― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவிடுமுறை என்று வாக்களிக்காமல் சுற்றுலா கிளம்பி... எதிர்காலத்தை இறந்த காலம் ஆக்காதீர்!

விடுமுறை என்று வாக்களிக்காமல் சுற்றுலா கிளம்பி… எதிர்காலத்தை இறந்த காலம் ஆக்காதீர்!

- Advertisement -

பகுத்தறிவுவாதிகள் இதை படிக்க வேண்டாம்!

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று இன்னும் முடிவு எடுக்காத நடுநிலை வாக்காளர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.

மேலே காணும் செய்திக்கும் எனது கட்டுரைக்கும் பகுத்தறிவுபூர்வமாக எந்த சம்பந்தமும் இல்லை . ஆனால் பகுத்தறிவாளர்களை பொறுத்த வரை துலாபாரம் என்பதும், எடைக்கு எடை சர்க்கரை என்பதும் அதுவும் இந்து மத நம்பிக்கை சார்ந்தது என்பதாலும் அது மூட நம்பிக்கையல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும் ?

ஆனால் மூடநம்பிக்கையை மூடநம்பிக்கை என்ற கண்ணாடியையே அணிந்து பார்க்கும் பொழுது இந்தக் கட்டுரை பதிவிடப்பட்டு சரியாக அரை நாள் ஆவதற்குள் செய்தியில் காணப்படும் சம்பவம் நடந்திருப்பது நமது தலைக்குள் ஏதோ குறுகுறு என்று உறுத்துகிறது.

வள்ளுவ பெருந்தகையின் “குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்ற குறளை மேற்கோள் காட்டித்தான் எனது கட்டுரையே அமைந்தது!

ஆனால் இன்றோ காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் அமர்ந்த தராசு தட்டு அறுந்தே விழுந்து விட்டது …

இந்த செய்திக்கும் எனது கட்டுரைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இருந்தால் கட்டுரையை முடிந்த அளவுக்கு உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள். இல்லாவிடில் இந்த மதி-யிலியை மதி கெட்டவனை மதிக்க தேவை இல்லை.

சசி தரூர் , தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் ஒருவர்; பன்முக தன்மையுடைய ஒரு மிக சிறந்த அறிவாளி; பல நூல்களை எழுதியவர், மிகச் சிறந்த பேச்சாளர்,  மாற்று கட்சியில் (பா.ஜ.க) தன் கண்களுக்கு புலப்படும் நல்ல விஷயங்களை கூட பாராட்ட கூடியவர்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது நம் நாட்டிலிருந்து எதையெல்லாம் சூறையாடினார்கள் எப்படியெல்லாம் திட்டமிட்டு நம் நாட்டை நாசம் செய்தார்கள் என்று இங்கிலாந்தில் உள்ள Oxford Union society-யில் அறிஞர்கள் கூட்டத்தினரிடையே ஒரு துணிச்சலான ஓர் அற்புதமான பேச்சை பதிவு செய்தவர் !

ஆனால் மோடி அரசின் சாதனைகள் சிலவற்றை பாராட்டி பேசியதற்காக தனது காங்கிரஸ் கட்சித் தலைமையால் கட்சியை  விலக்கி வைக்க நேரிடும் என்று கடுமையாக கண்டித்து வைக்கப்பட்டவர்.

இதனால் தானோ என்னவோ அரசியல் கடந்து அவர் பலரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கிறார் .

ஓர் உதாரணம் இவருக்கு இப்படி ஒரு விபத்து நடந்தது கேள்விப்பட்டதும் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பிரச்சாரமும் அது தொடர்பான பணிகளும் உச்சக் கட்டத்தில் இருக்கும் போதும் அவை அனைத்தையும் விட்டுவிட்டு சசிதரூரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார்.

சசி தரூர் போன்ற இத்தகைய திறமைசாலிகள் ,தேச பக்தர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அரசியலில் அவர்கள் பங்காற்றுவது நம் ஜனநாயகத்திற்கு நல்லது . நாட்டிற்கு மிக நல்லது.

எனவே அவர் விரைவில் பூரண நலம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

பொதுவாகவே கலியுகத்தில் நல்லவர்களுக்கே சோதனைகள் வருகிறது ! அதில் இந்த சோதனையும் ஒன்று ! தற்போது விஷயத்திற்கு வருகிறேன் …

2 நாட்களுக்கு முன்னர் பதிவிட்ட “தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!” கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் !

பிகு : எனது நடுநிலையைப் பற்றி சந்தேகிப்பவர்களுக்கும், விமர்சிப்ப வர்களுக்கும் ஒரு செய்தி ! NewsToday, சாவி, கல்கி, துக்ளக்… என   ஆரம்பித்து தினமணியில் 20 வருட காலம் என நான் வரைந்த கார்ட்டூன்கள் இதுவரை  17000. கடந்த ஒரு வருட காலம் செலவழித்து எனது கார்ட்டூன்களுக்கெனவே ஓர் இணையதளத்தை கட்டி முடித்திருக்கிறேன்.

17000 கார்ட்டூன்களும் என்னிடம் இல்லை … இருந்தாலும் அவை அத்தனையையும் இணைய தளத்தில் பதிவிடுவது என்பதும் இயலாத காரியம்!

அரசியல், சமூகம், பொருளாதாரம்… என கடந்த 30 வருடங்களில் நான் வரைந்த கார்ட்டூன்களை  உங்கள் முன் காட்சி படுத்த உள்ளேன். இதன் மூலமாக கடந்த 30 வருட தமிழக மற்றும் தேசிய வரலாற்றை நாம்  மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறையும் எனது படங்களின் மூலம் பாடமாகவே படிக்க முடியும்.

சரி! நான் நடுநிலையாளனா அல்லது ஏதும் கட்சி சார்புள்ளவனா என்பதும். அப்போது தங்களுக்கு புரியும்! உங்களது தீர்ப்புகளை அதுவரை தள்ளிப் போடுங்களேன்!

எனது புத்தாண்டு வாழ்த்துக் கட்டுரை இது…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

ஒரு சேலையை தேர்ந்தெடுக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம்? ஒரு மொபைலை வாங்குவதற்கு எத்தனை ‘பிராண்டு’களை சோதித்துப் பார்க்கிறோம் ? எத்தனை இடங்களில் விலையை விசாரிக்கிறோம் ?இத்தகைய மிகச் சாதாரண விஷயங்களுக்கு கூட நாம் எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறோம் !

ஆனால் அடுத்த 5 வருடத்திற்கு நம் நாட்டை ஆள போகிறவர்கள் யார் என்பதில் நாம் கவனம் எடுத்துக் கொள்கிறோமா ?அல்லது இம் மாதம் 17,18,19,20,21 என்று வரிசையாக வரும் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு நம் வாக்களிக்கும் உரிமையை மறந்து வெளியூர் செல்லப் போகிறோமா ?

ஒரு நிமிடம் ; ஒரே ஓர் நிமிடம் … நீங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்! அவர்களது எதிர்காலமே நீங்கள் அளிக்கப் போகும் வாக்கில் தான் இருக்கிறது! 5 வருடம் என்பது சாதாரணமான விஷயமல்ல ! புரிந்து கொள்ளுங்கள், அவர்களது குழந்தை பருவத்தில் 5 வருட காலம் என்பது (15 வயது என்று வைத்துக் கொண்டால்) கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ! இவ்வளவு ஏன், உங்களது அடுத்த தலைமுறையின் எதிர்காலமே ஏப்ரல் -18 அன்று நீங்கள் அளிக்கப் போகும் வாக்கில் தான் இருக்கிறது ! நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் கட்சியை பொறுத்துதான் இருக்கிறது .

ஒன்றே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மோசமான தலைவர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் செய்யும் தவறால் தான் உருவாக்கப்படுகிறார்கள் ?

நான் என்ன தவறு செய்தேன் ?நீங்கள் கேட்கலாம்  5 நாள் விடுமுறையில் வாக்களிப்பதை புறக்கணித்து விட்டு வெளியூர் செல்வதை விட என்ன பெரிய தவறு இருக்க முடியும் ?

“சரி சார் ! நீங்க சொல்லறீங்க ளேன்னு வர்ற 5 நாள் விடுமுறையில் நாங்க எங்கேயும் போகலை ! ஏப்ரல் -18 என்னோட வாக்கை பதிவு செய்கிறேன் ! ஆனால் எந்தக் கட்சியும் உருப்படி இல்லையே சார் ! எந்தக் கட்சி வந்தாலும் எங்கள் கஷ்டம் தீருவதில்லையே சார் !பழைய கஷ்டம் போய் புதுக் கஷ்டம் தான் வருகிறது ! பிறகு என்னத்துக்கு நான் கொளுத்தற வெயில்லே நின்னு ஒட்டுப் போடணும் ? என்று நீங்கள் கேட்க வருவது எனக்கு புரிய வருகிறது .

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கஷ்டம் என்பது வேறு! ஆபத்து என்பது வேறு !

யாருக்கு தான் கஷ்டம் இல்லை ? யாருக்கு தான் பிரச்னைகள் இல்லை? நீங்கள் பணிபுரியும் இடத்தில் இல்லையா ? உங்கள் குடும்பத்தில் இல்லையா ? ஏன் உங்கள் நண்பர், பக்கத்து வீட்டுக்காரர் , எதிர் வீட்டுக்காரர் , மாடி வீட்டுக்காரர் , கீழ் வீட்டுக்காரர் …என அனைவரையும் விசாரித்துப் பாருங்கள் !

உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்…

.”சரி ,என்ன தான் சொல்ல வர்றீங்க ? சொல்ல வர்றதை முதல்ல சொல்லுங்க” என்று கேட்கத் தோன்றுகிறதா ?

நான் என்ன சொல்வது? ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே வள்ளுவ பெருந்தகை கூறிவிட்டாரே!
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
அதிகாரம் : தெரிந்து தெளிதல், குறள்: 504.
விளக்கம் :ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து மிகுதியானவை எவையென ஆராய்ந்து மிகுத்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஆம்! இது வரை நம்மை ஆட்சி செய்தவர்கள் செய்த நல்ல விஷயங்களை ஒரு தட்டில் வையுங்கள்.அவர்கள் செய்ததாக நீங்கள் நினைக்கும் தவுறுகளை மற்றொரு தட்டில் வையுங்கள்! “வரலாற்றை படிக்காத சமூகம் , வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை !” என்பது ஒரு வரலாற்று உண்மை !

இங்கு இந்தக் கருத்தை நினைவில் கொள்ள வேண்டும் .நாடு சுகந்திரம் அடைந்ததிலிருந்து நம் ஆட்சியாளர்கள் செய்த நல்லது கெட்டதை தராசில் வைக்க வேண்டும் . தற்போது தராசு தட்டு என்ன சொல்கிறதோ அதை பார்த்து முடிவு செய்யுங்கள் !

அட போங்க சார் ! எந்த கட்சியிடமும் குணமில்லை ! எங்களுக்கு குறைகளைத் தவிர எதுவும் தெரியவில்லை ! அப்படியென்றால் நமது அரசியலுக்கென ஒரு குறளை நாம் உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை !

குறைநாடிக் குறையும் நாடி அவற்றுள்
குறைநாடி மிக்க கொளல்.
அதிகாரம் :  குழம்பி தெளிதல்,  ஆண்டு 2019
விளக்கம்: தேர்தலில் போட்டியிடும் இரண்டு அணிகளின் குறைகளையும் தராசின் இரண்டு தட்டுகளில் வையுங்கள்! எந்த அணியின் குறைகள் குறைவாக இருக்கிறதோ அந்த அணிக்கு வாக்களியுங்கள்.

இங்கு ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மோடி அரசின் பணமதிப்பிழப்பு (Demonetisation) மற்றும் GST வரி விதிப்பு கட்சி சார்பில்லாத நடுநிலை வாக்காளர்களிடம் பெரும் விவாதப் பொருளாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம் ! அது சரியா, தவறா ? நீங்கள் நினைப்பதே சரி என்று வைத்துக் கொள்கிறேன் ! ‘இந்த இரண்டாலும் நாங்கள் பட்ட கஷ்டம் போதும்’ என்று நினைப்பவர்களுக்கு இங்கு ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன்.

கஷ்டம் என்பது வேறு! ஆபத்து என்பது வேறு ! கஷ்டத்தை கடந்து விடலாம் !ஆனால் ஆபத்து ? நாம் மட்டுமல்ல நம்மோடு சேர்ந்து ஒட்டுமொத்த நாடும் மோசம் போகும் அல்லது நாசமாகும் .

கடந்த சில காலமாக வரும் செய்திகளைப் பார்த்தால் நம் நாடு மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது !

நம் பகை நாடான பாகிஸ்தானும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் சில மத வாத இயக்கங்களும் , பல்லாண்டுகளாக நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளும் தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி ஒழிந்தே தீர வேண்டும் என்று விரும்புகின்றன.

நமது நாட்டை எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை நமது பகை சக்திகள் தீர்மானிப்பது என்பதை விட நமக்கு பெரிய ஆபத்து வேறு இல்லை !

எதிர்காலத்திற்கோ பேராபத்து ! மத்திய ஆட்சியின் மீது கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது வேறு.

அதற்காக ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது என்பது வேறு!

தேச விரோத சக்திகளுக்கும் , தேசவிரோத கட்சிகளுக்கும் வாக்களித்து நம் எதிர்காலத்தையே பலி கொடுத்து விடாதீர்கள்!

இப்பொழுது தராசை தூக்கிப் பார்த்து வள்ளுவர் சொல்வதை போல் முடிவு செய்யுங்கள் ! நமக்கு வேறு வழியில்லை. இது ஒன்றே தீர்வு என்று நான் நம்புகிறேன்!

இந்த தேர்தலில் மட்டுமல்ல ,இனி எந்த தேர்தலிலுமே வாக்கு சதவீதத்தில் தமிழகம் தான் முதல் மாநிலமாக இருக்கும் என்று இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம் . நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே தமிழர் பெருமையை எடுத்துச் செல்வோம் !

அன்புடன்,

மதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version