போதை மகனைக் கொன்றதாக எழுத்தாளர் சௌபா கைது!

sauba1 horz

மதுரை:போதை மகனைக் கொன்றதாக அளிக்கப் பட்ட புகாரில், எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் இன்று போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியிலுள்ள டோக் நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் செளபா என்ற சௌந்திரபாண்டியன் (55). எழுத்தாளரான இவரது மனைவி லதா பூரணம் கோவில்பட்டி அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார்.

இவர்களது மகன் விபின் (27). விபினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 15 வருடங்களாக  கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். விபின் இருவரிடமும் அவ்வப்போது தங்கி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தந்தையுடன் மதுரையில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் தனது மகனின் செல்போனில் பேச லதா பூரணம் முயன்றுள்ளார். ஆனால் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் சந்தேகப்பட்டு தனது மகனை மே 5ஆம் தேதி முதல் காணவில்லை என எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் விபின் மாயமானதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதனிடையே, சந்தேகத்தின் பேரில் அவரது தந்தை சௌந்திரபாண்டியனிடம் 3 நாட்களாக விசாரித்தனர். இதில் மகன் விபினை சௌந்திரபாண்டியன் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறியது…

சௌந்திரபாண்டியனிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மகன் எங்கிருக்கிறார் என தெரியாது என்றும், எங்காவது காப்பகத்தில் சேர்ந்திருக்கலாம் எனவும் முரண்பட்ட தகவல்களைத் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கிடையில் விபின் இறந்து விட்டதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது.

இதை உறுதி செய்ய சௌந்திரபாண்டியனுக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகில் உள்ள அவரது தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு பணிபுரியும் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பூமி(40), நிலக்கோட்டையைச் சேர்ந்த கனிக்குமார்(42) ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். இதில் விபின் இறந்த நிலையில், அவரது தந்தை சௌந்திரபாண்டியன் தனது காரில் கொண்டு வந்ததாகவும், மகனின் உடலை எரித்து, 6 அடி குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மீண்டும் சௌந்திரபாண்டியனிடம் விசாரித்தோம். மது போதையில் இருந்த விபின் வீட்டில் தன்னுடன் தகராறில் ஈடுபட்டபோது, ஆத்திரத்தில் சுத்தியலால் தாக்கியபோது, எதிர்பாராத விதமாக மகன் இறந்துவிட்டதாக சௌந்திரபாண்டியன் கூறினார். அவரது உடலை தோட்டத்துக்குக் கொண்டு சென்று எரித்து புதைத்ததாகத் தெரிவித்தார்.

எனிலும் விபினின் உடலை இன்று (மே 10) வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும். தற்போது கிடைத்த ஆதாரம், தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின்பேரில் விபின் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளோம். அவரது தந்தை சௌந்திரபாண்டியன் உட்பட 3 பேரும் எங்களது விசாரணை வளையத்தில் உள்ளனர் என்று கூறினர்.