― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்அண்டை நாடுகளுடன் கொதிநிலையை உருவாக்கும் சீனாவின் அடுத்த இரட்டைக் கோட்பாட்டு முயற்சிகள்!

அண்டை நாடுகளுடன் கொதிநிலையை உருவாக்கும் சீனாவின் அடுத்த இரட்டைக் கோட்பாட்டு முயற்சிகள்!

- Advertisement -
china construction in bhutan

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பேச்சு வார்த்தை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பூடானுடனான சர்ச்சைக்குரிய பகுதியில் எல்லைக் கிராமங்களை அமைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் மலைப் பகுதியில் குறைந்தது மூன்று கிராமங்கள் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை ஹாங்காங்கைச் சேர்ந்த சௌத் சைனா மார்னிங் போஸ்ட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

வறுமை ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் தான் இத்தகைய விரிவாக்கம் இவ்வளவு விரைவாகத் தொடங்கியுள்ளது. ஆனால், இது தேசியப் பாதுகாப்பு தொடர்பானது என்று ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதிகாரிகளை மேற்கோள் காட்டி கூறுகிறது.

இது தொடர்பான செய்தி அறிக்கையின்படி, இமயமலையில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில், சீனா மற்றும் பூட்டானுக்கு இடையே நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய எல்லை மண்டலமாக விளங்கும் பகுதியில், 18 புதிய சீன குடியிருப்பாளர்கள் அங்கே புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளுக்கு குடிபுகக் காத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் புதிய உருவப்படத்தை கைகளில் ஏந்தியிருந்தனர்! அவர்களுக்குப் பின் ஒரு பளிச்சிடும் சிவப்பு பேனர், சீன மற்றும் திபெத்திய எழுத்துகளில் எழுதப் பட்டு, அவர்களை வரவேற்றது.

டிச.28ல் சீன ஆக்கிரமிப்பு திபெத்திய நகரமான ஷிகாட்ஸேவில் இருந்து 38 குடும்பங்களைக் கொண்ட முதல் தொகுதி மக்கள் – புதிதாக விரிவுபடுத்தப்பட்ட தமலுங் கிராமத்திற்கு குடிபெயர வைக்கப் பட்டனர். இதனை திபெத் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

“சர்ச்சைக்குரிய மண்டலத்திற்குள் சீனாவால் கட்டப்பட்ட மூன்றில் இந்தக் கிராமமும் ஒன்றாகும். திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் கடந்த ஆண்டு எல்லைக் கிராமங்களின் அதிவிரைவான விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமலுங் பகுதியில் நடந்த அளவுக்கு இரண்டு மடங்காக இது இருந்தது” என்றது செய்தியறிக்கை. குறிப்பாக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Maxar டெக்னாலஜிஸ், குடியிருப்பாளர்கள் குடியேறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு எடுத்த இந்தப் பகுதியின் சாட்டிலைட் படங்கள் – 147 புதிய வீடுகளைக் காட்டியது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் வெறும் 70 வீடுகளில் வசித்த 200 பேரைத் தவிர, 235 குடும்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த கிராமம் விரிவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளிலும், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்களை அமைக்க சீனா தனது திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பூட்டான்-சீனா எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டு தொழில்நுட்பக் குழுவின் (JTT) பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் “ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்” இரு நாடுகளும் கையெழுத்திட்ட பின்னர், பூட்டானுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் சீனா தனது எல்லைக் கிராமத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 25வது சுற்று எல்லைப் பகுதி தொடர்பான பேச்சுவார்த்தை, இந்தியாவுக்கான முன்னாள் சீனத் தூதர் மற்றும் தற்போதைய துணை வெளியுறவு அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பூடான் வெளியுறவு அமைச்சர், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சீனாவிற்கும் பூட்டானுக்கும் ராஜதந்திர ரீதியான உறவுகள் இல்லை தான். என்றாலும், இரு தரப்பிலும் அதிகாரிகள் அவ்வப்போது வந்து பேசுவதன் மூலம் தொடர்பைப் பேணுகிறார்கள்.

சீனா தனது மற்ற 12 அண்டை நாடுகளுடனான தனது எல்லைப் பிரச்னைகளை ஏதோ வழிகளில் தீர்த்துக் கொண்டாலும், இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுடன் மட்டும், இன்னமும் எல்லை ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை. அண்மைய ஆண்டுகளில் பூட்டானுடன் முழு அளவிலான தூதரக உறவுகளை நிறுவுவதற்கும், கொந்தளிப்பான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கும் சீனா முயற்சி எடுத்தது. இது பூட்டானின் பகுதி என்று பூட்டான் உறுதியாகக் கூறியிருந்தும் டோக்லாம் பகுதி மீதான உரிமையைக் கோரிய சீனாவின் முயற்சிகளால் அந்தப் பேச்சுகள் சிக்கலாயின.

2017ல் டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்க சீனா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது, அது இரு நாடுகளுக்கு இடையே பதட்டத்தைத் தூண்டியது.

டோக்லாம் முச்சந்திப்பில் சீன ராணுவத்தால் அமைக்கப்படும் சாலை குறித்து இந்தியா கடுமையாக எதிர்த்தது. காரணம் இது கோழியின் கழுத்து – சிக்கன் நெக் என்றும் அழைக்கப்படும் குறுகிய சிலிகுரி காரிடார் அருகே இந்தியாவை அதன் வடகிழக்குப் பகுதியை இணைக்கிறது என்பதால், அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கி, தேச நலன்களை பாதிக்கும் இடத்தில் அமைந்திருப்பது என்பதுதான்!

இதனால், இந்த இடத்தில் சாலை அமைக்கும் திட்டத்தை சீனா கைவிட்ட பிறகு, இந்தியா சீனாவுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.

அடுத்து, 2020ல், பூட்டானில் உள்ள சக்டெங் வனவிலங்கு சரணாலயத்தின் மீது சீனா உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) கவுன்சிலில், திட்டத்திற்கான நிதியை எதிர்ப்பதன் மூலம், ஒரு கோரிக்கையை முன்வைத்தது. GEF கூட்டத்தில் சரணாலயம் தொடர்பான சீனாவின் உரிமைக் கோரலுக்கு, இந்தியாவில் உள்ள சீன தூதரகத்திற்கு பூட்டான் தனது கோரிக்கையை பதிவு செய்தது.

மக்களுக்கு சிறந்த வாழ்க்கை வசதிகளை வழங்குவதற்காக, சீன அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமங்கள் அமையவிருப்பதாக செய்தி கூறியது. ஆனால் அவை தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் “கோட்டைகளாக” இருப்பதாக அரசு சார்பிலான செய்தி உறுதியாகக் கூறியது.

இதுதொடர்பாக வெளியான செய்திகளில், தமலுங்கின் கிழக்கே, மற்றொரு எல்லைக் கிராமமான கியாலாஃபுக்கில், கடந்த ஆண்டு 16 சதுர கிமீ பரப்பில், 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழிவகுப்பதற்காக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாகவும், தற்போதுள்ள நான்கு வரிசை குடியிருப்புகளுக்கு அடுத்ததாக புதிய வீடுகள் அமைந்திருப்பதையும், சிறிய நூலகம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய கம்யூனிஸ்ட் கட்சி சமூக மையம் அமைக்கப் பட்டிருப்பதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டின.

சீனாவின் அரசு ஊடகத்தை மேற்கோள்காட்டும் இந்த செய்தியறிக்கையில், 2007 ஆம் ஆண்டில் இரண்டு வீடுகளுடன், தண்ணீர் அல்லது மின்சாரம் இல்லாமல், இங்கே ஒரு குடியிருப்பு நிறுவப்பட்டது. இது ஷி ஜின்பிங்கின் வறுமை ஒழிப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 2016-18 முதல் ஒரு மாதிரி கிராமமாக மாற்றி அமைக்கப்பட்டது.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான பீப்பிள்ஸ் டெய்லி, 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 620 க்கும் மேற்பட்ட “எல்லை செழிப்பு கிராமங்கள்” உருவாக்கப்பட்டதாக கூறியது. இது, கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு குறிக்கோளுக்கான ஷி ஜின்பிங்கின், நாட்டின் வறுமை ஒழிப்புக்கான காலக்கெடு என்றும், உள்ளூர் அதிகாரிகளும் அரசு ஊடகங்களும் இந்த கிராமங்கள் மக்களுக்கு நவீன வீடுகளை வழங்குதல் மற்றும் எல்லையைக் காத்தல் என்னும் இரட்டை நோக்கத்துடன் கட்சியின் மிக உயர்மட்டத்தில் இருந்து பெறப்பட்டதாகவும் கூறின.

இப்படி, சீன அரசு வெளியில் ஒன்றைச் சொல்லிக்கொண்டு, உள்ளே வேறொரு உள்நோக்கத்துடன் தனது எல்லை கிராமங்களில் அண்டை நாட்டுடனான சமச்சீரற்ற கொதிநிலையை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டே வருகிறது. அதனையே இந்தச் செய்திகள் வெளிக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version