Home இலக்கியம் கட்டுரைகள் பாரதி-100: பாரதியாரின் பரசிவ வெள்ளம் (3)

பாரதி-100: பாரதியாரின் பரசிவ வெள்ளம் (3)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் “பரசிவ வெள்ளம்” – 3
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நேற்றைய பகுதியின் தொடர்ச்சி. . . .

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே. (11)

விளக்கம் – இந்த பரசிவத்தை, இந்த இறைவனைக் கண்டவர்கள் மனதில் குற்றமற்றவர்கள்; வாழ்வில் துன்பம் இல்லாதவர்கள். இந்த சிவத்தைப் பற்றிக்கொண்டவர்கள் இந்த உலகில் அடையவேண்டிய பயன் அனைத்தையும் அடைவர்.

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே. (12)

விளக்கம் – இந்த ‘பர சிவம்’ என்கின்ற பொருளைக் கண்டவர், அதாவது இறைவன் யார் எனக் கண்டவர், நமக்கு வரும் இடர்கள் இவ்வளவுதான் என்ற எல்லையைக் கண்டு கொண்டவர்கள். தமக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் பெற்று அவர்கள் இவ்வுலகில் பெருவாழ்வு வாழ்வர்.

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. (13)

விளக்கம் – அத்தகையோர்கள் (இறைவனை உணர்ந்தவர்கள்) வேண்டியது, வேண்டாதது அனைத்தையும் பெறுவர். இவ்வுலகில் வாழும் மற்றையோர் அவரை ஈசர் எனப் புகழ்வர்.

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. (14)

விளக்கம் – இப்பொருளுடன் (அதாவது இறைவனுடன்) எந்நாளும் காந்தம் போல இணைந்தவர் எல்லவற்றையும் துறந்து, இந்த உலகத்தையே ஆளுவர். (பாரதி இத்தகைய ‘முரண்’ தொடர்களாலே பல செய்திகளை எளிமையாக புரியவைப்பார். எடுத்துக்காட்டாக –

“பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை! கேளீர்,கேளீர்

என பாரதி அறுபத்தியாறில் பாடுவார். ‘சாகாதிருப்பேன்’ என முதல் வரியில் சொல்லிவிட்டு, மூன்றாவது வரியில் ‘மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே என்று சொல்வதன் மூலம் தனது கருத்தை ஆணித்தரமாகச் சொல்லுவார்.

subramanya bharathi

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா! (15)

விளக்கம் – மேலே சொன்னதெல்லாம் உண்மையடா தம்பி. நீ விரும்பியபோது, உன் உள்ளத்திலே அமுத ஊற்றைப் பொழிவது இந்த இறைவனாகும்.

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா! (16)

விளக்கம் – எப்போதும் இந்த இன்ப வெள்ளம், அதாவது பெருகிய இன்ப நிலை உனக்குள் இருப்பதற்கு ஒரு எளிய உபாயம் இருக்கிறது.

எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா! (17)

விளக்கம் – இறைவனை நினைத்தாலே போதும் அதுவே இந்த இனிய சிலீரென்ற அமுதினை உள்ளத்தில் ஊறித் ததும்பச்செய்யும்.

எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா (18)

விளக்கம் – எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்ற ஈசன், இறைவன், என்னுள்ளேயும் பொங்கி வழிகின்றான் என எண்ணி அவனைப் போற்றி வாழ்ந்தால் போதும், வாழ்வு சிறக்கும்.

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! (19)

விளக்கம் – நம்முள்ளே நிரம்பிய, எங்கும் இருக்கின்ற இறைவனை ஓதி நிற்பதே, அவனை நினைப்பதே போதும்.

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே. (20)

விளக்கம் – இறைவனை அடைய காவியணிய வேண்டாம்; சடாமுடி தரிக்க வேண்டாம்; அவனை நினைத்தல் மட்டுமே போதுமானது. இங்கே நமக்கு திருவள்ளுவரின்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

என்ற திருக்குறள் நினைவுக்கு வரும்.

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! (21)

விளக்கம் – அவனை அடைவதற்கு சாத்திரங்கள் ஏதும் இல்லை, நான்கு வேதங்கள் எனப்படும் சதுர்மறைகள் ஏதும் இல்லை. துதிப்பாடல்கள் ஏதும் வேண்டாம். உள்ளத்தாலே அந்த இறைவனைத் தொட்டு நின்றால் போதும்.

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா! (22)

விளக்கம் – அவனை அடைவதற்கென கடுமையான தவம் எதுவும் செய்ய வேண்டாம். சாதனைகள் எதுவும் புரிய வேண்டாம். எல்லாச் சீவனிலும் சிவன் உள்ளது எனப் புரிந்துகொண்டால் போதும்

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா! (23)

விளக்கம் – உலகெங்கிலும், எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்ற சிவன்; அந்த உயிர்களாகவே இருக்கின்ற சிவன் எனக்குள்ளேயும் இருக்கின்றான் என வாயாலே சொல்லி அவனைப் போற்றினால் போதும்.

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா! (24)

விளக்கம் – நித்தியமாய் இருக்கின்ற சிவம் என்னுள்ளே இருக்கின்றது என சித்தத்தில் நிலை நிறுத்திக்கொள்ளும் அந்த சிரத்தை ஒன்றே போதும்.

இவ்வாறு இந்தக் கவிதையில் அனைத்து மக்களையும், அனைத்து உயிர்களையும் சமமாக நடத்துதல் ‘இறைநிலை’ எனப் பாரதியார் பாடியுள்ளார்.  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version