Home உள்ளூர் செய்திகள் கோவையில் அதிர்ச்சி: பிறந்த நாளில் 11ம் வகுப்பு மாணவியை நண்பனே பலாத்காரம்!

கோவையில் அதிர்ச்சி: பிறந்த நாளில் 11ம் வகுப்பு மாணவியை நண்பனே பலாத்காரம்!

கோயம்புத்தூரில் பிறந்தநாள் கொண்டாடிய 11 ஆம் வகுப்பு மாணவியை அவளது நண்பனே பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்குக் காரணமானவன் தலைமறைவாகிவிட்டான். அவனுக்கு உதவிய இளைஞர்கள் 4 பேர், போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், 11ஆம் வகுப்பு மாணவி, கடந்த 26ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவரது அழைப்பின் பேரில் அங்கே சென்ற ஆண் நண்பர்கள் 6 பேர் அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனராம். அவர்கள் அனைவரும் இரவு 9 மணி அளவில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

அப்போது, அந்த மாணவியின் நெருங்கிய நண்பன் மணிகண்டன் என்பவன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனை மற்றொருவன் தனது செல்போனில் படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

உடன் இருந்த மற்ற நான்கு பேர், பூங்காவிற்கு வேறு யாராவது வருகிறார்களா? என காவல் காத்தனராம். பின்னர் தன் வீட்டுக்குச் சென்ற மாணவி, தாம் நம்பிச் சென்ற ஆண் நண்பர்களால் தமக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

அந்த மாணவியை தேற்றிய பெற்றோர், உடனடியாக மணிகண்டன் உட்பட 6 பேர் மீது கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து, அந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, அந்த மாணவியின் நண்பர்களான ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகிய நான்கு பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அந்த மாணவி 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, மொபைல் போனில் வீடியோ எடுத்த முக்கியக் குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவனது நண்பன் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் 17 வயது பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது கொடூரமானது. அந்த அற்ப பதர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பொது இடத்தில் ஒரு பூங்காவில் இது போன்ற குற்றம் நடந்திருப்பது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதை உணர்த்துகிறது. பொது இடங்களில் குற்றச்செயல்கள் அதிகரிப்பது பேராபத்து. தமிழக காவல் துறை விரைந்து செயல்பட்டிருந்தாலும், இது போன்ற செயல்கள் நடைபெறாவண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது நலம். குற்றப்பின்னணி கொண்ட கயவர்களை, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, கடுமையான வழக்குகளை பதிவதன் மூலமே குற்ற செயல்களை தடுக்க முடியும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் இன்றைய சூழ்நிலை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

சமூக ஊடக தொழில் நுட்ப வளர்ச்சியின் எதிர்மறை விளைவுகளினால், டாஸ்மாக்கால், கலாச்சார சீர்கேட்டை பிரதிபலிக்கும் சில திரைப்படங்களினால், சில கொடிய சின்னத்திரை தொடர்களால் பல கலாச்சார சிதைவுகள் தமிழகத்தில் ஏற்பட்டு வருகின்றன. அரசு இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருப்பது கண்கூடு. காவல் துறையினரால் ஒரு எல்லையை மீறி ஒன்றும் செய்ய முடிவதில்லை.

அரசியல் குறுக்கீடுகள், அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் ஆகிய தடைக்கற்கள் முன்னேறவிடாது என்ற நிலையில், மக்கள் தங்களின் இன்றைய சூழ்நிலையை உணர்ந்து தங்கள் குழந்தைகளை வழிநடத்துவது மட்டுமே சமுதாய மாற்றத்தை உருவாக்கும்.

~ நாராயணன் திருப்பதி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version