― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதிருப்பதிக்கு முடிஞ்சி வெச்ச பணம்...போகமுடில! மக்கள் சேவைக்கு பயன்படட்டும்! - இப்படி எத்தனை உருக்கமான சம்பவங்கள்!?

திருப்பதிக்கு முடிஞ்சி வெச்ச பணம்…போகமுடில! மக்கள் சேவைக்கு பயன்படட்டும்! – இப்படி எத்தனை உருக்கமான சம்பவங்கள்!?

- Advertisement -

சேவாபாரதி தமிழ்நாடு – கொரோனா நிவாரணப் பணி
– சில நல்ல அனுபவங்கள்

• சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் ஆறு வயது சிறுவன் பிரனவ் தன் பெற்றோர்கள் கொடுத்த பணத்தில் சேமித்து வைத்திருந்த ரூபாய் 1,750 கோரோனா தடுப்பு சேவைப் பணிகளுக்கு பயன்படுத்த கூறி கொடுத்துள்ளார்.

• ஈரோடு ரங்கம்பாளையம் அருகில் உள்ளது சத்யா நகர். அங்கு கட்டட வேலை செய்பவர்களுக்காக மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. அதை வாங்கியவர்கள் அருகில் இருந்த இரு குடும்பத்தைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு அவசியம் கொடுங்கள். அவர்கள் உணவு பொருட்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை என்று அவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த மளிகைப் பொருட்களை அந்த இரு குடும்பங்களுக்கு கொடுக்க வைத்தனர்.

• திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஐந்து சுய உதவி குழுக்கள் மூலம் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க வேண்டிய பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த குழு உறுப்பினர்கள் யாரும் தங்களை பயனாளிகள் பட்டியலில் சேர்க்காமல், உண்மையில் கஷ்டப்படுகிறவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரித்தனர்.

• ஓசூர், பேரிக்கைக்கு அருகிலுள்ளது குத்திக் காடு என்ற கிராமம். உண்மையில் காடு. காரணம் 13 கிலோ மீட்டருக்கு பஸ் வசதி இல்லாத கிராமம். குடிசை வீடுகள் மட்டும்தான் அங்கு காணமுடியும். அந்த கிராமத்தில் அர்ச்சனா என்கிற சகோதரி சேவாபாரதி பண்பு பயிற்சி முடித்தவர். அவரிடமிருந்து சேவாபாரதிக்கு தகவல் வந்தது. ஒரு மாதமாக யாரும் வேலைக்கு செல்ல முடியாததால் இங்கு வறுமையில் வாடுகிறார்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒசூர் சேவாபாரதியை சார்ந்த நிவேதிதா அன்பு இல்ல (பெண்களுக்கானது) சகோதரிகள் உடனடியாக விரைந்து சென்று அந்த பகுதி மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்தார்கள். அதில் பல பொருட்கள் எதற்காக என்பதுகூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நிறைவாக விடைபெறும் போது, அர்ச்சனாவின் அம்மா கொஞ்சம் இருங்க எங்க வீட்டில் ராகி அதாவது கேழ்வரகு இருக்கு. நீங்க அதைக் கொண்டு போங்க. அன்பு இல்ல குழந்தைகளுக்கு அதை சமைச்சுப் போடுங்க என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று மறுத்து பேச அந்தம்மா மிகவும் கண்டிப்புடன் அந்த குழந்தைகளுக்காக நாங்கள் தருகிறோம் என்று சொன்னதோடு ஒரு மூட்டை ராகி (55 கிலோ) வண்டியில் ஏற்றிவிட்டார். இறைவன் குடிசையிலும் வாழ்கிறான்.

• தாம்பரம் சானடோரியம் பகுதியை சேர்ந்த மங்களகௌரி என்ற அம்மையார் ஒரு மாதம் முன்பு சேவாபாரதி பொறுப்பாளர்களை அழைத்து ரூபாய் ஆயிரம் கொடுத்தார். பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். மீண்டும் ஒரு வாரம் கழித்து அழைத்தார்.

அங்குள்ள பொறுப்பாளர்கள் சென்று இது பற்றி கேட்டார்கள். நான் வாரா வாரம் திருப்பதி சென்று வருவேன். இப்போது போக முடியாததால் உங்கள் சேவாபாரதி சேவைக்கு தருவதன் மூலம் எனது மனது சந்தோஷமடைகிறது என்று கூறி அந்த வாரம் ரூபாய் 1600 கொடுத்தார்கள. மீண்டும அடுத்த வாரம் நேற்று ரூபாய் 1000 கொடுத்தார்கள்.

• ஈரோடு ஈஸ்வரன் கோயில் பகுதியில் மாஸ்க் சேவாபாரதி சார்பில் வினியோகம் செய்தபோது ஒரு முதியவர் அதை பெற்றுக்கொண்டு சிறிது தயக்கத்தோடு தம்பி இது போன்ற சேவைகளை செய்து வருகிறீர்கள். என்னால் முடிந்த தொகை ரூபாய் 100 தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

சேவாபாரதி பொறுப்பாளர்களும் சரி என்று பெற்றுக் கொண்டனர். பணம் கொடுத்து பின்னர் எங்களது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு முகக் கவசம் தேவைப் படுகிறது தருவீர்களா என்றார் பொறுப்பாளர்களும் ஐந்து முகக் கவசத்தை கொடுத்தபோது இதற்கான தொகை ரூ.50 பெற்றுக் கொள்வீர்கள் என்றால் மட்டுமே இதை நான் வாங்கிக் கொள்வேன் இல்லாவிட்டால் வேண்டாம் என்றார்.

அந்த பெரியவரின், விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அந்த எண்ணம் சேவாபாரதி பொறுப்பாளர்கள் மனதை கவர்ந்தது.

• விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஓன்றியம் சென்னகுணம் என்ற ஊரில் ஜெயலெட்சுமி மற்றும் அவரது கணவர் கண்ணன் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் வயதானவர்கள். கண்ணன் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு தண்ணீர் சுமர்ந்து வந்து கொடுத்து அதில் வரும் வருமானத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர். தற்பொழுது முழு ஊரடங்கால் கடைகள் திறக்காததால் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

அந்த சமயத்தில் சேவாபாரதி பொறுப்பாளர் மூலம் நிவாரணமாக மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதை பார்த்து அவர்கள் இன்னும் ஒரு மாதத்திற்கு எங்களுக்கு உணவிற்கு கஷ்டமில்லை என்று உணர்ச்சி வயப்பட்டு கூறினர்.

• விழுப்புரம் மாவட்டம் கானை ஓன்றியம் மாம்பழப்பட்டு என்ற ஊரில் பேபி என்ற 65 வயது பெண்ணுக்கு தலையில் அடிப்பட்டு ஒரு பக்கம் மண்டை ஓடு இல்லை. அவரது கணவரும் இல்லை. வறுமையில் உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறர் என்ற தகவல் அறிந்த சேவாபாரதி குழுவினர் அவருக்கு அரிசி, மளிகை பொருட்கள் கொடுத்தனர். அந்த பொருட்களைப் பார்த்தும் அந்த அம்மா அழுது கொண்டே வருமானம் இல்லை. பணம் இல்லை. எப்படி சாப்பிடுவது என்று புரியாமல் தவித்த நேரத்தில் நீங்கள் வீடு தேடி வந்து கொடுத்தது மகிழ்ச்சி என்று வாழ்த்தினார்

• ஈரோட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழங்கள் கொடுத்து கொண்டிருந்த போது, ஒரு லைன் வீட்டில் எட்டு குடியிருப்புகள் இருந்தன. அவற்றில் முதல் குடும்பம் ஒரு கிறிஸ்தவ குடும்பம். அவர்களுக்கு கொடுத்தவுடன் அடுத்த வீட்டிற்கு கொடுக்க சென்ற போது, அங்கிருந்த ஒரு மூதாட்டி, பொறுப்பாளர்கள் கிறிஸ்தவ அமைப்பிலிருந்து வந்து பழம் கொடுப்பதாக நினைத்து, தான் ஒரு இந்து, எனக்கு கிறிஸ்துவ அமைப்புகள் கொடுக்கும் பொருள் வேண்டாம் என்று கூறினார்.

பிறகு சேவாபாரதி பொறுப்பாளர்கள் அவரிடம் தாங்கள் இந்து அமைப்பிலிருந்து வருகிறோம் என்று கூறியபின் தான் பழத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் அவரது காலில் விழுந்து வணங்கிய போது, ஆயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார்.

யார் எது கொடுத்தாலும் மறுக்காமல் பெற்றுக் கொண்டு வாழும் இந்த சமுதாயத்தினர் மத்தியில், பிற மதத்தை சேர்ந்தவர்கள் கொடுத்தால் அதை வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கும் அவரது எண்ணம் சேவாபாரதி பொறுப்பாளர்களை மிகவும் கவர்ந்தது.

• கடலூர் மாவட்டம் B முட்லூரில் சேவாபாரதி கல்விதான மையத்தில் லோச்சனா என்ற கல்லூரி மாணவி ஆசிரியையாக உள்ளார். அவரிடத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியும் பயில்கின்றனர். அந்த பிள்ளைகளின் அப்பாவுக்கு கண் தெரியாது. அம்மாவுக்கு கால் ஊனம். அம்மாதான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அந்த குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் தொகுப்புகளை வழங்கியபோது அந்த தாய் நமது ஆசிரியை அவர்களை கண் கலங்க வாழ்த்தியது அனைவரையும் நெகிழ செய்தது.

• ஆம்பூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது ஜவ்வாதுமலை. அந்த மலைமேல் உள்ள கிராமங்களில் சிலர் வறுமையால் கஷ்டப்படுவதாக செய்தி கிடைத்தது. அதற்காக திருப்பத்தூரிலிருந்து மலைதிருப்பத்தூர் சென்று அங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் ஜல்லி ரோட்டில் ஆட்டோவில் பயணித்து, நெல்லிபட்டு, நெல்லி வாசல், மணல் திருப்பத்தூர், சேம்பாறை, வழுதலாம்பட்டு பழைய பாளையம் கிராமங்களில் கஷ்டப்படுகிற மக்களுக்கு மளிகை தொகுப்பு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. ஜல்லி ரோட்டில் பயணித்து பொருட்களை கொடுத்தது வனவாசி மக்களுக்கும் மகிழ்ச்சி, ரொம்ப சிரமம்பட்டு பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்தது சேவாபாரதி பொறுப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி.

• சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து ஒரு அவசர தொலைபேசி வந்தது. விடுதியில் தங்கியிருப்பவர்கள் தினமும் தேனீர் குடித்து பழக்கம் உள்ளது. இப்போது சர்க்கரை இல்லாமல் அவர்கள் தேனீர் குடிக்க முடியாமல் சீற்றமாக உள்ளனர் என்றும் உடனடியாக சர்க்கரை தேவை என்றும் அந்த விடுதியை நடத்திவரும் ஒரு முஸ்லிம் பெண்மணியிடமிருந்து செய்தி வந்தது. உடனே சேவாபாரதி பொறுப்பாளர்கள் அவர்களுக்கு தேவையான சர்க்கரை வழங்கினர்.

• சேலத்தில் வீராணம் அருகில் உள்ளது தாதம்பட்டி. கம்யூனிஸ்ட்கள் அதிகம் உள்ள பகுதி. சில நாட்கள் முன் ஒரு கம்யூனிஸ்ட் ஆட்டோ ஓட்டுனர் சேவாபாரதி பொறுப்பாளரை தொடர்பு கொண்டு தாதம்பட்டியில் நிறைய பேர் உணவு இல்லாமல் கஷ்டபடுவதாகவும் உணவு அளிக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டார். ஏன் உங்களுக்கு கம்யூனிஸ்ட்கள் உதவி செய்யவில்லையா என்று கேட்க, எங்கள் கட்சி ஒன்றும் செய்யவில்லை என்று கூறினார். அந்த ஊரில் சேவாபாரதி மூலம் தினசரி 50 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

• சேலத்தில் சேவையாற்றும் 13 சேவை நிறுவனங்களை அங்கிருக்கும் சேவாபாரதி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து சேவையாற்றும் இடங்களை பிரித்திருக் கிறார்கள். இதன் மூலம் சேலத்தில் எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

• ஆத்தூரில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

• தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியில் வீடுகளில் தனிமையில் இருக்கும் பெரியவர்களை கவனம் கொடுத்து மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

• சேலத்தில் தினசரி உணவு வழங்கல் மற்றும் இதர பணிகளை ஈடுபட்டு வருபவர் திரு கேசவன். சமீபத்தில் அவரது மனைவிக்கு பிறந்த நாள் வந்தது. வழக்கமாக ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு தொகையை மனைவிக்கு பரிசாக அளிப்பார். அன்றும் அவ்வாறே நடந்தது. அவரது மனைவி அந்த பணத்தை பெற்றுக்கொண்டு உடனடியாக பத்து கிட் மளிகை பொருட்கள் வாங்கி எளியவர்களுக்கு தேவைப்படுவோர்களுக்கு தானம் அளித்தார். ஏன் எனக் கேட்டதற்கு கணவனின் பணியில் மனைவிக்கும் சமபங்கு இருக்கிறது என்றார்.

  • கா.சீனிவாசன், சேவாபாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version