கார்கில் வெற்றி தின கொண் டாட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் துவங்கியுள்ளது.


கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 23-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
கார்கில் வெற்றி விழாவை லடாக்கில் பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
லடாக்கில் நேற்றே இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. லடாக்கில் 24-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கார்கில் வெற்றியை நினைவுபடுத்தும் ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவர்களுக்கு லடாக் பகுதியின் ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சென்குப்தா பாராட்டு தெரிவித்தார். மேலும், கார்கில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு, அப்போது வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக்கின் கண்டா கர் பகுதியிலிருந்து மூவர்ணக் கொடி பேரணியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
கார்கில் விஜய் திவாஸ் நமது ராணுவத்தின் வீரத்திற்கான சின்னம். நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்.அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள் என ஜனாதிபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது, நமது மகத்தான தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க தங்கள் இறுதி மூச்சு வரை போராடி, கார்கிலில் நமது தாய்நாட்டின் நிலப்பரப்பை எதிரிகளிடமிருந்து மீட்டெடுத்த நமது மாவீரர்களின் வீரத்திற்கும், தைரியத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். 1999 ஆம் ஆண்டு ஜூலை 26 -ம் தேதி, நாட்டின் வலிமையை வெளிப்படுத்திய நமது வீரர்களின் துணிச்சலை உலகம் முழுவதும் கண்டது. வீரர்களின் சுய தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். வீரர்கள் குடும்பத்தினரின் தளராத துணிச்சலுக்கும் நான் தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.