― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஏன் வர வேண்டும்? 

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஏன் வர வேண்டும்? 

- Advertisement -

காரணங்கள் நிறைய உண்டு. ஆனால் மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், பட்ட அனுபவங்கள் அப்படி!

நெருக்கடி நிலை – எமர்ஜென்ஸி வருடத்தில் பிறந்தவன் நான். இப்போது 50வது வயதில் இருக்கிறேன். 1984ல் நான் 5ம் வகுப்பு படித்த காலத்தில் இருந்து அரசியல் நிகழ்வுகள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. இன்றும் நினைவில் கொண்டு வர முடிகிறது. 

தொடக்கப் பள்ளிக்கூடத்தில்  தினசரி காலைக் கூடுதலில்  பேப்பர்களின் தலைப்புச் செய்தி படிக்க வைத்தார்கள். அன்று  ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பற்றியும், பயங்கரவாதக் குழுக்கள் பற்றியும் செய்திகள் படித்தோம். பிரதம மந்திரி இந்திரா சுடப்பட்ட தினம் – பள்ளிக்குச் சென்று அப்போதுதான் முதல் கால வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தகவல் சொல்லி, பள்ளியில் இருந்து ஒன்றரை கி.மீ., வீட்டுக்கு நடந்தே  வந்ததும் அதன் பின் பேப்பர் படித்து நிகழ்வுகளை அறிந்து கொண்டதும் நினைவலைகள்! 

ராஜீவ் காலம், வி பி சிங் காலம்… ஃபோபர்ஸ் ஊழல் பற்றி தீவிரமாகப் பேசினார்கள்.  பின் மண்டல் கமிஷன் என ஒரே பரபரப்பு, இட ஒதுக்கீடு பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். மாணவர்  போராட்டங்கள், தீவைப்பு எல்லாம் தலைப்புச் செய்திகளாய் நிரம்பியிருந்தன. இடையில் ராமஜன்மபூமி இயக்கம். அத்வானியின் ரத யாத்திரை குறித்த செய்திகள். ஸ்ரீராம் என அச்சிடப்பட்ட பன்னிரண்டு செங்கற்கள் வீட்டுக்கு வர, ஒரு மேடை அமைத்து ராமர், சீதை, லட்சுமணர் அனுமன் கொலு பொம்மைகளை வைத்து ஒரு மண்டலம் பூஜித்து லாரியில் ஏற்றி அனுப்பி வைத்து, ஊர்வலம் சென்று அது ஓர் அனுபவம்…

தொடர்ந்து சந்திரசேகர் வந்தார். ஜனதா கட்சிகள் பலப்பல உச்சரிக்கவும் நினைவில் கொள்ளவும் தடுமாறும் வகையில்  அன்று கட்சிகள் உடைந்ததும் தொடங்கியதும் என ஒரு நிலையற்ற தன்மை! 

இடையில் எம்.ஜி.ஆர்., மறைவு, தொடர்ந்து கட்சியில் நடந்த சண்டைகள், ஜெயலலிதாவின் தலைவிரி கோலம் எல்லாம் பத்திரிகைகளின் வழியே நெஞ்சில் பதிந்தன.  

89 சட்டமன்ற தேர்தல். பத்தாம் வகுப்பு படித்தேன். ஆசிரியர்கள் திமுக., சார்பில் இருந்தார்கள். வகுப்புகளில் பேரறிஞர் பெரியார் பாடம்தான். தென்காசி கோபுரம் முன் வை.கோவால்சாமி முழங்கிக் கொண்டிருந்தார். கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க எங்களையும் அழைத்துச் சென்றார்கள். வீடுகளுக்கு பூத் சிலிப் கொடுக்கவும், நோட்டீஸ் கொடுக்கவும் நாங்கள் பயன்பட்டோம். இலங்கைத் தமிழர் விவகாரம், பத்மநாபா கொலை பின்னர் ஆட்சிக் கலைப்பு, ஜெயலலிதா எழுச்சி என ரேடியோ செய்திகள் ஒருபுறம், பேப்பரும் தூர்தர்ஷன் நியூஸும் காட்சிகளைக் கண்ணில் காட்டின.  91ல் முதல் சுதந்திர தின உரையில் கச்சத்தீவை மீட்போம் என ஜெயலலிதா முழங்கியது காதில் ஒலித்தது. “கச்சத்தீவு விஷயம் என்னது மாமா?” என்று அடுத்த வீட்டு மாமாவிடம் கேட்டேன். சொன்னார். 

1991 – நரசிம்மராவ் வந்தார். மன்மோகன் சிங் நிதி அமைச்சர். நான் தென்காசி ஐசிஐ பள்ளியில் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்தியா பொருளாதார நெருக்கடியில்  உள்ளது என்றது செய்தி. இந்தியாவில் இருந்து தங்கத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு ரெண்டு ப்ளேன்கள் இங்கிலாந்துக்குப் போகுது. நம்ம நாட்டு தங்கத்தை அவங்கள்கிட்ட அடமானம் வெச்சி நாம பணம் புரட்டணும் என்று பேசிக்கொண்டார்கள். பக்கத்து வீட்டு மாமா இண்டியன் எக்ஸ்பிரஸ் வாங்குவார். முகப்புப் படத்தைக் காட்டி ஏதோ விவாதித்தார். ரிசர்வ் பேங்க் தங்கத்தை பெருமளவு கொண்டு போய் அடகு வைக்குது, அதான் இந்தப் படம் என்று காட்டினார். ரூவாய் நோட்டு நாம அடிக்கிறதுதானே… தேவையான அளவுக்கு நாம அடிச்சிக்கலாமே என்று அப்பாவியாய்க் கேட்டபோது, தங்கத்தின் திருவிளையாடல்கள் புரிந்தது.  அப்போது தான் உலகப் பொருளாதாரம் உலக மயமாக்கல் என்பது குறித்தெல்லாம் படிக்க நேர்ந்தது. சுயபெருமிதமும், தன்மான உணர்ச்சியும் ஆழப் பதிந்திருந்த அந்த மாணவ உள்ளத்தில், இந்தச் செய்திகள் எல்லாம் ரணமாக மனதைக் குடைந்தன. நாட்டை நேசித்த ஒருவனாக  ஜீரணிக்கவே இயலாத செய்திகளாக சுற்றிச் சுற்றி வந்தன. 

இந்தியாவில் தாராள மயக் கொள்கை அமல் என்றது செய்தி. உலகத்தோடு இயைந்து இந்தியா பயணிக்கும் என்றார்கள். அயோத்தி பிரச்னை, முலாயம் சிங் அத்துமீறல்கள், பலர் மரணம், அரசியல் சூழலின் இருண்ட பக்கங்களை எல்லாம் கேட்டும் படித்தும் அறிந்து கொண்டேன். 

92ல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதம் படிக்க சேர்ந்திருந்தேன்.  பொருளாதாரம் அவ்வளவாக மண்டையில்  ஏறவில்லை. என்றாலும் ஹர்ஷத் மேத்தா, பங்குச் சந்தை, போலி முத்திரைத்தாள் ஊழல் என்றெல்லாம் காதில் செய்திகள் ரீங்காரமிட்டன. ஊழல் என்றால் எத்தகையது, எப்படி ஒரு சிலரால் நாட்டின் பொருளாதாரம் சீரழியும் என்பதைக் கேட்டு, கண்டுகொண்ட நேரம் – எனக்கு அதுதான்! பங்குச் சந்தை முதலீடு என்று சொல்லி, சிலர் அரற்றி அழுத காட்சிகளையும் காண நேர்ந்தது.

பின்னாளில்… வாஜ்பாய் தலை தூக்கியது, 13 நாள் அமைச்சரவை, அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்கொட்டாது தூர்தர்ஷனில் பார்த்தது…  அவரை நிர்கதியாக்கி தேவகவுடாவை கொண்டு வந்தது, அவர் எப்போதும் தூங்கி வழிந்து கொண்டு மானத்தை வாங்கியது, குஜ்ரால் என்று ஒருவர் வந்தது, மியூசிக்கல் சேர் மாதிரி பிரதமர் நாற்காலியை பலரும் சுற்றிச் சுற்றி வந்தது இப்படி கூத்துகளை எல்லாம் பார்த்து மனம் ரொம்பவே நொந்து போனது. அதன் பின்னர் நானும் அந்த 99 இறுதியில் இதழியல்துறைக்கு வந்துவிட்டேன். பிறகென்ன? செய்திகளுடனேயே தான் வாழ்க்கையும் பயணமும்! 

சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா நடத்திய டீ பார்ட்டி, வாஜ்பாய் அமைச்சரவையை ஒத்தை ஓட்டில் கவிழ்த்தது, கருணாநிதி அந்த இடத்தில் சரேலெனப் புகுந்தது, மத்திய அமைச்சரவையில் முரசொலி மாறனை ஆளாக்கியது, 2001ல் சென்னை டைடல் பார்க் திறப்புக்கு வாஜ்பாயும் கருணாநிதியும் ஒன்றாகக் கலந்து கொண்டு மேற்கொண்ட சூளுரைகள்….  

இவை எல்லாம் என் நினைவலைகளின் முதற்பாதியான இருபதாண்டுகள் –  அடுத்த இருபதாண்டுகள் இதோ நிகழ்வுகள் அனைத்தும் விரல் நுனியில்! அதுவும் 2004-2014 கால கட்டத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றும், 2ஜி, நிலக்கரி, சுரங்கம், சேது சமுத்திர திட்ட ஊழல், காமன்வெல்த் விளையாட்டுக்கு அரங்கம் சாலை கட்டிய ஊழல் என்றெல்லாம் எண்ணற்ற ஊழல்கள் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்தன. கட்டமைப்பு, அடிப்படைக் கட்டுமானம் பற்றி பேச வாயெடுக்கும் போதெல்லாம் நிதி நெருக்கடி, நிதி இல்லை என்ற கைவிரிப்புகள். வாஜ்பாய் தொடங்கிய தங்க நாற்கர சாலைகள் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருந்ததால், அதுபோன்ற வளர்ச்சி தொடராமல் போனது பெரும் வருத்தத்தையே தந்தது.

இந்த நாற்பதாண்டு  தேசிய, மாநில அரசியல் சூழல்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனாக – இப்போதுதான் – மோடியின் காலத்தில் – ஒரு சுய கௌரவத்தையும், இந்தியன் என்றால் ஒரு பெருமிதத்தையும், உலக நாடுகளில் நாட்டின் மரியாதை உயர்ந்து தனித்திருப்பதையும் உணர்கிறேன்! கடந்த கால அரசியல் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்த எவரும், இன்றைய மோடி அமைச்சரவையின் செயல்பாடுகளை ஒதுக்கித் தள்ள மாட்டார்கள். சிறு சிறு குறைகள் இருக்கலாம், ஆனால் மிகப் பெரும் ஓட்டைகளையும் ஊழல்களையும் கண்டு கொண்டிருந்த நமக்கு இப்போதுதான் நம்பிக்கைக் கீற்று நன்றாகத் தெரிகிறது. இன்றைய 20 அல்லது 30 வயதுக் காரர்களுக்கு பழைய வரலாறு தெரியாது என்பதால் பொய்களால் நிரப்பப்படும் திமுக., காங்கிரஸின் பசப்புப் பேச்சுகளுக்கு ஏதோ கவனம் கிடைக்கக் கூடும்! ஆனால் நம் முன் அவை எடுபடாது! காரணம் சுயபுத்தியோடு நிகழ்வுகளின் சாட்சியாய் வாழ்ந்து கொண்டிருப்பதால்! 

எனவேதான் மீண்டும் மோடி கோஷத்துக்கு நான் வலு சேர்க்கிறேன்! வரவேற்கிறேன்! 

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version