
நாடு முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சமயத்தில், பொதுமக்கள், இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் சிலைகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப் பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியும் தீவிரமடைந்துள்ளது. இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் இந்து அமைப்பினரிடம், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறும் போது, ”மங்கள விநாயகர், தாமரை விநாயகர், பசு விநாயகர், எலி விநாயகர், ராஜ கம்பீர விநாயகர், நாக விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், ஏர் உழவன் விநாயகர், குபேர விநாயகர், வீர சிவாஜிவிநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 3 அங்குலம் முதல் 2 அடி உயரம் வரை களிமண்ணாலும், 2 அடி முதல் 12 அடி வரை உயரம் உள்ள சிலைகள் கிழங்கு மாவு, ஓடக்கல் பவுடர், காகிதப் பொடி ஆகியவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கப்படுகின்றன. சிலைகளுக்கு டிஸ்டெம்பர் பூசப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், நீர் நிலைகளுக்கும் மாசு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறும்போது,” விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தின் மேற்கூரை, சுற்றுப்புறப் பகுதி எளிதில் தீப்பிடிக்காத வகையில் பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும். அங்கு மின்சார ஒயர்களை, அதற்குரிய குழாயில் அமைத்து பாதுகாப்பாக பொருத்தியிருக்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்கள் சிலைகளின் அருகே வைத்து இருக்க வேண்டும். தீபம், கற்பூரம் ஏற்றி வைத்து இருக்கும் போது உரிய கண்காணிப்பு செலுத்த வேண்டும்” என்றார்.
காவல்துறையினர் கூறும் போது, ”சிலை வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வோர் இடத்திலும் காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பர். சிலையை வைத்த இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் 24 மணி நேரமும் உடன் இருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கோஷங்களை எழுப்பக்கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்கள் இந்து அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர். விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும்” என்றார்.
கடந்த ஆண்டு சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடப்பு ஆண்டும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்து முன்னணி, வி.ஹெச்.பி. என பல்வேறு இந்து அமைப்புகள், மக்கள் வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் என 1,586 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அதே அளவுக்குதான் நடப்பு ஆண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் எந்தெந்த இடங்களில் வைக்கப்பட்டதோ, கரைக்கப்பட்டதோ அதே இடங்களில்தான் நடப்பு ஆண்டும் கரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.