
திருக்குற்றாலம் கோயிலருகே அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் சாம்பலாகின. 10க்கும் மேற்பட்ட கடைகள் நாசமாகின.
தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சீஸன் காலமாகும். அதன் பின்னும் பாதி சீஸன் காலம் எனப்படும் மழைக்காலம். இந்த சீசன் காலங்களில் திருக்குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்தவர்கள் திருக்குற்றாலநாதர் கோயிலின் தெற்கு பிராகாரம், வடக்கு, கீழ்பிராகாரப் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வார்கள்.
இங்கே, விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார்களைத் தெரிவிப்பதுண்டு. இந்தப் பகுதிகளில், டீ பஜ்ஜி கடை, சிப்ஸ் கடை, டிஃபன் கடைகளும், துணிக்கடைகள், பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளும் அதிக அளவில் போடப்படுவதுண்டு.
அண்மைக் காலமாகவே சீஸன் பிரச்னைக்கு உரியதாகவே மாறி விட்டது. இடையில் வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக நான்கைந்து வருடங்களாக சீஸன் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பெரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டும் சீசன் ஜூலை மாதம்தான் தொடங்கியது. தொடங்கிய இரு வாரங்கள் தான் மழையும் காற்றுமாக இருந்தது. ஆனால் ஜூலை பாதிக்கு மேல் வெயில் வாட்டியது. தற்போதும் குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிகக் குறைவாக தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் வியாபாரம் இன்றி இங்கே கடை போட்டவர்கள் ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில், திருக்குற்றாலநாதர் கோவில் தெற்கு பிராகார பகுதியில் போட்டிருந்த ஒரு கடையில் வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று வேகமாக வீசியதாலும் தொடர்ந்து இடைவெளி இன்றி கடைகள் இருந்ததாலும் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. வியாபாரிகள் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர். சில கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால், மேலும் பல கடைகளுக்கும், அருகில் சிற்றாற்றின் கரை பகுதியில் உள்ள மரங்களிலும் தீ பரவி பச்சை மரங்கள் எரிந்து பட்டுப் போயின. சிலிண்டர்கள் வெடித்தது வெடிகுண்டு வெடித்ததைப் போன்ற சத்தத்தை எழுப்பியதால் வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் பீதி அடைந்தனர்.
தீ விபத்து குறித்து அறிந்த தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மழையில்லாமல் கடும் வெயில் நிலவியதால் தீ எளிதில் பரவி விட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. திருக்குற்றாலநாதர் கோவில் பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. தீ விபத்தில் நாசமான பொருள்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் கடைகள் போதுமான இடைவெளி விட்டு அமைக்கவும், விதிமுறைகளை மீறாமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியை கேள்விப்பட்டவுடன் விபத்து நடந்த பகுதிக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி நேரில் சென்று பார்வையிட்டார்.
திருக்குற்றாலநாதர் கோவிலில் மதில் சுவரில் உள்ள 21 கடைகள் பெரும் தீ விபத்தினால் எரிந்து சாம்பல் ஆயின இதனை ஆய்வு செய்ய வந்த மாவட்ட கண்காணிப்பாளர்சாம்சங்கிடம் குற்றாலநாதர் கோவிலில் நடைபெறும் சீர்கேடுகள் குறித்தும் முறையான அனுமதி வாங்காத கடைகள் குறித்தும் பாதுகாப்பு குளறுபடிகள் அன்னதானக் கூடத்தில் தங்கி இருக்கும் காவலர்கள் அசைவ உணவு உண்பதையும் தென்காசி இந்து முன்னணி பொறுப்பாளர் இசக்கிமுத்து எடுத்துக் கூறினார்.. உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.