― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇதோ... ஒரு காதல் காவியம்!

இதோ… ஒரு காதல் காவியம்!

- Advertisement -

நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்.

நாங்க எங்க புள்ளைங்களுக்கு பாலும் பழமும் கொடுத்து கண்ணுக்குள்ள வெச்சுப் பாத்துக்கறோம்… நீங்க என்னடானா ஒன்றரையணா கூலிங் கிளாஸும் துவைக்காத ஜீன்ஸும் போட்டுக்கிட்டு நாடகக் காதலாடா பண்றீங்க என்று கொதிக்கிறார்கள்.

எங்க கிட்ட சரக்கு இருக்கு…மிடுக்கு இருக்கு… உங்க பொண்ணுங்கள உங்களால திருப்திப்படுத்த முடியலை. தான் எங்க கிட்ட வர்றாங்க என்று சக்கிலியர் தலைவர் ஒருவர் பேசுகிறார். இதைக் கேட்டதும் ரவிக்குமார் தலைமையில் ஒரு கும்பல் கிளம்பி இளவரசனைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.

இளவரசன் அவர்களிடமிருந்து தப்பித்து பாளையங் கோட்டைக்குப் போய்விடுகிறான். பறையர் குலப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கிறார்கள். திருமணத்துக்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண் தன் தோழியின் உதவியுடன் ஆம்பூருக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள்.

சில வாரங்கள் கழிகின்றன. காதலன் போன் செய்து காதலியை பாளையங்கோட்டைக்கு வரச் சொல்கிறான். என்ன விஷயம் என்று கேட்கிறாள். உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. சீக்கிரம் வா என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறான்.

பாளையங்கோட்டைக்கு வந்த காதலியைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த காதலனுக்கு வேறொரு அதிர்ச்சி ஏற்படுகிறது. காரில் இருந்து அமீர் இறங்குகிறார். பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர்.

இந்து மதம் உலகத்திலேயே மோசமானது. இஸ்லாம்தான் அதி உன்னதமான மதம். அமைதி மார்க்கம் அது. யாரையும் ஜாதிபார்த்து ஒதுக்காது. திவ்யாவும் இளவரசனும் இருவரும் இஸ்லாமுக்கு மதம் மாறித் திருமணம் செய்துகொண்டால் யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லி அவளை இஸ்லாமுக்கு மாற்றியிருக்கிறார்.

திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள். நம்மை அங்கு யாரும் பிரிக்க முடியாது’ என்று சொல்கிறாள். இளவரசனோ தடுமாறுகிறான். என்ன விஷயமென்றால் பாளையங்கோட்டையில் இருந்த அவனது நண்பர்கள் ஜெகத் கஸ்பருக்கு உறவினர்கள். அவர் இதே யோசனையைச் சொல்லி அவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார்.

உலகிலேயே உன்னதமான மதம் கிறிஸ்தவம் தான். அன்பே உருவான மார்க்கம். சனாதன பிராமண இந்து மதம் மிக மிக மோசமானது. மலச்சிக்கல் முதல் திருமணச் சிக்கல் வரை அனைத்துக்குமான ஒரே தீர்வு கிறீஸ்தவத்துக்கு மாறுவதுதான் என்று சொல்லி இளவரசனை சார்லஸாக ஆக்கியிருப்பார்.
பறையருக்கும் சக்கிலியருக்கும் இடையிலான சண்டை கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலானதாக மாறுகிறது.

ஜெகத் கஸ்பர் மென்மையாக அமீரைப் பார்த்துச் சொல்கிறார்: கணவன் எந்த மதத்துல இருக்காரோ அந்த மதத்துக்குத்தான் மனைவியும் வரணும். அதனால திவ்யாவை தெரேசான்னு பெயர் மாத்தி நாங்க ரட்சிக்கறோம். சார்லஸ்-தெரேசா என்ற இந்த தம்பதியை ஆசீர்வதியுங்கள் அமீர் பாய். கல்யாணத்துக்கு மட்டன் பிரியாணி காண்ட்ரக்ட் கூட நீங்களே எடுத்துக்கோங்க. ஆனா விட்ல வளர்க்கற ஆடு மட்டும் வேண்டாம் என்று தோளில் கை போட்டபடியே சொல்கிறார்.

அது தோளில் வேடிக்கையாக, அன்பாகப் போடப்பட்ட கை அல்ல; கழுத்தை நெரிக்கும் கை என்பது அமீருக்குப் புரியவருகிறது. சட்டென்று அந்தக் கையைத் தட்டிவிடுகிறார்.

அதெல்லாம் வேண்டாம்; திவ்யா இஸ்லாமுக்கு மாறியாச்சு. அதனால குலாம் முஹம்மதுவை எங்க கிட்ட ஒப்படைங்க என்கிறார்.

இந்து மதத்துலதான் மேல் ஜாதி கீழ் ஜாதின்னு மட்டுமில்லாம மேல் ஜாதிகளுக்குள்ளேயும் கீழ் ஜாதிகளுக்குள்ளேயும்கூட பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறதில்லை. நாமெல்லாம் தமிழர்கள்தான. தமிழ் கிறிஸ்தவரும் தமிழ் முஸ்லீமும் கண்ணாலம் கட்டிக்கிட்டா என்ன என்று இளவரசன் ஜெகத் கஸ்பரிடம் கேட்கிறான்.

தம்பி ஓரமாப் போய் நில்லு என்று அவனை தள்ளிவிடுகிறார்.

இஸ்லாத்துல எந்த ஒடுக்குமுறையும் கிடையாதுன்னு சொன்னீங்களே. கிறிஸ்தவரானாலும் அவரை ஏத்துக்கலாமே என்று அமீரிடம் திவ்யா என்ற ஃபாத்திமா கேட்கிறாள். அவர் திவ்யாவின் காதருகில் குனிந்து, ’மூடிட்டுப் போடி’ என்று சிரித்தபடியே சொல்கிறார்.

அமீர் தரப்புக்கும் ஜெகத் கஸ்பர் தரப்புக்கும் இடையில் பேச்சு வார்த்தையில் மெள்ள குரல் உயர்கிறது. தடித்த பிரயோகங்கள் வருகின்றன. ஃப்ளோல கெட்ட வார்த்தைகளும் வருகின்றன. அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும் அங்கிகளைக் கழட்டிப் போட்டு தெருவில் புரள ஆரம்பிக்கின்றன. பேச்சு பேச்சா இருக்கணும் என்று எத்தனையோ தடவை சொன்ன பிறகும் யாரும் கேட்காமல் துப்பாக்கிகள், வெடி குண்டுகள் என வீசப்படுகின்றன.

இளவரசனும் திவ்யாவும் இவர்களிடமிருந்தும் தப்பித்து ஓடுகிறார்கள்.

ஜெகத் கஸ்பரும் அமீரும் அவர்கள் ஓடுவதைப் பார்த்ததும், உங்களுக்காக நாங்க களமாடிக் கொண்டிருக்கிறோம். நீங்க தப்பிச்சு ஓடறீங்களா என்று அவர்களைத் துரத்துகிறார்கள். இங்குமங்கும் ஓடியவர்கள் ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கஸ்பரும் அமீரும் வாருங்கள்… எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று துப்பாக்கியால் குறிவைத்து அழைக்கிறார்கள். அமீர் பக்கம் போனால் ஜெகத் கஸ்பர் கையில் இருக்கும் இதாலியன் மேக் துப்பாக்கி வெடிக்கும். ஜெகத் கஸ்பர் பக்கம் போனால் அமீர் கையில் இருக்கும் ஐ.எஸ். துப்பாக்கி வெடிக்கும். இரண்டு துப்பாக்கிகளின் கூட்டல் புள்ளியின் மையத்தில் சிக்கிய இளவரசனும் திவ்யாவும் ஒடுங்கியபடியே ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொள்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு இருவரும் ஒன்றாக உயிரை விடத் தயாராகும்போது ஒரு வேல் கம்பு அவர்கள் முன்னால் சர்ர்ரென்று பாய்ந்து வந்து நிலத்தில் குத்தி நிற்கிறது.

அதைப் பார்த்ததும் கஸ்பரும் அமீரும் ஒரு அடி பின்னால் செல்வார்கள். வேறொரு ஈட்டி சர்ரென்று பின்னால் வந்து பாயும். இடது பக்கம் நகர முயற்சி செய்வார்கள். அங்கும் ஒரு வேல் கம்பு வந்து விழும். வலது பக்கம் நகரப் பார்ப்பார்கள் அங்கும் இன்னொரு வேல் கம்பு வந்து விழும்.

இளவரசன் அவன் முன்னால் விழுந்த வேல் கம்பை எடுத்து தரையில் ஊன்றி நிற்பான். கஸ்பரும் அமீரும் வேல்களால் சிறைப்படுத்தப்பட்டு பயந்துபோய் நிற்பார்கள். தூரத்தில் புலிக் கொடி பறக்க சீமான் காளையில் புழுதி பறக்க ஸ்லோமோஷனில் பாய்ந்து வருவார்.

இளவரசனையும் திவ்யாவையும் பார்த்து என் பக்கம் வாங்க என்று அழைப்பார். அந்தக் குரலில் அன்பும் ஆறுதலும் பொங்கிப் பிரவகிக்கும். தன்னுடன் கொண்டு வந்த இன்னொரு காளை மீது அவர்களை ஏறிக் கொள்ளச் சொல்வார்.

நாம் தமிழர்கள்… நம்மை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இந்துத்துவம் எக்காலத்திலும் இங்கு காலூன்ற முடியாது. தாமரை இங்கு மலரவே மலராது என்று முஷ்டியை மூடிக் கொண்டு கையை வீராவேசத்துடன் உயர்த்துவார்.

திவ்யாவும் இளவரசனும் இங்கே இந்துத்துவம் எங்கே வந்தது என்று முழித்தபடியே அவரைப் பார்ப்பார்கள்.

வேல் சிறைக்குள் மாட்டிக்கொண்ட கஸ்பரும் அமீரும், அழைச்சிட்டுப் போங்க… அழைச்சிட்டுப் போங்க என்று செபாஸ்டியனைப் பார்த்து பவ்யமாகக் கை காட்டுவார்கள்.

தூரத்தில் தெரியுது பார் ஒரு மலைக்கோவில். அங்கு போவோம். உங்கள் திருமணம் அங்கு நடக்கும் என்று சொல்லியபடியே வழிகாட்டிச் செல்வார் சீமான்.

இளவரசனும் திவ்யாவும் தாலி, மஞ்சள் குங்குமம், விபூதி, பட்டு வேஷ்டி, புடவை, நாகஸ்வரம், மேளம், மங்கலப் பறை, காப்புக் கயிறு, மாவிலை என திருமணத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் சேகரித்துக்கொள்வார்கள்.

சீமானுடைய காளை பல திருப்பங்கள் வழியாகச் சென்று இறுதியில் மலையடிவாரப் பாதையை வந்தடையும். மலை உச்சி நோக்கிய அந்தப் பாதை செல்பவர் யாரும் திரும்ப முடியாதபடி மிகவும் குறுகலாக ஒற்றையடிப் பாதையாக இருக்கும். வளைந்து வளைந்து செல்லும் அந்தப் பாதையின் இறுதியில் ஒரு மலைக் கோவில் இருக்கும். அதை நெருங்கிய பின்னரே அது கோவில் அல்ல; ஒரு சர்ச் என்பது தெரியவரும். சீமான் கையில் இருந்த வேல் கம்பும் இப்போது சிலுவையாக மாறியிருக்கும். பின்னால் திரும்பவும் முடியாது. இரு பக்கம் அதல பாதாளம் வேறு.

காளையில் இருந்து இறங்கி, தயங்கியபடியே நிற்கும் இளவரசனையும் திவ்யாவையும் வாங்க என்று அழைப்பார். இப்போது அந்தக் குரல் அதிகார தொனியில் இருக்கும்.

இளவரசனும் திவ்யாவும் தலை குனிந்தபடியே சர்ச் நோக்கி நடப்பார்கள். பிரமாண்ட காண்டாமணி ஓங்கி ஒலிக்கும். அந்தச் சத்தம் கேட்டதும் மரங்களில் இருந்த பறவைகள் எல்லாம் அலறி அடித்து திசை தெரியாமல் பதறிப் பறக்கும்.

சீமான் அவர்களை அங்கிருக்கும் சிறிய சுனைக்கு அழைத்துச் செல்வார். பாதிரியார் ஒருவர் இவர்கள் இருவரையும் மூழ்கி எழுந்திருக்கச் சொல்வார். பயந்தபடியே இருவரும் ஸ்நானம் செய்வார்கள்.

நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் இந்துக்கள் அல்ல என்று மூன்று முறை சொல்லிச் சொல்லி மூழ்கி எந்திரிக்கச் சொல்வார்.

பிதா, சுதன், பாதிரி இந்த மூன்று பேரே இனி எங்களுக்கு எல்லாமும் என்று சொல்லுங்கள் என்று அதட்டுகிறார்.

குல தெய்வங்களை இனி கும்பிடமாட்டேன் என்று சொல்லுங்கள் என்று மிரட்டுவார்.
இளவரசனும் திவ்யாவும் பயந்தபடியே அனைத்தையும் செய்வார்கள்.

இளவரசன் பட்டு வேஷ்டி கட்டிக்கொள்ளச் செல்வார். திவ்யா புடவை கட்டிக்கொள்ளச் செல்வார். அவற்றைப் பறித்து மூலையில் எறிவார் பாதிரியார். திருமணத் தம்பதிகள் நெற்றியில் அணிந்திருக்கும் திலகங்களை அழிப்பார் ஜெகத் கஸ்பர். நாகஸ்வரத்தை உடைத்து வீசி எறிவார் செபாஸ்டியன்.
கோட் சூட், ஃப்ராக் மாட்டி தம்பதிகளை சர்ச்சுக்குள் அழைத்துச் சென்று ஒரு மோதிரத்தைக் கொடுப்பார் பாதிரியார்.

திவ்யா கண்களில் நீர் கோர்க்க, அருகில் நிற்கும் செபாஸ்டினைப் பார்த்துக் கேட்பார்: நாம தமிழர்னு தான சொன்னீங்க. மோதிரம் மாத்தறது நம்ம பழக்கம் இல்லையே.

இப்ப புதுசா சேர்த்திருக்காங்கம்மா என்று சொல்லியபடியே தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்ப்பார்.பாதிரியாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்.

சர்ச்சில் இருப்பவர்களில் ஒருவர் மங்கல காரியம் நடக்கும் போது மங்கல இசை ஒலிக்கவேண்டும் என்று பறையை எடுத்து இசைப்பார். பறைச் சத்தம் கேட்டதும் சர்ச் ஜன்னல்களின் கண்ணாடிகள் அதிரும். பாதிரியார் ஆவேசத்துடன் அதைப் பறித்து வெளியே வீசி எறிவார். அதை எடுக்க வெளியே பாயும் திவ்யாவை செபாஸ்டியன் மறிப்பார். தம்பதிகளை வழி மறித்தபடி மண்டியிட்டு உட்காரவைப்பார்கள்.

அப்போது சர்ச் சுவரில் விழும் அவர்களுடைய உருவங்களின் தலைக்கு மேலே இரண்டு கொம்புகள் முளைக்கும்.

இளவரசனும் திவ்யாவும் என்ன அதிசயம் என்று அதைப் பார்ப்பார்கள். செபாஸ்டியனும் பாதிரியும் கூட அதை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்.

என்ன விஷயமென்றால் வீசி எறியபட்ட பறை காளைகளின்மேல் சென்று விழுந்திருக்கும். சர்ச் வாசலில் இரண்டு காளைகளும் ஆக்ரோஷமாக வந்து நின்றுகொண்டிருக்கும்.

செபாஸ்டியன் அதைப் பார்த்து சிரித்தபடியே, கல்யாண விருந்துக்கு காளை ரெடி என்று சொல்லியபடியே சத்தம் போட்டுச் சிரிப்பார். அதைக் கேட்டதும் காளைகளுக்கு மேலும் ஆத்திரம் ஏற்படும். நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வந்து பாதிரியையும் செபாஸ்டினையும் ஒரே குத்தாகக் குத்தி தூக்கி எறியும்.

இருவருடைய உடம்பும் சுவரில் மோதி ரத்தக் கோடு வரைந்தபடி கீழே விழும். சுவரில் தெரியும் சிலுவையின் நிழலின் மேல் இவர்கள் இருவருடைய ரத்தம் வழிந்த கோடு இரு பக்கமும் வழிவது திரிசூலம் போல் காட்சியளிக்கும்.

காளை ஆத்திரம் தணிந்து காதல் ஜோடியின் முன் பவ்யமாக வந்து நிற்கும். இளவரசன் காளையின் கூர்மையான கொம்பில் தன் கட்டைவிரலைக் கீறி வழியும் ரத்தத்தை திவ்யாவின் நெற்றியில் இட்டுவிடுவான். இருவரும் காளைகளின் மேல் ஏறிக் கொண்டு மங்கல வாத்தியங்கள் முழங்க தாய் நிலம் திரும்புவார்கள்.

  • பி.ஆர்.மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version