
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
பாரத தேசத்தில் கோவில்களை தரிசிப்பதற்கும், தீர்த்த யாத்திரைகளுக்கும் பக்தர்கள் கடல் போல் திரண்டு வருகிறார்கள். ரத யாத்திரை, புஷ்கரம், வீதி ஊர்வலம் எங்கு பார்த்தாலும் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். அதனால் ஹிந்துக்களின் வலிமை நன்றாக உள்ளது என்று பலரும் கருதுகிறார்கள்.
ஆனால் இந்த மக்கட் பிரவாகம் நம் சானதன தர்மத்தைப் பாதுகாப்பதற்கும் இதே போல் ஒன்று கூடுமா என்பது கேள்வி. தம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கோவில்களில் கூட்டமாகக் கூடும் இந்த மக்கள், கோவில்கள் மற்றும் தெய்வங்களின் விஞ்ஞானத்தை அறிந்து கொண்டுள்ளனரா? மகிமைகளை அறிவதில் மட்டும் ஆர்வம் காட்டினால் போதாதல்லவா? அந்தந்த கோவில்களில் சிறப்பு, ஆலயம் அமைந்துள்ள திருத்தலத்தின் முக்கியத்துவம், வரலாற்றுப் புகழ் போன்றவற்றையும் அறியவேண்டிய தேவை உள்ளது. அதே போல் நம் கடவுளர்களின் மேலும் சம்பிரதாயங்களின் மீதும் அவமதிப்புகள், கீழான விமரிசனம் செய்பவர்களுக்கு தகுந்த ‘பதில்’ சொல்வதும் அவசியம்.
நம்மைக் காக்கும் தெய்வங்களையும் திருத்தலங்களையும் பாதுகாப்பதற்கு நாம் எப்போதும் ‘தயாராக’ இருக்க வேண்டும்.
இந்த பதில் கூறுதலும், தயாராதலும் பிறரிடம் கொண்ட வெறுப்பினால் நடக்கக் கூடாது. நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்றால், முதலில் ‘நம்முடையது’ என்ற எண்ணம் இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் ‘பக்தி’ இருக்க வேண்டும்.
ஆனால் ஹிந்துக்களில் சாதாரணமாக ‘குலம்’ என்பது பற்றி யோசிக்கும் போது மட்டும் ‘நம்முடையது’ என்ற எண்ணம் பொங்கி வருகிறது. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சந்தர்பத்தில் ஏதாவது ஒரு குலத்தைச் சற்று குறைத்து பேசிவிட்டால், பேசியவர் எத்தனை பெரிய மதிப்பிற்குரியவரானாலும், மகானானாலும் விடாமல், அந்தந்த குல சங்கங்கள் ஒன்று சேர்ந்து வந்து ஏகப்பட்ட ரகளை செய்து அச்சுறுத்துவதும், மன்னிப்பு கேட்க வைப்பதுமாக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பெரியவர்கள் வேண்டுமென்றே பேசியிருக்காவிட்டாலும் கூட, தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலும் கூட ரகளை செய்பவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.
இந்த ஒன்றுபட்ட சக்தியைப் பார்க்க நன்றாக உள்ளது. ஆனால் நம் தெய்வகளையோ கோவில்களையோ சனாதன தர்மத்தையோ கீழ்த்தரமாக, விமரிசித்தாலோ, அவமதித்தாலோ இந்த குல சங்கங்களுக்கு எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. அதாவது ‘குலம்’ என்பதிடம் உள்ள ‘நம்முடைய’ என்ற உணர்வு நம் சனாதன் தர்மத்தின் மேல் இல்லை என்பது தெளிவாகிறது. ஹிந்து மதத்தில் பல ஜாதிகள், குலங்கள் உள்ளன. குலங்கள் அனைத்திற்கும் ஹிந்து மதத்தின் தெய்வங்களும் கோவில்களும் வழிபாட்டுக்குரியவை. பின், தம் தெய்வங்களையும் அவற்றின் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு ஏன் முன்வருவதில்லை?
ஆலய நிர்வாகத்தின் உள்ளே அரசியல் விஷப் புழுவாக ஊடுருவினாலும் எதுவும் கேள்வி கேட்பதில்லை. கோயில்களை இடித்தாலும் தட்டிக் கேட்பதற்கு ஒன்று சேர்வதில்லை. பத்திரிகைகளிலும், பல்வேறு ஊடகங்களிலும் ஹிந்துக் கடவுளர்களையும் தேவிகளையும் அவமானப்படுத்தினாலும் எதிர்க்காமல் இருகிறார்கள்.
தாமாகவே முன் வந்து செய்யாவிட்டாலும், போராடும் ஒரு சிலருக்கு உதவிகரமாகவாவது இருக்கலாமே! பிறர் தம் மதத்தைப் பரப்புவதற்காக ஹிம்சையையும் வஞ்சனையையும் அவிழ்த்து விடும்போது கேள்வியாவது கேட்கலாமே!
அரசியலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் நம் ஹிந்து மதத்தின் விஷயத்தில் காட்டுவதில்லை. யாராவது வாய்ச் சவடாலாக சட்டத்திற்கு விரோதமாக பயமுறுத்தினால் அஞ்சுகிறோம். ஓட்டமெடுக்கிறோம். தாக்கினால் பலியாகிறோம். மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இது சர்வ சகஜமாக நடக்கிறது. நம் ஹிந்து தர்மதத்திற்காக வீரத்தைக் காட்டுவதில்லை. நம்முடையது பிறரைப் போல் ஆக்கிரமிக்கும் போராட்டம் அல்ல. ஆனால் தற்காப்புக்காகவாவது போராட வேண்டுமல்லவா? மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரங்களை பிற மாநிலங்களுக்கும் பரப்புவதற்குக் கூடுகிறார்கள்.
நம்மை யாராவது தாக்கினால் பொறுத்துப் போவது மட்டும்தானா? அல்லது நமக்கு அரசியலும், பாதுகாப்பு அமைப்பும் துணையாக உள்ளது என்று நினைத்து ஏமாந்து போகிறோமா? வாய்ச் சொல்லில் வீரரான அரசியல் பிரமுகர்களும் அவர்களின் கண் சைகையில் பணி புரியும் பாதுகாப்பு அமைப்பும் ஹிந்துக்களிடம் ஆதரவாக, வேறுபாடின்றி பணி புரியும் என்று எதிர்பார்ப்பது வெறும் பிரமையே.
ஒவ்வொரு ஹிந்துவும் தர்மத்தைப் பாதுகாப்பதற்காக வலிமை பெற வேண்டும். இருக்கும் வலிமையை பயன்படுத்தவேண்டும். ஆவேசமாகவோ வெறுப்பாகவோ அல்ல. நம்மேல் நடக்கும் தாக்குதலுக்கு நாமே பதில் கொடுக்க இயலுவதற்கு உறுதியான உடல் பலம், ஒற்றுமையான சமுதாய வலிமை – இரண்டுமே தேவை.
அறிவளவில் நடக்கும் தாக்குதல்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் கொடுத்து எதிர்க்க முடிய வேண்டும். அதே போல் உடலளவில் நடக்கும் தாக்குதல்களுக்கும் பதில் கொடுக்கத் தெரியவேண்டும்.
உலகில் எத்தனையோ அழிவுகளையும் மரணங்களையும் நிகழ்த்திய ஹிம்சை வரலாற்றோடு கூடியதும் இன்றுவரை பல இடங்களில் அவற்றையே தொடருவதுமான பயங்கரமான மதங்களிடம் பல வெளிநாடுகள் உதார குணத்தையும் கௌரவத்தையும் அறிவித்துள்ளன. அவற்றின் மீதுள்ள அச்சமும், அவர்களிடம் உள்ள செல்வத்தின் மீதுள்ள ஆசையும் காரணமாக இருக்காலம். இந்த நிலையில் தம்முடையது ‘அமைதி மதம்’ என்று கூறிக் கொண்டு ஏமாற்றுவதும் நடக்கிறது. அவர்கள் அளிக்கும் நிதி மீது பேராசையோடு பாரத தேசத்தின் முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கு முன்னேறிய நாடுகள் கூட முன்வந்து, அவர்களோடு கை கோர்த்துப் பொய்ப் பிரச்சாரம் செய்வதும், ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டுவதும் நடக்கிறது. இந்த விஷயங்களை உணர்ந்து அறிவுப் பூர்வமாக அவர்களின் வாயை அடைப்பதற்கு நாம் வல்லமை பெற வேண்டும்.
ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் ஏதாவது மதக் கலவரம் நடந்தால் உடனே அவர்களைப் பாதுகாப்பதற்கு வீரர் படை ஒன்று தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு கோவிலின் பாதுகாப்பிலும் இந்தப் படை பணி புரிய வேண்டும். இவையனைத்தும் அரசியல் சட்டத்திற்குட்பட்டு இருக்கும் விதமாக அமைக்கப்பட வேண்டும்.
கத்தி பிடித்து வருபவனையும் தாக்குதல் நடத்துபவனையும் பயமுறுத்தியாவது விரட்டும் சாகசமும், துணிந்து எதிர்க்கும் வீரமும் நாம் பெற வேண்டும். சில இடங்களில் இத்தகைய ஹிம்சை மதங்களுக்கு உதவ மறுப்பது, சத்தியாகிரகம் போன்றவை நடக்கின்றன. அவை வரவேற்கத்தக்கவையே.
“நாங்கள் யாரையும் நிந்திக்க மாட்டோம். யார் மீதும் தாக்குதல் செய்ய மாட்டோம். ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வது எங்கள் சுபாவம். ஆனால் நீ நூறு முறை திட்டினால் ரோஷத்தோடு ஒரு வார்த்தை சொன்னால் கூட நீ ரகளை செய்கிறாய். பயமுறுத்துகிறாய். ஹிம்சிக்கிறாய். உன்னை மெச்சிக் கொள்வதற்கும் அரவணைப்பதற்கும் அரசியல் தலைவர்களும், போலி மேதாவிகளும் உன் மத நாடுகளும் தயாராக உள்ளன என்பது உண்மைதான். எங்களுக்கென்று ஒரு தேசம் கூட இல்லாமல் செய்தீர்கள். பல யுகங்களாக இந்த தேசத்திலேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து எத்தனையோ அழிவுகளை எதிர்கொண்டுள்ள எங்கள் மதத்திற்கு திக்கெவரும் இல்லை என்று நினைக்காதே. எங்களை நாங்களே காப்பாற்றிக் கொன்வோம். நீ தாக்கினால் அது சுயமரியாதையா? நாங்கள் எதிர்த்தால் அதற்குப் பெயர் சகிப்பின்மையா?” என்று சத்தியத்தின் வலிமையோடு எதிர்த்து நிற்கும் சக்தி ஹிந்து இனத்திற்கு இப்போது கூட வராவிட்டால் சனாதன தர்மத்திற்கும் பாரத தேசத்திற்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே. ஹிந்துக்களிடம் ஏற்படும் ஒற்றுமையின் வலிமை மட்டுமே தேசத்தை துண்டாக்காமல் வளர்ச்சியோடும் அமைதியோடும் முன்னேற்றக் கூடியது.
(தலையங்கம் – ருஷிபீடம் ஆகஸ்ட்,2022)