- Ads -
Home இலக்கியம் கண்கள் எனும் கவிதைத் தூரிகை

கண்கள் எனும் கவிதைத் தூரிகை

artistMaruthi கண்கள் – உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை! கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்! ஆணோ, பெண்ணோ… ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்! எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்…! சரி விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாத இதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு. சிறு வயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுபூர்வமாகப் படித்ததாலோ என்னவோ… கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ… அழகு முகமோ… எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். ஓவியத்தில் நிஜத்தைப் போல் பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு… அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது… என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!? ஓவியர் இளையராஜாவின் ஓவியத்தைக் காணும்போதெல்லாம் இந்த ஆச்சரியம் என்னில் தலைக்கட்டும். இயற்கையாக எடுத்த புகைப்படத்தை வண்ணத் தூரிகையால் உயிர்கொடுத்ததுபோல் அவ்வளவு பொலிவு! ஓவியர் இளையராஜாவிடம் மனம் திறந்த பாராட்டைச் சொல்லி, அவரின் கைவண்ணத்துக்கான ரகசியத்தையும் வினவியிருக்கிறேன். இப்படி… ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுபவர் – ஓவியர் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும். நாலைந்து வருடங்களுக்கு முன்னர் (விகடனுக்காக) மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்… ஏன் ஸ்ரீராம்… இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே? நான் சொன்னேன்… நீங்க படம் வரைவீங்களே… ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்… ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..! என் உளக் கிடக்கையும் அவருக்கான பாராட்டும் ஒருசேர வெளிப்படும்.. அவர் முறுவலிப்பார். ம்… நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன். இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! இது தினமணி தீபாவளி மலருக்காக சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம். இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் – அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே! கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது! கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது, சொல்லவந்ததை மறைத்து உள்ளத்தைப் பூட்டிவைத்து உதட்டால் வெளிப்படுத்துகிறோம். இப்படி… வேறு எங்கோ வெறித்துக் கொண்டு பேசுபவரின் பேச்சை பெரும்பாலும் நான் உள்வாங்கிக் கொள்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version