― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்விஜயகாந்த்: ‘அடிமை’ ஊடகங்கள் துணையுடன் திட்டமிட்டு ‘ஒழித்துக் கட்டப்பட்ட’ நல்ல மனிதர்!

விஜயகாந்த்: ‘அடிமை’ ஊடகங்கள் துணையுடன் திட்டமிட்டு ‘ஒழித்துக் கட்டப்பட்ட’ நல்ல மனிதர்!

- Advertisement -
vijayakanth

தேமுதிக., தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. அவருடைய மறைவை அடுத்து தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றன.

பிறப்பு பின்னணி:

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆகஸ்டு 25-ல் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ். சினிமாத்துறைக்கு வந்த பின்னாளில் தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். தன் தாய் தந்தை பெயரில் அறக்கட்டளை கல்லூரி என தொடங்கி நடத்தி வந்தார் விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள்.

வராத படிப்பு! வந்த நடிப்பு!

சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. படிப்பை நிறுத்திய பிறகு கீரைத்துரையில் இருக்கும் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார். எனினும் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது.

விஜயராஜ் – விஜயகாந்த்

சினிமாவில் நடிக்கும் முடிவுடன் சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979ல் எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். சட்டம் ஒரு இருட்டறை’, தூரத்து இடிமுழக்கம்’,அம்மன்கோவில் கிழக்காலே’, உழவன் மகன்’,சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984ல் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

நடிகர் – நடிகர் சங்கத் தலைவர்

1999ல் நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

ரசிகர் மன்றம் – அரசியல் கட்சி

தென்னிந்திய, அகில இந்திய' என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982-ல்தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ எனவும் பெயர் மாற்றம் செய்தார். 2000 பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். பின் 2001ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர்.

2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் தலைகாட்டின. விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் பார்த்து ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்தன.

ஒருமுறை கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமணவிழாவில் விஜயகாந்த் வருகையை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக்கம்பங்களை பா.ம.க-வினர் வெட்டிச் சாய்த்தனராம்! பின், திருமண நிகழ்வில் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸையும் விஜயகாந்த் விமர்சிக்க, பதிலுக்கு விஜயகாந்தை ராமதாஸ் விமர்சிக்க, ராமதாஸ் – விஜயகாந்த் மோதல், பா.ம.க தொண்டர்கள் – விஜயகாந்த் ரசிகர்கள் என விரிவடையத் தொடங்கியது. பல இடங்களில் விஜயகாந்தின் மன்றக்கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட, மன்ற நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். விஜயகாந்த் நடித்த `கஜேந்திரா’ படத்துக்கு ராமதாஸால் சிக்கல் எழுந்தது. விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து வட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

கண்கள் சிவக்க வெகுண்ட விஜயகாந்த். ஊர் ஊராகச் சென்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். சென்ற இடங்களிலெல்லாம் விஜயகாந்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. விஜயகாந்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு அறிவிப்பு என அதிரடி காட்டினார் விஜயகாந்த். அந்நேரம் கோயம்பேடு மேம்பால விரிவாக்கத்துக்காக விஜயகாந்தின் மண்டபம் கையகப்படுத்தவிருப்பதாக திமுக., அங்கம் வகித்த மத்திய அரசின், தேசிய நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வந்தது. இது திமுக.,வுக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான மிகப் பெரும் மோதலாகப் பார்க்கப் பட்டது. மண்டபம் இடிக்கப்படாமலேயே சாலை கட்டமுடியும் எனும் போது, வேண்டுமென்றே அரசியல் ரீதியாக வம்பிழுப்பதாகவே அது கருதப் பட்டது. திருமண மண்டப இடிப்பை தடுக்க முடியாமல், அரசியல் பிரவேசம் பற்றி விஜயகாந்த் பேசியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், 2005, செப்டம்பர் 14-ல் மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

சட்டமன்ற உறுப்பினராக

கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடையாத நிலையில், 2006ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியவர், பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தே.மு.தி.க-வுக்கு 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுத்தந்தனர். அதைத் தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று, தோல்வியைத் தழுவினாலும் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக

தனித்தே போட்டியிட்டுவந்த விஜயகாந்த், முதன்முறையாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

முதல்வர் வேட்பாளராக

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி முறிந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்த தே.மு.தி.க., போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம்வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி உட்பட தே.மு.தி.க-வும் போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயாகாந்த் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் படுதோல்வியடைந்தது.

சரிந்த செல்வாக்கு

தனித்துப் போட்டியிட்டபோது 8.4%, 10% ஆக இருந்த தே.மு.தி.க-வின் வாக்குவங்கி, கூட்டணிக்குச் சென்ற பின்னர் 7.9%, 6.1% எனக் குறைந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் 2.4% ஆகச் சரிந்தது. நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் சென்றனர். போதாக்குறைக்கு விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமடைந்தது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வி அடைந்தது.

சறுக்கிய விமர்சனங்கள்:

சட்டமன்றத்தில் கடுமையாக நடந்துகொண்டது, வேட்பாளரை அடித்தது,மனைவி மைத்துனர் ஆதிக்கத்தில் கட்சியைவிட்டது, செய்தியாளர்களிடம் கோபத்த்துடன் நடந்து கொண்டது, தூ என துப்பியது இப்படி இவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பல. அதனாலேயே திமுக சார்பு தமிழக ஊடகங்கள் இவரை ரவுண்டு கட்டி அடித்தன. துர்பிரசாரங்கள் மூலம் விஜயகாந்தை ஒழித்துக் கட்டும் வேலையில் வெற்றி பெற்றன. இருப்பினும், தனிப்பட்ட முறையில் அனைவராலும் நேசிக்கக்கூடிய மனிதராகவே திகழ்ந்தார் விஜயகாந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version