― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்அயோத்தி போரின் வரலாறு!

அயோத்தி போரின் வரலாறு!

- Advertisement -
ayodhya ram

தெலுங்கில் – டாக்டர் முதிகொண்ட சிவப்ரசாத்
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

அயோத்தி நகரம் –

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா  புரி த்வாராவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயகா: – என்பது பண்டைய ஸ்லோகம். அயோத்தி சரயூ நதி தீரத்தில் இருக்கும்  இக்ஷ்வாகு அரசர்களின் தலைநகரம். ஸ்ரீ ராமச்சந்திர பகவான் பிறந்த இடம்.   இந்துக்களுக்கு பரம பவித்திரமான மதுரா, காசி மற்றும் அயோத்தி நகரங்களில்  அயோத்தி சிறப்புத்தன்மை வாய்ந்தது.

அயோத்திப் போர் –

வால்மீகி ராமாயணம் எந்த அளவுக்கு இருக்கிறதோ கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக  நடந்த அயோத்திப் போரின் வரலாறும் அந்த அளவுக்கு உள்ளது. புராண ஆதாரங்களோடு கூட பஹ்ரைன் கெஜட், பாபர் நாமா, லக்னோ கெஜட், மாடர்ன் ரிவ்யூ,  விஸ்வ தர்மவாணி போன்ற இதழ்களில் வந்த கட்டுரைகளையும் வைத்து இந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூரலாம்.

நிந்தைகள்

அயோத்தியில் ராமர் எந்த அறையில் பிறந்தார்? என்று போலி மதச்சார்பின்மைவாதி கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பதிலாக சிறுநீர் கழிப்பிடத்தை கட்டுங்கள் என கிறித்துவ மத போதகர் கனிராம் கூறினார்.

ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?  என்று கேலி செய்தார் தமிழக தி.மு.க. நாத்திக தலைவர் கருணாநிதி.

ராமர் கோவில் திறக்கப்பட்டது –

இந்த நிந்தைகள், குற்றச்சாட்டுகள், போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தகராறுகள் முடிவுக்கு வந்த பிறகு, 2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் தெய்வீகமான ராமர் கோவில் திறக்கப்பட்டது.

இந்திய வரலாற்றில் இது ஒளிமயமான முக்கிய தருணம். தேச ஒற்றுமைக்கான ஒரே  மந்திரம் ராம நாமம்.  சூரிய வம்சத்தில் ஹரிச்சந்திரன், திலீபன், பகீரதன் போன்ற பல   சிறந்த க்ஷத்ரிய மன்னர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் காலையில் எழுந்ததும் நினைக்கத் தக்கவர்கள். இவர்களுள் ஸ்ரீராமச்சந்திரன் மிகப் புகழ்பெற்றவர். அவருடைய சரித்திரத்தை வால்மீகி மகரிஷி சமஸ்கிருதத்தில் ராமாயண காவியமாக இயற்றினார்.    அதன் பிறகு பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் வந்தன. ஆனால் அனைத்திற்கும் ஆதாரம் வால்மீகியின் படைப்பு.

புராதன ராமர் கோயில் –

ராமன் என்றால் சூரியன். சீதை என்றால் பூமி. இது ஒரு குறியீட்டு ஆய்வு. அனுமன் வாயுதேவன். ராவணன் பல்வேறு தீய குணங்களுக்கு அடையாளம். அயோத்தியில் ராமரின் நினைவாலயம் எத்தனை பழமையானது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி கி.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்ய மகாராஜா 84  ஆதாரத் தூண்களைக் கொண்ட அற்புதமும் பிரம்மாண்டமுமான ராமர் கோயிலைக் கட்டினார் என்பது தெரிகிறது.

இது தொடர்பான ஒரு சம்பவம் உள்ளது. கந்தர்வசேனனுக்கு இரு புதல்வர்கள். மூத்தவரான பர்த்ருஹரி  சந்நியாசியானார். முடிசூட்டப்பட்ட இளவரசன் விக்கிரமாதித்யன் ஒரு நாள் ‘அகேட்’ காட்டில் (அயோத்தி, ஜாம்தராகாட்) இருந்த ஒரு  ஆம்ரா (மா) மரத்தின் கீழ் ஓய்வெடுத்த போது அவனுக்கு ராம தரிசனம் ஆயிற்று. அங்கு ராமர் கோவிலை விக்கிரமாதித்யன் புனர்நிர்மாணம் செய்ததாக ஐதிகம் உள்ளது.

இன்னும் பண்டைய காலத்தில் ராமர் கோவில் ராமரின் மைந்தன் குசனாலும்    பிற்காலத்தில் பிருஹத்வலன் என்பவராலும் கட்டப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக நித்ய பூஜைகளும் பஜனைகளும் நடைபெற்று வந்தன.

அயோத்தியில் இறந்தால் மறுபிறவி இல்லை என்றும் ஒருவேளை பிறவி எடுத்தாலும்  சிறந்த பிறவி கிடைக்கும் என்றும் கூறி அயோத்தி காட்டுக்கு சடலங்களை எடுத்து வந்தார்கள்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராம மனோரமே  ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே என்று தியானம் செய்து வந்தார்கள். ர என்பது நாராயண மந்திரத்திற்கும் ம என்பது பஞ்சாக்ஷரிக்கும் மூல பீஜங்கள் எனபது விளக்கம். ராமோ விக்ரஹவான் தர்ம:.  வேதவேத்யன் ராமன். வேதம் ப்ராசேதனம் (வால்மீகி ராமாயணம்) – ராமரே வேதம்.   வேதம் மிகமிகப் பழமையானது, அசலானது.

பாபரின் வருகை –

14 ம் நூற்றாண்டில் சமர்கண்டைச் சேர்ந்த பாபர் என்ற துருக்கியன் இந்தியாவின் மீது படையெடுத்தான். அயோத்தியை ஆக்கிரமித்து அங்கிருந்த ராமர் கோயிலை அழித்தான். அவன் அந்த திட்டத்தை தன் ராணுவத்தைச் சேர்ந்த மீர் பக்கீ என்ற போர் வீரனிடம் (வஜீர்) ஒப்படைத்தான். அப்போது ராமர் கோவில், மஹந்த் ஷ்யாமானந்தஜி என்பவரின் தலைமையில் இயங்கியது.

ராணா சங்க்ராம சிம்ஹா –

ராஜபுத்திர வீரரான ராணா சங்க்ராம சிம்ஹாவோடு பாபர் போரிட்டான். போரில் முதலில் பாபர் தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் வெற்றி பெற்றான். அங்கிருந்து கோவில்களை அழிக்க ஆரம்பித்தான். அர்ச்சகர்கள் ஆலயத்திற்குள் துருக்கப் படையை  நுழைய விடாமல் தடுத்தார்கள். அவர்கள் அனைவரையும் பாபரின் வீரர்கள் கொன்று தள்ளினார்கள். ஷ்யாமானந்தாஜி மகராஜ் மூல விக்ரகத்தை ரகசியமாக உத்தராகாண்டிற்கு எடுத்துச் சென்றார். ஆனால் பாபர் மசூதியைக் கட்டுவது அவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடவில்லை. பகலில் கட்டிய சுவர்கள் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் இடிந்து விழுந்திருக்கும். அனுமன் அவைகளை இரவில் இடித்துத் தள்ளுவதாக அயோத்தியில் ஒரு வதந்தி பரவியது.

பக்தர்களின் சடலங்களே மசூதியின் படிகள் –

லக்னோ அரசிதழில் உள்ள அதிகாரப்பூர்வமான தகவலின்படி, அயோத்திக்கு தீர்த்த யாத்திரை சென்ற ஒரு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் பக்தர்களை பாபர் சிறையில் அடைத்தான். ஹால்டனின் கெஜட் தகவலின்படி, இந்துக்கள் அதாவது காஃபிர்களைக் கொன்று சடலங்களைக் குவியலாகக் குவித்து மசூதியின் படிகளைக் கட்டுங்கள் என்று பாபர் கட்டளையிட்டான். (பாபர் நாமா- பக்கம் 173)

சூரியவம்சி க்ஷத்திரியர்கள் –

நாங்கள் ராமரின் வழித்தோன்றல்கள். எமது குரு ரிஷி பரத்வாஜர். நம் அயோத்தியை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறி சூரிய வம்சி க்ஷத்திரியர்கள் சலாய், ராஜ்புரா போன்ற அருகிலுள்ள நகரங்களில் இருந்து வந்து மசூதியின் பிரதான நுழைவாயிலை இடித்துத் தள்ளிவிட்டு சங்குகளை முழங்கினர். அப்போது நடந்த கடும் போரில் சூர்ய வம்சத்தைச் சேர்ந்த சிறந்த க்ஷத்திரிகள் பலர் உயிரிழந்தனர்.

அக்பர் –

காலப்போக்கில் அக்பர் சக்ரவர்த்தியும் தன் முன்னோடிகளையே பின்பற்றினான். ஆனால் அக்பரின் அரசவையில் பணியாற்றிய ஹிந்துக்களான தோடர்மால், பீர்பால் போன்றோரின்   ஆலோசனையால் அக்பர் இந்துக்களுக்காக ஒரு சிறிய ராமர் கோவிலைக் கட்டி வழிபட அனுமதித்தான்.

கொரில்லா யுத்தம் –

ராமபக்த மகராஜும் வைஷ்ணவதாசும் பக்தர் படையைத் திரட்டி அஹல்யாகாட் அருகில் ஊர்வசிகுண்ட் பகுதியில் கொரில்லா போர் முறையில் முகலாய ராணுவத்தை எதிர்த்தனர். ராம ஜென்மபூமியின் பாதுகாப்பிற்காக இளம் குழந்தைகள் கொரில்லாக்களாகவும், தகவல் தருபவர்களாகவும் போராடி தம் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

ஔரங்கசீப் –

1646 ல் முகலாயப் பேரரசன் ஔரங்கசீப், தன் ஆட்சியின் போது நடந்த  ​​மற்றொரு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்து வீரர்களைக் கொன்று கந்தர்ப கூபத்தில் (கிணறு) குவியல் குவியலாக வீசினான்.

அமேதி அரசர் –

அமேதியின் அரசர் குருதத்த சிம்மன் சாதுக்களோடு சேர்ந்து நசிருத்தீன் காலத்தில் மீண்டும் ராம ஜென்மபூமியின் பாதுகாப்புக்காக எட்டு நாட்கள் போர் புரிந்தார் என்பது தெரிகிறது. ஹம்ஸபரா, மகரஹி, கஜுராஹட் போர்களும் வரலாற்றின் பக்கங்களில் காணப்படுகிறது.

நவாப் வசீத் அலிஷா –

நவாப் வசீத் அலிஷாவின் ஆட்சியின் போது ராம ஜென்மபூமிக்கான போரில் ஏராளமான இந்து பக்தர்கள் உயிரிழந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனி –

அதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி காலத்தில் முஸ்லீம் பிரபுக்கள் ஆங்கிலேயர்களை இராணுவ ஒத்துழைப்பு வடிவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதாவது  இந்துக்கள் ஒருபுறம் பிரிட்டிஷ் ராணுவத்தோடும் மறுபுறம்  முஸ்லிம் (முகலாய) ஆட்சியாளர்களுடனும் போராட வேண்டி வந்தது.

முகலாயரின் அட்டூழியங்கள் –

சுல்தான்பூர் கெஜட் (பக்கம் 36) முகலாயப் பேரரசன் பகதூர்ஷா செய்த கொடிய அட்டூழியங்களைக் குறிப்பிடுகிறது. மகான்கள் பலவாயு பாபா, ராம்சரண்ஜி தாஸ் ஆகியோரை அயோத்தியில் பிரிட்டிஷ் ராணுவம் தூக்கிலிட்டது. அப்போது கோண்டுகள்  பைசாபாத் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

அயோத்தி தலைநகரம் –

பிற்காலத்தில் லக்னோ நவாப் அயோத்தியை தன் தலைநகராக மாற்றிக் கொண்டான்.  இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் ஹுமாயூன் காலத்தில்  ராணா மஹதாப்திங், ராஜா ரணவிஜய சிங் ஆகியோர் நடத்திய கொரில்லா போராட்டங்கள் மறக்க முடியாதவை.

குரு கோவிந்த்சிங் –

சீக்கியர்களின் பத்தாவது குருவான கோவிந்த சிங்,  பாபா வைஷ்ணவதாஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அப்போது அங்கு வந்த இந்து ராணுவம் முகலாய ராணுவத்தை அயோத்தியிலிருந்து ஆக்ராவுக்கு விரட்டியது. இவ்வாறு ஐம்பது ஆண்டு காலமாக  இரவும் பகலும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. (பஹ்ரைன் கெஜட்- பக்கம் 73)

1680 ல் சஹாதத் கஞ்ச் அருகில் ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற யுத்தம் நடந்தது. குரு கோவிந்த்சிங் தனது குருத்வாராவைக் கட்டினார். இந்த சந்தர்ப்பத்தில் மூவாயிரம் பெண்கள் சேர்ந்த சேனை நடத்திய ராம ஜென்மபூமி போராட்டத்தையும் வரலாற்றின் பக்கங்களில் காணமுடியும். பீட்டி ராஜகுமார்,  ஜயதத்த சிங் ரௌனாஹி போன்றோர் நடத்திய தற்கொலைப் படையின் விவரங்களை ‘மதீதுல் அவுலியா’ விவரிக்கிறது.

சிப்பாய் கலகம் –

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தின் போது  ​​ஆங்கிலேய ராணுவத்தினர் அயோத்தியில் ராம பக்தர்களைத் தூக்கிலிட்டனர். அந்த பக்தர்களுக்கு ராமசரண் தாஸ் தலைவராக இருந்ததையும் மஹந்த் உத்தவதாஸின் தியாகத்தையும் கதைகளாகக் கூறுவர் அம்மக்கள். 

ராமஜென்மபூமிக்கான இரண்டாயிரம் ஆண்டுகாலப் போராட்டம் இப்படித்தான் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

1970க்குப் பிறகு –

1970க்குப் பிறகு இந்துக்கள் மீண்டும் ராமஜென்மபூமி இயக்கத்தைத் தொடங்கினர். விநோதமாக அதை காங்கிரஸ் அரசு நசுக்கியது. 1990 நவம்பர் 2ம் தேதி அயோத்திக்குச் சென்ற கரசேவகர்கள் உத்தரப் பிரதேசத்தில் அப்போதைய முதல்வர் முலாயம்சிங் யாதவால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு –

1992 ல் பாபர் மசூதியை இடித்த சம்பவத்தில் ஹிந்து சமுதாயத்தை, ஹிந்து அரசாங்கத்தில் அப்போது ஆட்சியில் இருந்த பிரதமர் பி.வி. நரசிம்மராவ், அர்ஜுன் சிங் போன்றவர்களே அடக்கினார்கள். விந்தை என்னவென்றால் ஹிந்துக்களை சுட்டுக் கொன்ற அதிகாரிகளும் இந்துக்களே. மதுகர் குப்தா, ஹிராலால் சர்மா, எஸ். புல்லார் (சிஆர்பிஎஃப்), பரமஜித் சிங், கமாண்டர் ராமச்சரண் ஸ்ரீவத்சவா (மாவட்ட மாஜிஸ்திரேட் போன்றோர்.

இது ஏன் நடந்தது?

உத்தரபிரதேச முஸ்லிம் வாக்குகளுக்காக முலாயம் (சிங்) கான் செய்த அக்கிரமம் இது.  அவருக்கு பத்ம விபூஷன் பட்டம் கொடுக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் ஆந்திராவில் இருந்து சென்று உயிர் தியாகம் செய்த லட்சுமண யதீந்திரரை நினைவு கூர்வோம். கோத்ராவில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட ராம பக்தர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம். நாடு முழுவதும் ராமர் கோவிலுக்காக போராட்டம் நடத்திய கோடிக்கணக்கான ஸ்வயம் சேவகர்களுக்கு நன்றி செலுத்துவோம். .

76 வரலாற்றுப் போர்கள் –

இது ஒரு நீண்ட, இரத்தம் தோய்ந்த பக்தி வரலாறு. ஜிஹாதி பயங்கரவாதத்திற்கும் தேச பாதுகாப்பிற்கும் இடையே நடந்த உயிர்த் தியாகங்களின் போராட்ட வரலாறு. மரணமடைந்த ஸ்ரீராமனின் சூர்ய வம்சத்தினர், மகான்கள் மற்றும் தேசபக்தர்களுக்காக கண்ணீருடன் அகல் விளக்குகளை ஏற்றுவோம். இதுவே நமது அஞ்சலி.

ராமசரிதமானஸ் –

கோஸ்வாமி துளசிதாசர் ராமசரிதமானஸ் எழுதுவதற்குக் காரணம் முகலாய ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்து ராமரை அழைப்பதற்காகவே. இடைக்காலத்தில் ஓரிருமுறை சமரச முன்னெடுப்புகள் நடந்தன. ஒருபுறம் நமாசும் மறுபுறம்  பஜனையும்  செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டதே தவிர அந்த சமரசம் வெகு காலம் நீடிக்கவில்லை.  

ஆங்கிலேயரின் வஞ்சனை –

ஆங்கிலேயர்கள் வர்த்தகத்திற்காக கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்களுக்கு இந்த அயோத்தி பிரச்னை பெரிதும் உதவியது. இரு மதங்களுக்கும் இடையே மோதலை வளர்த்து கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினார்கள். ஒருபுறம் மௌல்வியையும் மறுபுறம் ராமச்சரண தாசையும் தூக்கிலிட்டர்கள்.

மசூதியின் கதவுகள் –

1948 ம் ஆண்டு  காந்தியின் படுகொலையை சாக்காகக் கொண்டு கம்யூனிஸ்டுகளும் ஆங்கிலேயரும் காங்கிரஸ் கட்சியைக் கொண்டு ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தை தடை விதிக்கச் செய்தார்கள். மீண்டும் 1992 ல்  பாபர் மசூதி இடிப்பின் அடிப்படையில் சங்கத்தின் மீது சமூகமே தடை விதித்தது. உண்மை என்னவென்றால் பல தசாப்தங்களாக மூடிக் கிடந்த மசூதியின் கதவுகளை ராஜீவ் காந்தி திறந்து விட்டார்.

கையை விரித்த பிரிட்டிஷ் நீதிபதி –

1885ல் மஹந்த் ரகுவரதாஸ் பைஷாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 16 ம் நூற்றாண்டில் அக்பர் இந்த மசூதியைக் கட்டினார். மூன்று குவிமாடங்கள் பாபரால் கட்டப்பட்டன. பிரிட்டிஷ் நீதிபதி கர்னல் சாமியர், இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.  

1934ல் நடந்த வகுப்புவாத கலவரத்தில் இரு தரப்பினரும் உயிர் இழந்தனர். இந்துக்கள் மீது எண்பத்து நான்காயிரம் ரூபாய் வரி விதித்து மசூதியின் குவிமாடங்களை பழுது பார்த்து சரி செய்தனர் ஆங்கிலேயர்கள்.  

பால ராமரின் சிலை –

1949 டிசம்பர் 2ம் தேதி இரவு அங்கு பால ராமரின் சிலை நிறுவப்பட்டது. அப்போது பண்டிட் கோவிந்த வல்லப பந்த் உத்திர பிரதேச முதலமைச்சராக இருந்தார். அன்றைய பிரதமர் நேரு, இந்த ராம் லல்லாவின் சிலையை அகற்றுங்கள் என்று கடிதம் எழுதினார். ஆனால் பைசாபாத் கலெக்டர் கே.கே. நாயர் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று சந்தேகமின்றிச் சொல்லி விட்டதால் கோயில் கதவு பூட்டப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு –

1986 பிப்ரவரி 1ம் தேதி நீதிபதி உமேஷ் சந்திர பாண்டே, துறவிகளின் அழுத்தத்தின் பேரில் கோவிலின் பூட்டைத் திறக்கச் செய்தார். மஹந்த் பரமஹம்ச ஸ்ரீராமச்சந்திர தாஸ் மகராஜ் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்.

நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் நிலத் தகராறாகவே கருதின. இதில் குவி மாடங்களின் பகுதி,  சீதையின் சமையலறை, நிர்மோஹி அகாடா, சபுத்ரா என்ற பாகங்கள் உள்ளன.

உண்மையில் இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமாசுகள் நின்றுபோயின.  கோவிலில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்கள் மீது நீதிமன்ற வழக்குகள் பல ஆண்டுகள் நடந்தன. இறுதியாக உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

அற்புதமான ராமர் கோவில் –

அதன் மூலம்  2022 ல் ராமர் கோவிலின் புனரமைப்பு தொடங்கியது. “ராமர் கோவில் கட்ட இனி யார் தடை சொல்வார்” என்று பல கவிஞர்கள் கவிதை எழுதி தம்  எழுதுகோல்களை புனிதம் செய்து கொண்டார்கள். பல பெண்மணிகள் ராமர் கோயில்  கட்டி முடிக்கும் வரை நாங்கள் தலையை முடிய மாட்டோம் என்று திரௌபதியைப் போல சபதம் எடுத்தனர். ராமர் கோவில் கட்டுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தன்னார்வ நன்கொடைகள் வந்து குவிந்தன. இது வெறும் கோவில் அல்ல. பாரத இனத்தின் இதய ஈரம். அமிர்தத்தின் துளி

ராமா ராமா என்று பாடிய கிளியின் வாழ்வு உயர்ந்தது. ராமனுக்குப் பாலம் கட்டி உதவிய அணிலின் வாழ்வு சிறந்தது. 

தார்மீக ஒற்றுமைக்காக ராமாயணம் பாராயணம் செய்வோம்.

திரேதா யுகத்தில் முதல் ராமர் கோயிலைக் கட்டியவர் குசன். அதாவது அப்போதைக்கே யாக கலாச்சாரம், கோவில் கலாச்சாரம் இரண்டும் இருந்தன என்று அறியலாம்.

அயோத்தியில் கட்டப்படும் மசூதி –

மசூதி மேம்பாட்டுக் குழுத் தலைவர் ஹாஜி அராபத் ஷேக் கூறுகையில், அயோத்தியில் உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய இடத்தில் பிறை மற்றும் ஐந்து மினாரட்டுகளோடு தேசத்திலேயே மிகப் பெரிய மசூதி கட்டப்படும். 21 அடி உயரம், 35 அடி அகலத்தோடு உலகிலேயே மிகப் பெரிய குரான் இதில் வைக்கப்படும். ஒன்பதாயிரம் பக்தர்கள் இதில் பிரார்த்தனை செய்யலாம். மசூதி வளாகத்தில்  கல்வி, மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.  அதோடு, கூடுதல் நிலங்களும் சேகரித்து வருகிறோம் என்று கூறினார். முஹம்மது பின் அப்துல் மஸ்ஜித் எனப் பெயரிடப்படும் இதற்கு காபாவில் (மக்கா) தொழுகை நடத்தும் இமாம் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி சர்வே –

அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமியின் சர்வேவை  ஷாஹி தர்கா தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மூன்று வழக்கறிஞர்கள் மேற்பார்வையில் இந்த சர்வே நடத்தப்படும். இந்த மசூதி இருந்த இடத்தில் முன்பு கிருஷ்ணர் கோயில் இருந்து என்றும் அவுரங்கசீப் ஆட்சியின் போது கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும் என்றும்  இந்த விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

தெலுங்கில் ராமாயணங்கள் –

ராமாயணத்தை தெலுங்கில் எழுதியவர்களுள் திக்கனா,  எர்ரனா,  பாஸ்கரா, கோன புத்தா ரெட்டி, மொல்ல, அய்யல ராஜு ராமபத்ரா, ரகுநாத பூபாலர், புட்டபர்த்தி நாராயணாச்சாரி, விஸ்வநாத சத்தியநாராயணா, எம்.எஸ். ராமாராவு, செர்விரல பாகய்யா, ஸ்ரீனிவாச சிரோமணி ஆகியோர் குறிப்பிடத்தக்க கவிஞர்கள்.  சுரவரம் பிரதாபரெட்டியும் வெதுல சூர்யநாராயணாவும் இராமாயண வர்ணனையாளராக அறியப்படுகின்றனர்.


Source: ருஷிபீடம் – தெலுகு மாத இதழ், பிப்ரவரி 2024


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version