― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நிஜாமின் கொடூரத்தில் தப்பிஓடி... முதல் பெண் செய்தி வாசிப்பாளரான... மாடபாடி சத்தியவதி!

நிஜாமின் கொடூரத்தில் தப்பிஓடி… முதல் பெண் செய்தி வாசிப்பாளரான… மாடபாடி சத்தியவதி!

- Advertisement -

ஹைதராபாத் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் மாடபாடி சத்தியவதி நேற்று தமது 80ஆவது வயதில் காலமானார். சந்திரபாபு நாயுடு, ஜகன் மற்றும் பல பிரமுகர்கள் சத்தியவதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆகாசவாணி முன்னாள் செய்தி வாசிப்பாளர் மாடபாடி சத்தியவதி புதன்கிழமை விடியற்காலை காலமானார்.

சுமார் 40 ஆண்டுகள் மாடபாடி சத்யவதி தன்னுடைய இனிமையான குரலால் ரேடியோ செய்திகளை வாசித்து லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து அவர்களுடைய இதயத்தில் நிலையான இடத்தை பெற்றார். ஆகாச வாணியில் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக பெரும்புகழ் பெற்ற மாடபாடி சத்தியவதி மிகவும் சுருக்கமாக பேசக்கூடியவர்.

சொற்களைத் தேர்ந்தெடுத்து தேவையான அளவுக்கு மட்டுமே பேசுபவர். அத்தகைய மிதபாஷி பத்து நிமிட செய்தியை எங்கும் தடங்கலின்றி உணர்ச்சியோடு படிப்பார். அவருடைய குரல் மிகவும் மிருதுவானது. ஆனால் இன்னிசை போல இனிமையானது. உணர்ச்சியோடு கூடியது .

அவருடைய குரல் ரேடியோவுக்காகவே தயாரானது என்று பலரும் நினைப்பதுண்டு. பிறர் மொழிபெயர்த்ததை தான் படிப்பதற்கு அவர் விரும்புவதில்லை என்றும் தானே மொழிபெயர்த்து தானே படிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் நியூஸ் எடிட்டர் மற்றும் செய்தி வாசிப்பாளராக ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்தார். அதோடுகூட வாரத்திற்கு இருமுறை “வார்த்தா வாஹினி” என்ற நிகழ்ச்சியையும் தயாரித்து அளித்துவந்தார்.

மாடபாடி சத்தியவதிக்கு 2017 ல் தெலங்காணா மாநில அரசு விசிஷ்ட மகிளா புரஸ்காரம் விருதினை அளித்தது.

நகரத்தின் முதல் மேயர் மாடபாடி ஹனுமந்த ராவின் பேத்தி மாடபாடி சத்தியவதி.

ஆல் இந்தியா ரேடியோவில் மிக நீண்டகாலம் பணிபுரிந்த சத்தியவதி, நிஜாம் காலத்தில் ரஜாகர்களின் கொடூரங்களை நேரில் கண்டவர்.

தெலுங்கு மொழி கற்பதற்குத் தடை இருந்த காலத்தில் அனுமந்தராவு தடையையும் மீறி நடத்திய தெலுங்கு பெண்கள் உன்னத பாடசாலையில் இவர் தெலுங்கு மொழியை கற்றுத் தேர்ந்தார்.

பிராமண குடும்பத்தில் ஹைதராபாத்தில் பிறந்த சத்தியவதியுடைய சொந்த ஊர் கம்மம் மாவட்டத்திலுள்ள ஏற்புபாலம்.

நிஜாம் ஆட்சி காலத்தின் இறுதியில் தெலங்காணாவில் ரஜாக்கர்களின் அட்டூழியத்தால் எல்லா ஊர்களிலும் ரத்த ஆறு பாய்ந்தது. ரஜாகர்களின் கொடூரங்களால் கிராமங்கள் அனைத்தும் அலைக்கழிக்கப்பட்டன. பெண்களும் தாய்மார்களும் வயதான பெண்மணிகளும் அனைவருமே மானத்திற்கும் உயிருக்கும் பயந்து சொந்த வீடுகளை விட்டு எங்கெங்கோ ஓடினார்கள்.

பிற ஊர்களுக்கும் பிற கிராமங்களுக்கும் மறைந்து மறைந்து ஓடினார்கள். உயிரோடும் மானத்தோடும் இருந்தால் போதும் என்று ஊரைவிட்டு கிடைத்த இடத்தில் அண்டிப் பிழைத்தார்கள்.

அதேபோல சத்யவதிக்கும் 15 வயது இருக்கும்போது ஒரு நாள் காலையில் யாரோ வந்து வீட்டின் கதவைத் தட்டி ரஜாக்கர்கள் இங்கு இந்த வீதிக்கு வந்து விட்டார்கள்… சுற்றி உள்ளார்கள் என்ற கொடூரமான செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்டு அவர் உடல் நடுங்கியது. ரஜாகர்கள் செய்யும் கொடூரங்களுக்கு அளவே இல்லை. அவர்களை எதிர்த்து நின்ற இரண்டு இளைஞர்களை அடித்துக் கொன்றார்கள். அந்தக் காட்சிகள் சத்யவதியின் கண்களில் இருந்து மறையும் முன்பே மீண்டும் ஊருக்குள் புகுந்து தன் வீட்டருகில் வந்து விட்டார்கள் என்ற செய்தி அவரை உலுக்கியது.

வீட்டில் அம்மா, பாட்டி, சத்தியவதி மூவரே இருந்தார்கள். நிஜாம் அரசாங்கத்துக்கு எதிராக போராடியதால் அவருடைய தந்தையார் தலைமறைவாக இருக்கும்படி ஆயிற்று.

ரஜாகர்கள் அவர்கள் வீட்டுக்கு அருகில் வந்து விட்டார்கள் என்ற செய்தியை அறிந்த ஒரு காங்கிரஸ் தலைவர் துப்பாக்கியோடு அவர்கள் வீட்டுக்கு வந்து அவரையும் அவர் தாயாரையும் கொல்லைப்புறம் வழியாக ஊரை விட்டு அனுப்பி வைத்தார். பாட்டி மட்டும் அங்கிருந்து நகரவில்லை . மாட்டு வண்டியில் ஊரைவிட்டுத் தாண்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்து ரயிலில் ஏறி விஜயவாடாவுக்கு சென்றார்கள்.

சத்தியவதியும் அவர் தாயாரும் விஜயவாடாவில் தெரிந்தவர்கள் வீட்டை அடைந்து அங்கிருக்க முற்பட்டார்கள். ஊரிலிருந்த பாட்டிக்கு அவருடைய தகப்பனார் ஒரு செய்தி அனுப்பினார். நீயும் விஜயவாடாவுக்கு போகாவிட்டால் நிஜாம் அரசாங்கத்திற்கு நான் அடிபணிந்து விடுவேன் என்று எச்சரித்து செய்தி அனுப்பினார்.

தன்னால் தன் மகனுடைய கொள்கைக்கு தீங்கு நேரக்கூடாது என்று எண்ணி பாட்டியும் எப்படியோ விஜயவாடாவுக்கு வந்து சேர்ந்தார்.

11 மாதங்கள் மூவரும் பல கஷ்டங்களுக்கு இடையில் அங்கு வசித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல ரஜாக்கர்களின் தாக்குதலுக்கு பயந்து எங்கெங்கோ அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கானவர்கள் பல இடங்களில் வசித்தார்கள். அவர்களில் கர்ப்பவதிகள் இருந்தார்கள். குழந்தை பெற்ற இளம் தாய்மார்கள் இருந்தார்கள்.

பலவித உடல் உபாதைகள் உடல் நோய்களோடு போராடியவர்கள் இருந்தார்கள். இவ்வாறு சென்றவர்களை பிற ஊர்களில் பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள் தம்மிடம் வந்து விட்டார்களே என்று ஒரு மாதிரியாகத்தான் நடத்தினார்களே தவிர ஆதரவோடு இவர்களை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.

ரஜாகர்களின் கொடூரங்களுக்கு தடை ஏற்பட்டு இந்தியாவில் ஹைதராபாத் இணைந்த பிறகு மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்து பார்த்தால் எப்படி இருந்தது? தாத்தா கட்டிய அழகான வீடு மேல் கூரை இடிந்து பாழடைந்து கிடந்தது. மொட்டையான சுவர்களும் காய்ந்து வாடிப்போன மரங்களும் வீட்டு வாசலும் கொல்லையும் எங்கு பார்த்தாலும் இறந்துகிடந்த மிருகங்களின் சடலமுமாகக் கிடந்தன.

பல வீடுகளில் இதே நிலைமை . வீடுகளை சீர்திருத்தி பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு பல ஆண்டுகள் பிடித்தன. இங்கிருந்த நிலைமையை பார்த்துவிட்டு பலர் திரும்பி வராமல் தாம் சென்ற இடங்களில் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு நிலைத்து விட்டார்கள்.

நிஜாமின் சர்வாதிகார அரசாங்கத்தில் தெலுங்கு கற்றுக்கொள்வது ஒரு குற்றம் . நான்கு பேர் தெலுங்கு மொழிக்காரர்கள் சந்திக்கும் போது கூட உருதுவில் தான் அவர்கள் பேசவேண்டும்.

யாராவது தெலுங்கில் பேசினால் தெலுங்கு காரர்களே கூட அவர்களைப் பார்த்து நையாண்டி செய்து “ஓ தெலுங்கீ” என்று ஏளனம் செய்தார்கள்.

அப்படிப் பட்ட நாட்களில் சத்தியவதியின் தாத்தா மாடபாடி ஹனுமந்த ராவ் ஒரு தெலுங்கு பாடசாலையை ஏற்படுத்தினார். அதற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று நிஜாம் அரசு எச்சரித்தாலும் பாடசாலையைத் திறந்தார் .

அவருடைய பள்ளியில் முதல் மாணவி அவருடைய மனைவி மாணிக்கம்மா. இரண்டாவது மாணவி பூர்குல ராமகிருஷ்ணா ராவின் மனைவி அனந்தலக்ஷ்மி.

நாராயண குடாவில் தெலுங்கில் உன்னத பாடசாலை என்ற பெயரில் அவர் ஸ்தாபித்த பள்ளியில் மாணவிகளுக்கு பத்தாவது வகுப்பு பரிட்சை எழுதும் வாய்ப்பினை நிஜாம் அரசாங்கம் ஏற்படுத்தி தரவில்லை . அதனால் ஆந்திரா யூனிவர்சிட்டி மூலம் இங்கு பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவிகளை விஜயவாடாவுக்கு அனுப்பி தேர்வு எழுத செய்தார்கள். அவ்வாறு தேர்வு எழுதிய இறுதி பேட்சைச் சேர்ந்தவர் சத்தியவதி.

மாடபாடி சத்தியவதி ஆல் இந்தியா ரேடியோவில் நியூஸ் ரீடராகவும் பல்லாண்டு காலம் எடிட்டராகவும் பணிபுரிந்ததோடு வார்த்தா வாஹினி என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியையும் தயாரித்தளித்தார்.

தெலங்காணா மாநில அரசிடமிருந்து விசிஷ்ட மகிளா விருதினைப் பெற்றார். 2017 மார்ச் எட்டாம் தேதி பெண்கள் தினத்தில் அவருக்கு அரசாங்கம் விருது அளித்து கௌரவித்தது. அவர் ஹைதராபாத் பத்மாராவ் நகரில் வசித்து வந்தார்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version