
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார்
பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் 28.09.2023 வியாழக்கிழமை இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.
எம்.எஸ்.சுவாமிநாதன், கும்பகோணத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டத்தையும் பெற்றார்.
பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில், இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். வேளாண்மைத்துறை செயலாளர், நடுவண் திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
இவருடைய பணிகளுக்காக பல்வேறு விருதுகள் இவரை அலங்கரித்துள்ளன. இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன. தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகள், பெருமைமிகு மகசேசே விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972-79 வரை இருந்த போது, அரிசி, கோதுமை விளைச்சலை அதிகரிக்க பசுமைப் புரட்சி திட்டங்கள் செயல்படுத்தியவர். அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியவர். இவரது முயற்சிகளின் வெற்றி காரணமாக இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று கொண்டாடப்பட்டார்.
எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.