― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅன்லாக்-2 இரண்டாம் கட்டம்; பிரதமர் மோடியின் முழு உரை (தமிழில்)

அன்லாக்-2 இரண்டாம் கட்டம்; பிரதமர் மோடியின் முழு உரை (தமிழில்)

- Advertisement -
modiji

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். கோவிட் -19 என்ற கொரோனா தொற்று நோய்ப் பரவலுக்கான பொது முடக்க அறிவிப்பு வெளியான பின்னர் 6-வது முறையாக பிரதமர் இவ்வாறு பொதுமக்களுக்கு உரை நிகழ்த்தியிருக்கிறார்.

அவரது வானொலி உரையின் தமிழ் வடிவம்… (சென்னை வானொலியில் ஒலிபரப்பானது)

பிரதம மந்திரி ஏழைகள் நலன்களுக்கான
அன்னத் திட்டம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் Unlock 2 என்ற ஊரடங்குத் தளர்த்தலின் இரண்டாவது கட்டத்தை எட்டியிருக்கிறோம். 

இருமல், சளி, காய்ச்சல் ஆகியன அதிகரிக்கும் பருவநிலை வேறு இப்போது வரவிருக்கிறது.  ஆகையால் நாட்டுமக்களாகிய நீங்கள் அனைவரும் உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். 

நண்பர்களே, கொரோனா ஏற்படுத்தும் இறப்பு வீதத்தைக் கவனிக்கும் வேளையில், உலக நாடுகள் பலவற்றோடு ஒப்புநோக்குகையில் இந்தியா மேம்பட்டதொரு நிலையில் இருக்கிறது.  பொது ஊரடங்கை சரியான வேளையில் அமல் செய்ததும், பிற தீர்மானங்களும் இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. 

ஆனால் நாட்டில் பொது ஊரடங்குத் தளர்த்தலின் முதல்கட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, தனிப்பட்ட மற்றும் சமுதாய முறையில் கவனக்குறைவும் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றது.  முக கவசங்கள் தொடங்கி ஒரு மீட்டர் இடைவெளி, 20 நொடிகள் வரை நாளொன்றில் பலமுறை கைகழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.  ஆனால் இன்றோ நாம் அதிகமாக விழிப்போடு இருக்க வேண்டிய தேவை இருக்கிறது, அந்த வகையில் கவனக்குறைவு கவலையளிக்கிறது.

modiji

நண்பர்களே, ஊரடங்குக் காலத்தில் மிகவும் தீவிரமாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.  இப்போது அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், நாட்டின் குடிமக்கள் ஆகியோர் மீண்டும் முன்பைப் போலவே எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  குறிப்பாக கட்டுப்பாடுகள் உடைய பகுதிகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

யாரெல்லாம் விதிமுறைகளைப் பின்பற்றவில்லையோ, நாம் அவர்களைத் தட்டிக் கேட்க வேண்டும், தடுக்க வேண்டும், புரியவைக்கவும் வேண்டும். பொதுவிடத்தில் முகக்கவசம் அணியாத காரணத்தால், நாட்டின் பிரதமர் ஒருவருக்கு 13,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பதை நீங்களே கூட செய்திகளில் பார்த்திருக்கலாம். 

இந்தியாவிலும்கூட, உள்ளாட்சி அமைப்புக்கள் இதே முனைப்போடு பணியாற்ற வேண்டும்.  இது 130 கோடி நாட்டுமக்களின் வாழ்வைக் காக்கும் ஒரு இயக்கம்.  இந்தியாவில் கிராமத்தலைவராகட்டும் நாட்டின் பிரதமராகட்டும், யாருமே விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. 

நண்பர்களே, ஊரடங்குக் காலத்தில் நாட்டின் முதன்மையாக என்ன இருந்தது என்றால், நாட்டின் எந்த ஒரு ஏழையின் வீட்டிலும் அடுப்பு எரியாமல் இருந்து விடக்கூடாதே என்பது தான்.  மத்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும், நாட்டின் பொது மக்களாகட்டும், இத்தனை பெரிய தேசத்தில் நமது ஏழை சகோதர சகோதரிகள் யாரும் பட்டினியோடு உறங்கச் செல்லக் கூடாது என்பதை உறுதி செய்வதில் பெருமுயற்சிகள் மேற்கொண்டார்கள். 

தேசமாகட்டும் தனிநபராகட்டும், சரியான சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், புரிந்துணர்வோடு தீர்மானங்கள் மேற்கொள்ளுதல் ஆகியன காரணமாக சங்கடத்தை எதிர்கொள்ளும் சக்தி அதிகரித்திருக்கிறது.  ஆகையால் ஊரடங்கு இருக்கும் போதே அரசு, பிரதமமந்திரி ஏழைகள் நலன் திட்டத்தைக் கொண்டு வந்தது.  இந்தத் திட்டத்தின்படி, ஏழைகளுக்காக ஒண்ணே முக்கால் இலட்சம் கோடி ரூபாய்க்கான தொகுப்பை அறிவித்தது.

நண்பர்களே, கடந்த மூன்று மாதக்காலமாக 20 கோடி ஏழைக் குடும்பங்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 31 ஆயிரம் கோடி ரூபாய்கள் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. 

இந்தக் காலத்தில் பெருமளவு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 18,000 கோடி ரூபாய்கள் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  இதோடு கூடவே, கிராமங்களைச் சேர்ந்த உழைப்பாளர்களுக்கு வேலைவாய்ப்பின் பொருட்டு பிரதம மந்திரி ஏழைகள் நலன் வேலைவாய்ப்பு இயக்கமும் துரித கதியில் செயல்படத் தொடங்கி விட்டது.  இதற்காக அரசாங்கம் 50,000 கோடி ரூபாய்களை செலவு செய்து வருகிறது.  ஆனால்….

modiji

நண்பர்களே, மேலும் ஒரு விஷயம் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அது என்னவென்றால் கொரோனாவோடு போராடிவரும் பாரதத்தில் 80 கோடிக்கும் அதிக நபர்களுக்கு மூன்று மாதத்துக்குத் தேவையான ரேஷன் பொருட்கள் அதாவது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. 

இதைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்துக்கும், பிரதி மாதமும், ஒரு கிலோ பருப்புவகைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.  அதாவது ஒருபுறம் பார்த்தோம் என்றால், அமெரிக்காவின் மொத்த மக்கட்தொகையை விட, 2 ½ பங்கு அதிக மக்களுக்கு ப்ரிட்டனின் மக்கட்தொகையை விட, 12 மடங்கு அதிக மக்களுக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பின் மக்கட்தொகையை விட, சுமார் இரண்டுபங்கை விடவும் அதிக மக்களுக்கு, நமது அரசு இலவசமாக உணவுப்பொருள் வழங்கி இருக்கிறது.

நண்பர்களே, இன்று நான் இதோடு தொடர்புடைய, மகத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறேன்.

நண்பர்களே, நமது நாட்டில், பருவமழைக்காலத்தின் போதும், அதன் பிறகும், குறிப்பாகப் பார்த்தால், விவசாயத் துறையில் தான், agricultural sectoril thaan அதிக வேலைகள் இருக்கும்.  பிற துறைகளில் சற்று மந்தநிலையே நிலவும். 

ஜூலை முதல் மெல்ல மெல்ல பண்டிகைகளின் சூழல் எங்கும் பரவத் தொடங்கும்.  ஜூலை மாதம் 5ஆம் தேதி குரு பூர்ணிமை தினம், மீண்டும் மழை பெய்யத் தொடங்கும்.  அடுத்து ஆகஸ்ட் 15 நிகழும் ரக்ஷாபந்தன் வரும் ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மாஷ்டமி வரும், கணேச சதுர்த்தி வரும், ஓணம் வரும்.  இவற்றுக்கு அடுத்தபடியாக, காடீ பிஹூ வரும், நவராத்திரி வரும், துர்காபூஜை வரும், தசரா வரும் தீபாவளி வரும், சடீ மயியா பூஜை வரும். 

பண்டிகைகளின் இந்தக் காலத்தில், தேவைகளும் அதிகரிக்கின்றன, செலவினமும் அதிகரிக்கிறது.  இந்த அனைத்து விஷயங்களையும் மனதிலே கொண்டு, என்ன தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது என்றால், பிரதம மந்திரி ஏழைகள் நலனுக்கான அன்னத் திட்டத்தை, நீட்டித்து, தீபாவளி, மற்றும், சட்பூஜை வரை, அதாவது நவம்பர் மாதத்தின் இறுதிவரை, முழுமையாக அளிக்கப்படும். 

அதாவது, 80 கோடி மக்களுக்கு, இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம், இப்போது, ஜூலை ஆகஸ்ட் செபடம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களிலும், செயல்படுத்தப் படும்.  அரசாங்கம் வாயிலாக இந்த ஐந்து மாதங்களில், 80 கோடிக்கும் அதிகமான ஏழை சகோதர சகோதரிகளுக்கு, மாதந்தோறும், குடும்பத்தின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், 5 கிலோ கோதுமை அல்லது, 5 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்படும். இதோடு கூடவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும், மாதந்தோறும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.

நண்பர்களே, பிரதம மந்திரி ஏழைகள் நலன்களுக்கான அன்னத் திட்டத்தின் இந்த நீட்டிப்பால், 90 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான செலவு பிடிக்கும்.  இதோடு கூடவே, கடந்த மூன்று மாதங்களுக்கான செலவினத்தையும் சேர்த்தோமென்றால், இது கிட்டத்தட்ட, ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய்களாகும். 

இப்போது இந்தியா முழுவதற்கும் என, நாம் ஒரு கனவு கண்டோம்.  பல மாநிலங்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றார்கள்.  பிற மாநிலங்களிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள் பணி என்ன? 

இப்போது நாடு முழுவதற்குமான, ஒரே ரேஷன் அட்டை வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, அதாவது ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை. one nation, one ration card.  இதனால் மிகப்பெரிய ஆதாயம், கிடைக்கப்போகும் ஏழைகள் யாரென்றால், வேலைவாய்ப்புக்காகவோ பிற தேவைகளுக்காகவோ, தங்கள் கிராமங்களைத் துறந்து வேறு இடங்களுக்கோ, வேறு மாநிலத்துக்கோ செல்பவர்கள் தாம்.

நண்பர்களே, இன்று ஏழைகளுக்கு, தேவை இருப்பவர்களுக்கு, அரசாங்கம் இலவசமாக தானியங்கள் வழங்குகிறது என்றால், இதற்கான முழுப் பாராட்டும், முக்கியமான வகையில், இரண்டு பிரிவினருக்கு உரித்தாகிறது.  முதலாவதாக, நம்முடைய நாட்டின் உழைக்கும் விவசாயி, நமக்கு உணவளிப்பவர்.  மேலும் மற்றவர், நமது நாட்டின், நாணயமான வரிசெலுத்துவோர். 

modiji

உங்களது உழைப்பு, உங்களது அர்ப்பணிப்பு ஆகியன, இவை காரணமாகவே, தேசத்தால் இந்த உதவியை செய்ய முடிகிறது.  நீங்கள், நாட்டின் உணவுக் களஞ்சியத்தை நிரப்பியிருக்கிறீர்கள், ஆகையால் இன்று ஏழைகள் வீட்டில், உழைப்பாளிகள் வீட்டில் அடுப்பு எரிகிறது.  நீங்கள் நாணயமாக வரி செலுத்தியிருக்கிறீர்கள், உங்கள் கடமையை ஆற்றியிருக்கிறீர்கள்

ஆகையால், இன்று நாட்டிலிருக்கும் ஏழையால், இத்தனை பெரிய சங்கடத்தை, தைரியமாக எதிர்கொள்ள முடிகிறது.  நான் இன்று, ஒவ்வொரு ஏழையோடு கூடவே, தேசத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும். என் இதயபூர்வமான, பாராட்டுக்கள் பலவற்றைத் தெரிவிக்கிறேன், அவர்களை வணங்குகிறேன்.

நண்பர்களே, வரவிருக்கும் காலத்தில், நாம் நம்முடைய முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்துவோம்.  நாம் ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள். என அனைவருக்கும், அதிகாரப்பங்களிப்பு வழங்குவதில், தொடர்ந்து பணியாற்றுவோம். 

அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளை, மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.  நாம் தற்சார்பு பாரதத்தை உருவாக்க, இரவுபகலாக பாடுபடுவோம்.  நாம் அனைவரும், உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்போம்.  இந்த மனவுறுதியோடு, நாம், 130 கோடி நாட்டுமக்களும், ஒன்றுபட்டு, உறுதிப்பாட்டு உணர்வோடு, பணியாற்றவும் வேண்டும், முன்னேறவும் வேண்டும்.

மீண்டும் ஒருமுறை, நான் உங்களிடத்தில் விடுக்கும் வேண்டுகோள்… உங்களிடத்தில் பிரார்த்தனையும் செய்கிறேன் வேண்டுகோளும் விடுக்கிறேன்

நீங்களும் அனைவரும், ஆரோக்கியமாக இருங்கள், ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைபிடித்து வாருங்கள், முககவசம், facecover mask ஆகியவற்றை எப்போதும் கைக்கொள்ளுங்கள், எந்தவொரு கவனக்குறைவோடும் இருக்காதீர்கள். 

இந்த வேண்டுகோளோடு, இந்த விருப்பத்த்தோடு, உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகள். நன்றி

  • தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
    ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version