் இருக்கும் கிணறே சுவர்க்கம் என்று எண்ணும் தவளையின் நிலையைப் போன்றது என்று குறிப்பிடுகிறது இந்த நியாயம்.
தானே உயர்ந்தவன் என்ற சிந்தனையே வேறுபாடுகளைத் தோற்றுவிக்கிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். சர்வமத பேரவையில் சுவாமிஜியின் முதல் சொற்பொழிவு 1893 செப்டம்பர் 11ம் தேதி சிகாகோவில் நிகழ்ந்தது. அதில் சனாதன தர்மத்தின் பெருமையை வெளிப்படுத்திய பின் விவேகானந்தருடைய புகழ் அமெரிக்காவெங்கும் எதிரொலித்தது.
தம் மதமே உயந்ததென்று எண்ணும் அகங்காரம் நிறைந்த மேலைநாட்டு மேதாவிகளுக்கு மனதில் உரைக்கும்படியாக 15-9-1893 அன்று சுவாமி விவேகானந்தர் இந்த கிணற்றுத் தவளை நியாயத்தை விளக்கிக் கூறினார்.
தவளை ஒன்று, ஒரு கிணற்றில் பிறந்து அங்கேயே நீண்ட காலமாக வளர்ந்து அங்கேயே வசித்து வந்தது. அப்படியிருக்கையில் கடலில் பிறந்து வளர்ந்த தவளை ஒன்று எப்படியோ இந்த கிணற்றை வந்தடைந்தது. அவற்றின் இடையில் உரையாடல் நிகழ்ந்தது.
நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டது கிணற்று தவளை.
கடலில் இருந்து என்றது கடல் தவளை.
கடலா? அது எத்தனை பெரிதாக இருக்கும்? என்று கேட்டு ஒரு குதி குதித்து. இத்தனை பெரிதாக இருக்குமா? என்று கேட்டது கிணற்றுத் தவளை.
நண்பா! உன் சின்ன கிணற்றோடு கடலை எவ்வாறு ஒப்பிட முடியும்? என்று கேட்டது கடல் தவளை.
கிணற்றுத் தவளை மீண்டும் சற்று பெரிதாகக் குதித்து, உன் கடல் இத்தனை பெரியதா? என்று கேட்டது.
இது என்ன அர்த்தமற்ற கேள்வி? கடல் எத்தனை பெரியது என்று இந்த கிணற்றுக்குள் அமர்ந்து எப்படி விவரிப்பது? என்று கேட்டது கடல் தவளை.
அதற்கு கிணற்றுத் தவளை, என் கிணற்றை விட எதுவும் பெரியதாக இருக்க இயலாது. நீ பொய் சொல்கிறாய் என்று கடல் தவளை மீது குற்றம் சுமத்தியது.
அறியாமை மிகுந்த கிணற்றுத் தவளை, கடல் தவளையின் சொற்களை நம்பவில்லை.
எங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது என்று வாதம் செய்த மேல்நாட்டவருக்கு சுவாமிஜி இந்தக் கதையின் வடிவில் பதிலளித்தார். தன் சின்ன கிணற்றில் அமர்ந்து அதுவே அகில உலகம் என்று எண்ணினால் அது மூர்க்க குணமே என்று துணிச்சலாக ஹிதோபதேசம் செய்தார்.
ஒரே நூலும் ஒரே திருத்தூதரும் கொண்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களிடம் உங்கள் நூல் என்ன என்று கேட்டால், என்ன சொல்வது? அவர்களிடம் எப்படி விளக்குவது? வேதங்களா? உபநிஷத்துகளா? இதிகாசமா? தர்ம சாஸ்திரமா? வேதாந்த நூல்களா? புராணங்களா? சனாதன தர்மம் ஒரு மகா சமுத்திரம்.
திருத்தூதர்களின் மதங்கள் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ள சனாதன தர்மத்தோடு அவற்றை எவ்வாறு ஒப்பிடுவது? சமுத்திரத்தை தம் வாழ்நாளில் ஒரு முறை கூட பார்க்காதவர்களுக்கு அதன் பரந்து விரிந்த விசாலத் தன்மை எவ்வாறு புரியும். இதுவே கூப மண்டூக நியாயத்தின் உட்பொருள்.
ருக் வேத மந்திரம் – “ஆனோ பத்ர: க்ரதவோ யாந்து விஸ்வத: “
பொருள் – அனைத்து புறங்களில் இருந்தும் நல்ல சிந்தனைகள் எமக்குக் கிடைக்கட்டும்.
விசாலமான சமுத்திரம் போன்ற வேதக் குவியல்கள், விசாலமான கண்ணோட்டத்தை பாரதியர்களுக்கு போதித்துள்ளது. ஆனால் மேல் நாட்டோர், எங்கள் மதமே சொர்கத்திற்கு இட்டுச் செல்லும். எங்கள் மதமே சரியான்து. நீ சைத்தான் என்று சிந்திப்பதும், பேசுவதும் இந்த கூப மண்டூக நியாயக் கதையில் வரும் தவளைக்கு உதாரணம்.
ஹிந்து மதம், பழங்காலத்திலிருந்து நிலவும் விசாலமான சமுத்திரம் போன்றது. மிகப் பரந்தது. பல விதமான தத்துவ விசாரணைகளுக்கு அனுமதியளிக்கிறது. பாரதிய தத்துவ விசாரணையோடு ஒப்பிட்டால் இதர தேசங்களின் தத்துவ விசாரணைகள் எல்லாம் கிணறு போன்றவையே என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இதனை கூப – கூர்ம – நியாயம் என்று கூட அழைப்பர். ஆமை, தான் பிறந்த கிணற்றிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்கும். அங்கேயே திரிந்து, வெளி உலகம் என்று ஒன்று இருப்பதையே அறியாமல் வாழும். குறுகிய மனப்பான்மை கொண்டவர்களை வர்ணிப்பதற்கு இந்த நியாயத்தை உதாரணமாகக் கூறுவர்.
பூமண்டலத்தின் மீது வாழ்பவர் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக வாழ வேண்டும் என்பது பரந்த உள்ளம் படைத்த பாரதியர்களின் கருத்து. வசுதைவ குடும்பகம் என்பது நம் கொள்கை.
அயம் நிஜ: பரோ வேத்தி குணனா லகுசேதஸாம் |
உதார சரிதானாந்து வசுதைவ குடும்பகம் ||
சனாதன தர்மம் போதிக்கும் உத்தமமான தத்துவம் இது. பரந்த சனாதன தர்மம் என்ற சமுத்திரத்தோடு ஒப்பிட்டால் பிற தேசங்களின் தத்துவ விசாரணை கிணறு போன்றதே.
“குறிப்பிட்ட தெய்வம்தான் உயர்ந்தது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுகமாக இருக்க வேண்டும்” போன்ற பிரார்த்தனைகள் சில மத நிலையங்களில் போதிக்கப்படுவது கிணற்றுத் தவளையின் இயல்புக்கு உதாரணம்.
சர்வே பவந்து சுகின: – சர்வே சந்து நிராமயா: |
சர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் து:க பாக்பவேத் ||
அனைவரும் நலமாக இருக்க வேண்டும் விரும்பும் மதம் சனாதன தர்மம். இந்த உலகில் அனைவரும் சுகமாக வாழ வேண்டும். யாருக்கும் துன்பம் நேரக் கூடாது போன்ற சுலோகங்களும் அவற்றுக்கு மூலமான வேத மந்திரங்களும் பண்டைய காலத்திலிருந்து பாரதியர்களின் நாவில் நடனமாடுகின்றன.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கதை ‘கூப மண்டூக’ நியாயத்தை நினைவுபடுத்துகிறது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவரான ஒரு பெண்மணி, மறைந்த தம் தலைவரின் பெயரின் ஏற்பாடு செய்த டிரஸ்ட் வழியாக பில்கேட்ஸ் என்ற ஒரு அறிஞருக்கு விருது அளித்து செய்த சொற்பொழிவில், “தானம் செய்யும் குணத்தை மேல்நாட்டவர் (கிறிஸ்தவர்) இந்தியருக்கு கற்றுக் கொடுத்தார்கள்” என்றார்.
ஆர்ஷ வித்யா குருகுல ஸ்தாபகர் சுவாமி தயானந்த சரஸ்வதி, இந்த பேச்சைக் கேட்டு மிகவும் வருந்தினார். “ஒரு பறவையின் உயிரைக் காப்பதற்கு தன் உடலை அறுத்து அளித்த சிபி சக்ரவர்த்தி பிறந்த தேசம் நம்முடையது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த மதங்களுக்கு எவ்வாறு தெரியும்?” என்றார் அவர்.
பாரத தேசத்தை ஆண்ட ஒரு அரசன் தன் விருப்பத்தை அறிவிக்கையில் இவ்வாறு கூறினான். “எனக்கு அரசாட்சியின் மீது ஆசை இல்லை. சுவர்கத்தின் மீதும் விருப்பம் இல்லை. எனக்கு மோட்சம் வேண்டாம். கஷ்டத்தில் வருந்தும் மக்களின் துன்பங்களை தீர்க்கவேண்டும் என்பதே என் ஆசை”. இதுவே பாரதியம் என்பது.
இந்தியர்களுக்கு தானம் செய்யும் குணம் இல்லை என்று கூறுவதும் அதற்கு வக்காலத்து வாங்கி மேல்நாட்டு பத்திரிக்கைகள், “Indian coporates … take out your purse” என்று நமக்குக் கூறுவதும் – கிணற்றுத் தவளை நியாயத்தை நினைவூட்டுகிறது.
சனாதன தர்மத்தை மற்ற மதங்களோடு ஒப்பிடுவதும், அவர்களின் மத நூல்களை பகவத் கீதையோடு ஒப்பிடுவதும், சனாதன தர்மத்தில் உள்ள ஓம்காரத்தை மற்ற மதங்களின் குறியீடுகளோடு ஒப்பிடுவதும் சமீபத்தில் வழக்கமாகி வருவதைக் காண முடிகிறது. இப்படிப்பட்ட சிந்தனை இந்த கிணற்றுத் தவளை நியாயத்திற்கு உதாரணமே.
ஆசாரிய புல்லெல ஸ்ரீராமசந்த்ருடு அவர்கள் இந்த ‘கூப மண்டூக’ நியாயத்தை ஒப்பிட்டு, “மதம் மாறும் ஹிந்துக்களின் நிலைமை, கையில் உள்ள சிந்தாமணியை தூக்கி வீசிவிட்டு, தகதகவென்று மின்னும் கண்ணாடித் துண்டை கையில் எடுத்துக் கொள்வது போன்றது” என்றார்.
மாக்ஸ்முல்லர், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் செயலராக இருந்த ஆர்கில் டியூக்கிற்கு எழுதிய கடிதத்தில் (1868) இவ்வாறு கூறுகிறார். “இந்தியாவில் உள்ள பழங்கால மதம் அழிந்து தீர வேண்டும். இப்போது கிறிஸ்தவ மதம் இந்த தேசத்திற்குள் நுழையாவிட்டால் அது பெரிய தவறாகி விடும்”. தம் மதமே உயர்ந்தது என்ற அகங்காரம் அந்த கடிதத்தில் தென்படுகிறது.
இவ்விதம், தாமே உயர்ந்தவர் என்றும் தாம் உள்ள நிலையே சிறந்தது என்றும் எண்ணும் அஞ்ஞானிகளுக்கும் அகம்பாவிகளுக்கும் பாடம் போதிக்கிறது இந்த ‘கூப மண்டூக’ நியாயம் அல்லது ‘கூப கூர்ம’ நியாயம்.