― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்தமிழகத்துக்கு ‘குட்டு’..! மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு!

தமிழகத்துக்கு ‘குட்டு’..! மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு!

- Advertisement -

கோவிட்-19 நிலைமை குறித்து முதலமைச்சர்களுடனான உரையாடலின் போது பிரதமரின் உரை
தமிழில் : – K. V. பாலசுப்பிரமணியன் –

வணக்கம்! தமிழகத்தின் தஞ்சாவூரில் இன்று நடந்த சம்பவத்திற்கு முதலில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொடர்பான எங்களது இருபத்தி நான்காவது சந்திப்பு. கொரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்ட விதம், கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போரில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அனைத்து முதலமைச்சர்கள், மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளுடன் அனைத்து கொரோனா வீரர்களையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

சில மாநிலங்களில், அதிகரித்து வரும் கரோனா நோயாளிகள் குறித்து, சுகாதாரத்துறை செயலர் எங்களிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சரும் பல முக்கிய பரிமாணங்களை நம் முன் வைத்துள்ளார். இதனுடன், முதலமைச்சர் சகாக்களாகிய உங்களில் பலர் பல முக்கிய விஷயங்களை அனைவரின் முன்னிலையிலும் முன் வைத்திருக்கிறீர்கள். கொரோனாவின் சவால் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. ஓமிக்ரான் மற்றும் அதன் துணை மாறுபாடுகள் எவ்வாறு கடுமையான நிலைமைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கிறோம். கடந்த சில மாதங்களில், இந்த துணை மாறுபாடுகள் காரணமாக சில நாடுகளில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. பல நாடுகளை விட இந்தியர்களாகிய நாம் நம் நாட்டில் நிலைமையை மிகச் சிறப்பாகவும் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறோம். இதையெல்லாம் மீறி, கடந்த இரண்டு வாரங்களாக சில மாநிலங்களில் பாதிப்படைந்தோர் அதிகரித்து வருவதால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் வந்த அலையில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அனைத்து நாட்டு மக்களும் ஓமிக்ரான் அலையை வெற்றிகரமாக சமாளித்தனர், பீதியின்றி, நாட்டு மக்களும் போராடினர்.

நண்பர்களே,

இரண்டு ஆண்டுகளுக்குள், சுகாதார உள்கட்டமைப்பு முதல் ஆக்ஸிஜன் விநியோகம் வரை கொரோனா தொடர்பான அனைத்து அம்சங்களிலும் தேவையான அனைத்தையும் வலுப்படுத்தும் வேலையை நாடு செய்துள்ளது. மூன்றாவது அலையில், எந்த மாநிலத்திலிருந்தும் கட்டுப்பாடற்ற சூழ்நிலை பற்றிய அறிக்கை இல்லை. நமது கோவிட் தடுப்பூசி பிரச்சாரத்தின் மூலம் இதற்கும் நிறைய உதவி கிடைத்தது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், புவியியல் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், தடுப்பூசி மக்களைச் சென்றடைந்துள்ளது. இன்று இந்தியாவின் வயது வந்தோரில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். 15 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் 85 சதவீதம் பேர் ஏற்கனவே இரண்டாவது டோஸ் எடுத்துள்ளனர்.

நண்பர்களே,

உங்களுக்கும் தெரியும், மேலும் உலக வல்லுனர்களில் பெரும்பாலானோரின் முடிவு கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியே மிகப் பெரிய கவசம் என்பதாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நம் நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சில இடங்களில் பெற்றோருக்கு கவலை அதிகரித்து வருகிறது. சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது குறித்தும் சில செய்திகள் வருகின்றன. ஆனால், அதிகளவான குழந்தைகளும் தடுப்பூசியின் கவசத்தைப் பெற்றுள்ளார்கள் என்பது திருப்தியளிக்கும் விஷயம். மார்ச் மாதத்தில், 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கினோம். நேற்று முன்தினம், 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசி போடுவதே எங்கள் முன்னுரிமை. இதற்காக, முன்பு போலவே, பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும், அதை நாமும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்த, நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற தகுதியான நபர்களும் முன்னெச்சரிக்கை மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம், இந்த பக்கத்திலும் நாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நண்பர்களே,

மூன்றாவது அலையின் போது, ​​​​ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு தொற்று ஏற்பட்டதைப் பார்த்தோம். நமது அனைத்து மாநிலங்களும் இந்த அலையினைத் திறம்பட கையாண்டு, மற்ற சமூக-பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளித்தன. இந்தச் சமநிலை எதிர்காலத்திலும் நமது மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நமது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் தேசிய மற்றும் உலகளாவிய நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் பரிந்துரைகளின் பேரில், நாம் முன்கூட்டிய, சார்பு மற்றும் கூட்டு அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும். ஆரம்பத்திலேயே நோய்த்தொற்றுகளைத் தடுப்பது எங்களின் முன்னுரிமை; இப்போதும் அது அப்படியே இருக்க வேண்டும். டெஸ்ட், ட்ராக் மற்றும் ட்ரீட் ஆகிய எங்களின் உத்தியை நீங்கள் அனைவரும் குறிப்பிட்டது போல் திறம்பட செயல்படுத்த வேண்டும். கொரோனாவின் தற்போதைய சூழ்நிலையில், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு 100 சதவீதம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இதில் யாருக்கு நேர்மறை வந்தாலும், அவர்களின் இரத்த மாதிரி மரபணுச் சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும். இது சரியான நேரத்தில் மாறுபாடுகளை அடையாளம் காண உதவும்.

நண்பர்களே,

பொது இடங்களில் கோவிட் தொற்றுக்கு எதிரான நடத்தையை நாம் ஊக்குவிக்க வேண்டும், மேலும் மக்களிடையே பீதி பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

இன்றைய கலந்துரையாடலில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துரித கதியில் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் PSA ஆக்சிஜன் ஆலைகள் போன்ற வசதிகளின் அடிப்படையில் நாம் மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறோம். ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் செயல்பாட்டில் இருக்கின்றனவா என்பதை நாம் உறுதிசெய்து கண்காணிக்க வேண்டும், தேவைப்பட்டால் எந்த நெருக்கடியையும் சந்திக்க பொறுப்பை சரிசெய்ய வேண்டும். மேலும், எங்காவது இடைவெளி இருந்தால், அதை உயர்மட்டத்தில் சரிபார்த்து, அதை சரிசெய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள், இவை அனைத்திலும், நமது மருத்துவ உள்கட்டமைப்பை நாம் அதிகரிக்க வேண்டும், மேலும் மனிதவளமும் உறுதிசெய்யப்பட வேண்டும். பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் மூலம், நாம் தொடர்ந்து சிறந்த நடைமுறைகளை உருவாக்குவோம், மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை உறுதியாகப் போராடி, அதற்கான வழிகளைக் கண்டுபிடிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

அரசியலமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வைப் பின்பற்றி, இந்தியா இந்த நீண்ட போரை கொரோனாவுக்கு எதிராக உறுதியாகப் போராடியது. உலகச் சூழல், வெளிக் காரணிகளால் நாட்டின் உள் நிலைமைகள் பாதிக்கப்படுவதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதை எதிர்த்துப் போராடி, மேற்கொண்டு செய்ய வேண்டியிருக்கும். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால்தான் இன்று நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நண்பர்களே, இன்றைய விவாதத்தில் மேலும் ஒரு அம்சத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றைய உலகச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் வலுப்பெற, பொருளாதார முடிவுகளில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு, முன்னெப்போதையும் விட மிகவும் அவசியம். இவ்வாறான சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள விதமும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நெருக்கடி, உலக நெருக்கடி. இது பல சவால்களுடன் வருகிறது. நெருக்கடியான காலங்களில், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவு கூட்டாட்சி, ஒருங்கிணைப்பு உணர்வை மேலும் மேம்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது.

இப்போது ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். பெட்ரோல், டீசல் விலை நம் அனைவரின் முன் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தக் குறைப்பு செய்யப்பட்டது. மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைத்து, இந்தச் சலுகைகளை குடிமக்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்குப் பிறகு, இந்திய அரசின் இந்த மனப்பான்மையின்படி சில மாநிலங்கள் இங்கு வரியைக் குறைத்தன, ஆனால் சில மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு எந்த நன்மையையும் அளிக்கவில்லை. இதனால் மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகமாக உள்ளது. இது ஒருவகையில் இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வரியைக் குறைக்கும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது இயல்பு. உதாரணமாக, கர்நாடகா வரியை குறைக்காமல் இருந்திருந்தால், இந்த ஆறு மாதங்களில் அம்மாநிலத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்திருக்கும். குஜராத்தும் வரியை குறைக்காமல் இருந்திருந்தால், மூன்றரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் இதுபோன்ற சில மாநிலங்கள், தங்கள் குடிமக்களின் முன்னேற்றத்திற்காக, தங்கள் குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, VAT வரியைக் குறைத்துள்ளன, நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

மறுபுறம், அண்டை மாநிலங்களான குஜராத் மற்றும் கர்நாடகா இந்த ஆறு மாதங்களில் வரியைக் குறைக்காமல் மூன்றரை ஆயிரம் கோடி ரூபாய் முதல் ஐந்தரை ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட் வரியைக் குறைப்பது பற்றி பேசப்பட்டது எங்களுக்குத் தெரியும், நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் பல மாநிலங்கள், நான் இங்கு யாரையும் விமர்சிக்கவில்லை, நான் உங்களிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் மாநிலத்தின் குடிமக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இப்போது ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த நேரத்தில் சில மாநிலங்கள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொண்டன, சில மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இப்போது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்கள் சில காரணங்களால் இதை ஏற்காமல், தங்கள் மாநில குடிமக்கள் மீது தொடர்ந்து சுமையாகி வருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் இந்த மாநிலங்கள் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளன என்பது பற்றி நான் செல்லமாட்டேன். ஆனால், கடந்த நவம்பரில் நாட்டின் நலனுக்காக நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்று இப்போது கேட்டுக் கொள்கிறேன். ஆறு மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போதும், உங்கள் மாநிலத்தின் குடிமக்களுக்கு சுமையைக் குறைத்து அதன் பலனைக் கொண்டு வரவேண்டும்.

இந்திய அரசுக்கு வரும் வருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்குச் செல்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். உலகளாவிய நெருக்கடியின் இந்த நேரத்தில், கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வைப் பின்பற்றி, நாம் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் பல விஷயங்கள் உள்ளன. நான் விரிவாக செல்லப் போவதில்லை. உரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். உரங்களுக்காக இன்று நாம் உலக நாடுகளைச் சார்ந்து இருக்கிறோம். எவ்வளவு பெரிய நெருக்கடி. மானியங்கள் தொடர்ந்து பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. இந்த்ச் சுமையை நாங்கள் விவசாயிகளின் மீது ஏற்ற விரும்பவில்லை. இப்போது நாம் உரங்கள் விஷயத்தில் அத்தகைய பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறோம்.

எனவே நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், அனைத்து நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உங்கள் மாநிலத்திற்கும், உங்கள் அண்டை மாநிலத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இன்னும் ஒரு உதாரணம் தருகிறேன். இப்போது நவம்பரில் செய்ய வேண்டிய பெட்ரோல் விலை குறைப்பைச் செய்யவில்லை. அப்படியானால் கடந்த ஆறு மாதங்களில் என்ன நடந்தது? சென்னையில் இன்று பெட்ரோல் விலை 111 ரூபாய். ஜெய்ப்பூரில் 118க்கும் அதிகம். ஹைதராபாத்தில் 119க்கும் அதிகம். கொல்கத்தாவில் 115க்கும் அதிகம். மும்பையில் 120க்கு மேல் உள்ளது. விலை குறைத்த மாநிலங்களைப் பார்த்தீர்களானால், மும்பையை அடுத்த டியூ டாமன் 102 ரூபாய் வைத்துள்ளனர். மும்பையில் 120, தியு டாமனில் 102 தவிர இப்போது கொல்கத்தாவில் 115, லக்னோவில் 105. ஹைட்ராபாதில் சுமார் 120, ஜம்முவில் 106. ஜெய்ப்பூரில் 118, கவுகாத்தியில் 105. குருகிராமில் 105, நமது சிறிய மாநிலமான உத்தரகாண்ட் டேராடூனில் 103 ரூபாய். நான் உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் ஆறு மாதங்கள், உங்கள் வருவாய் அதிகரித்த்து. உங்கள் மாநிலம் பயனடைந்தது. ஆனால் இப்போது நீங்கள் நாடு முழுவதிற்காக ஒத்துழைக்க வேண்டும். இது இன்று உங்களுக்கு எனது சிறப்பு வேண்டுகோள்.

நண்பர்களே,

இன்று நான் சொல்ல விரும்பும் மற்றொரு செய்தி. நாட்டில் வெப்பம் வேகமாக அதிகரித்து வருவதுடன், வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னராகவே அதிக வெப்பம் அதிகரித்து வருவதுடன், இதுபோன்ற நேரங்களில் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். கடந்த சில நாட்களாக வனப்பகுதிகள், முக்கிய கட்டிடங்கள், மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பல மருத்துவமனைகள் தீப்பிடித்து எரிந்தபோது அந்த நாட்கள் எவ்வளவு வேதனையானவை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அது மிகவும் வேதனையான சூழ்நிலையாக இருந்தது. அது மிகவும் கடினமான நேரம். இந்த விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, இனிமேல், குறிப்பாக மருத்துவமனைகளில், பாதுகாப்புத் தணிக்கை செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களை நாம் தவிர்க்கலாம், இதுபோன்ற சம்பவங்களை குறைக்க வேண்டும், நமது Response Time குறைவாக இருக்க வேண்டும், உயிர் மற்றும் சொத்து சேதம் ஏற்படக்கூடாது, இதற்காக உங்கள் குழுவை இந்த பணியில் சிறப்பாக ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் எங்கும் விபத்து இல்லை என்ற நிலையை உருவாக்குங்கள். நம் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழக்கக் கூடாது.

நண்பர்களே,

என்னுடைய பேச்சைக் கேட்க நேரத்தை ஒதுக்கியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காக நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். உங்களிடம் ஏதேனும் முக்கியமான ஆலோசனைகள் இருந்தால் அதனை எனக்குத் தெரிவியுங்கள். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version