― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?கரிசல் மண் மைந்தர் எழுத்தாளர் கி.ரா.,வுக்கு இன்று அகவை 97..!

கரிசல் மண் மைந்தர் எழுத்தாளர் கி.ரா.,வுக்கு இன்று அகவை 97..!

- Advertisement -

கி.ரா. 97 வயதை எட்டியுள்ளார். முதுமையை விரட்டும் அபார நினைவாற்றல். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை அப்படியே சொல்வார். இன்றைக்கும் எவர் துணையும் இன்றி எழுத்துக்களை தானே வெள்ளைத் தாளில் பேனா கொண்டு அற்புதமாக எழுதுகிறார்.

தற்போது இந்து சிறப்பு செய்தியாளர் பி. கோலப்பன் உடன் புதுவையை நோக்கி பயணம். எப்போது சந்தித்தாலும் இரண்டு மணி நேரம் கூட விவாதிப்பார். முதுமை என்ற நிலை இல்லாமல் என்றும் இனிமையாக வளமாக எல்லோரும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவரது ஆலோசனைகள் இருக்கும்.

எப்படி ரசிகமணி டி.கே.சி. உரையாடினால் பலதரவுகள் மட்டுமல்லாமல் இலக்கிய தரவுகளும் கிடைக்குமோ, அவரை பார்த்துவிட்டு விடைபெறும்போது மகிழ்ச்சியான மனநிலையோடு பேசினால் பல சங்கதிகள் புலப்படும்‌. எப்போதும் மகிழ்ச்சியான மன நிலையோடு நிறைவாக சென்னைக்கு திரும்பலாம். இப்படி தொடர்ந்து அவரோடு நாற்பதாண்டு காலம் பேசுவதும், விவாதிப்பதும் என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தற்போது அவருக்கு 97 வயது. அவர் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இலக்கிய உலகை ஆளவேண்டும் என்று விரும்புகிறோம்.

கிராஜநாராயணனுடன் கட்டுரையாளர் கேஎஸ்ராதாகிருஷ்ணன்

ஞானபீட விருது

கிராவுக்கு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. கிராவின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. எல்லாரும் எதிர்பார்த்த ஞானபீடம் தமிழுக்கு கிடைக்கவில்லை என்று அனைவரையும் வேதனைபடுத்தி உள்ளது.

ஞானபீட விருது 1965ல் இருந்து ஜெயின் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியப்படைப்புகளில் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியில் உள்ள சிறந்த படைப்பாளிக்கு விருதினை வழங்கி வருகிறது.

வங்கமொழிக்கு 6 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாள மொழிக்கு 5 முறையும், தெலுங்கிற்கு 3 முறைக்கு மேலும் ஞானபீட விருதுகள் வழங்கபட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில்,தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு ஒரு முறைகூட வழங்காமல் ஞானபீடம் புறக்கணித்து விட்டது. தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இந்த ஆண்டும் வழங்காமல் வங்க மொழி கவிஞர் ஷங்கா கோஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் படைப்பாளிகளான அகிலன், ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை. நா.பார்த்சாரதிக்கு 1987ல் கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் அந்த வாய்ப்பும் தவறிவிட்டது. ஏனெனில் ஞானபீட விருது மறைந்தவர்களுக்கு கொடுப்பதில்லை.

விருதுகள் பெறுபவர்களால் பெருமைப்படும். தவிர விருதுகள் என்றுமே படைப்பாளிகளுக்கு பெருமை சேர்ப்பது அல்ல. தனிப்பட்ட முறையில் கி.ராவுக்கு ஞானபீட விருது வழங்காதது ஞானபீட விருதின் நோக்கத்தையும் அதன் பெருமைகளையும் பாழ்படுத்திவிட்டது. கி.ரா போன்ற இலக்கிய ஆளுமைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***

நாங்குநேரி மறைந்த வானமாமலை ஜீயரை நான் சந்திக்கும் பொழுதெல்லாம் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நலமாக இருக்கின்றாரா என்று கேட்பார். இதுதான் கி.ரா.வின் முழுப்பெயர். இந்த முழுமையான பெயரை வழக்கறிஞர் என்.டி.வானமாமலையிடம் சொல்லும் பொழுதும் அப்படியா! என்று என்னிடம் கேட்டதும் உண்டு.

இளமையில் தந்தையை இழந்து இடைசெவலில் விவசாயத்தோடு இசை ரசனையும், இலக்கிய ஆர்வமும் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பால் இசைவாணராகாமல், 40 வயதுக்கு மேல் தமிழ் கூறும் நல்லுலகம் படைக்கும் படைப்பாளி ஆனார்.

வெள்ளந்தி அப்பாவி கிராம மனுசர்களைப் பற்றி இவர் எழுதவில்லை என்றால் அவர்களுடைய பாடுகளை அறிந்து கொள்ள முடியாது. விவசாயப் போராட்டங்களின் தாக்கம் நகர்புறத்தில் ஏற்பட்டதென்றால் அதற்கு இவரது படைப்புகளும் ஒரு காரணம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து சதிவழக்கிலும் காங்கிரஸ் அரசால் பாதிக்கப்பட்டவர். ரசிகமணி டி.கே.சி அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜாவிடம் கி.ரா.வை சம்மந்தமில்லாமல் வழக்கில் சேர்த்துள்ளீர்கள் என்று கடுமையாக பேசியதன் விளைவாக விடுவிக்கப்பட்டார்.

1960ல் கோவையில் கூடிய கோவை பொதுவுடைமை இயக்கத்தை சார்ந்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இவரை நாடோடிக் கதைகளை திரட்டச் சொன்னதனால் கதைகளைக் கேட்டு கதைச் சொல்லியாகவும் மாறிவிட்டார்.
ஒரு சிறு குன்றைத் தூரத்தில் இருந்து பார்த்தால், மண்ணும் மலையும், மரம் செடி கொடிகளும் சேர்ந்த ஒரு குன்றாகத் தெரியும். அதே குன்றை நாம் அருகில் சென்று தரிசித்தால், அதில் பல மூலிகைச் செடிகளும் அபூர்வமான சில தாவர வகைகளும் பூக்களும் மரங்களும் இருப்பது தெரியும்.

அது போல தான் கி.ராவை நெருங்கி நட்புறவுடன் பழகப்பழகத் தான் அவரைப் பற்றிய நுட்பமான சில ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. முத்தமிழில் ஆர்வம் கொண்டார். ரசிகமணி டி.கே.சியின் பாதையில் வந்தார்.

சிறுகதையாளராக இருந்த கி.ரா. அவர்களின் ‘கோபல்ல கிராமம்’ என்ற நாவல் வெளி வந்ததும், கி.ரா.வின் ரசிகர்களும் வாசகர்களும் அந்நாவலைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாட ஆரம்பித்தார்கள். கி.ராவை ஒரு நாவலாசிரியர் என்று தமிழ் இலக்கிய உலகம் போற்றியது.

இந்தத் தருணத்தில் காலம் கி.ரா.வை “எழுதுங்கள், எழுதுங்கள்” என்று விரட்டியது. ஏற்கனவே ‘கி.ரா.’ அவர்கள் நண்பர்களுக்கும் இலக்கிய வாதிகளுக்கும் எழுதிய சில கடிதங்களைச் சில சிற்றிதழ்களாக பிரசுரித்தன. அக்கடிதங்களும் இலக்கியப் பிரதிகளாகத் திகழ்வதைக் கண்டு, தமிழ் வாசகர்கள் ‘கி.ரா.’ வின் கடிதங்களையும் கொண்டா, கொண்டா (கொண்டுவா) என்று கேட்டார்கள். எனவே கவிஞர் மீராவின் அகரம் பதிப்பகம் சிவகங்கை கி.ரா.வின் கடிதங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டது.

கடித இலக்கிய உலகில் ஓர் இலக்கிய புதையல் என்று அந்நூலையும் தமிழ் வாசகர்கள், நேருவின் கடிதம், அண்ணாவின் கடிதம், ரசிகமணி டி.கே.சியின் கடிதம் போன்றவற்றில் இருந்து கி.ரா.வின் கடிதங்கள் தனித்தன்மையுடன் திகழ்ந்தன. அக்கடிதங்களில் உள்ள கேலியும் கிண்டலும் கலந்த மொழிநடை வாசகர்களை அசத்தியது.

யாரும் செய்ய முடியாத சாதனையை இந்தியாவிலேயே முதன்முதலாக வட்டார வழக்கு சொல்லகராதியை 1982ல் இவரே தொகுத்து அன்னம் கவிஞர் மீரா வெளியிட்டார். இதற்கு இவருக்கு உதவியாக இருந்து சொற்களை சேகரித்து உதவ பெரும் குழுவே இருந்தது. அந்த குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எஸ்.எஸ்.போத்தையா, பூ. மாணிக்கவாசகம், எஸ். மாரீஸ்வரன், ஆர். முருகன், கே.உதயசங்கர், போ. குமாரசாமி நாயக்கர், பி.பெருமாள், அ.மாணிக்கம், அ.முத்தானந்நதம், பி.ஐயரப்பன், அ.கிருஷ்ணபிள்ளை, அ.இராமசாமி, வில்லாயுத ஆசாரி, பி. இராமசாமிப் பாண்டியன், மாடசாமி ஆகியோர் கி.ரா.வுக்கு வட்டார வழக்கு சொல்லகராதியை தயாரிக்க 40 ஆண்டுகளுக்கு முன்னே இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே இந்த அளவு பெரும் பணியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றியதை மறக்க முடியாது.

இதுவரை 200க்கும் மேற்பட்ட அகராதிகள் வெளிவந்துள்ளது. வீரமாமுனிவர், பரபிரிசிரியசு, ராட்லர், வின்சுலோ யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர், யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, ச.சி.கந்தையா பிள்ளை, பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் போன்றோரது அகராதிகளும் அடங்கும். விரிவான முதல் அகராதியை உருவாக்கியவர் யாழ்பாணத்துச் சந்திரசேகர பண்டிதர். இது 58,500 சொற்களைக் கொண்டது. ஆனால் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாய் அமைந்தது சதுரகராதியே. பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி ஆகிய நான்கும் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதனை இயற்றிய வீரமாமுனிவரே “வட்டார வழக்குத் தமிழ் அகராதி” ஒன்றை சதுரகராதியோடு தனியே வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கி.ராவின் வட்டார வழக்குச் சொல்லகராதியோடு வெளியிட்ட ஆண்டே கரிசல் வட்டார எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தொகுப்பில் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் மேற்கே திருவில்லிபுத்தூர் வடக்கே விருதுநகர் நகரம், கிழக்கே அருப்புக்கோட்டை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் நகரத்தில் இருந்து குருவிகுளம் ஒன்றியம், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு, தெற்கே தூத்துக்குடி நகரம் வரை கரிசல் வட்டாரத்தின் நிலப்பகுதியாக அமைந்த படைப்பாளிகளின் ஊர்களில் குறிப்பிட்டு நில வரைபடமும் வெளியிட்டது கி.ரா.வின் ஒரு அற்புதமான பணி.

அந்த காலக்கட்டத்தில் மயிலாப்பூர் 39, சாலைத் தெருவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்னுடைய வசிப்பிடத்தில் தங்கியிருந்தார். வட்டார வழக்குச் சொல்லகராதியும், எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பும் அவரை மிகவும் ஈர்த்தது. பிரபாகரன் கி.ரா.வை பார்க்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் பாண்டி பஜார் சம்பவத்தின் விளைவாக அவர் கைது செய்யப்பட்டதன் சூழலினால் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

என்னுடைய பொது வாழ்வில், கலைஞர், வைகோ, பழ. நெடுமாறன் போன்ற ஆளுமைகளோடு களப்பணியில் இருந்துள்ளேன். வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் இருந்த போது நீதிபதிகள் வி. ராமசாமி, இரத்தினவேல் பாண்டியன், நடராஜன் பிற்காலத்தில் இவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் பொறுப்பேற்றனர். ஈழத் தமிழ்த் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் அவருடைய துணைவியார் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மற்றும் குட்டிமணி ஜெகனின் வழக்கறிஞர் கரிகாலன்.

இவர்கள் எல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்த காரணத்தினால் கி.ரா.வின் படைப்புகளை படித்து அவருடைய படைப்புகளை எல்லாம் படிக்க வேண்டுமென்று விரும்பியதுண்டு. திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவின் வழக்குகளை நடத்தியவன் என்ற முறையில் கி.ரா. படைப்புகள் பரிச்சயமாகி அவருடைய அனைத்து படைப்புகளையும் வேண்டி விரும்பி என்னிடம் கேட்டார். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் கைப்பக்குவத்தில் சிறப்பாக அமையும் சமையலை திரும்பவும் உண்ணவேண்டுமென்ற நினைப்பு ஏற்படும். அதைப்போல கி.ரா.வின் படைப்புகளில் ஒன்றை படித்துவிட்டால் அவர் படைப்புகளின் மீதான தேடலுக்கு மனம் தள்ளும்.

இப்படி பல செய்திகளை கி.ரா.வைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும். 1950ல் எழுத ஆரம்பித்த ‘கி.ரா’வின் பேனா இன்று வரை ஓயவில்லை. வி.சா.கண்டேகர், தகழிசிவசங்கரன் பிள்ளை போன்று கிராமத்தில் கயிற்று கட்டிலில் இடைசெவலில் இருந்து வசதி வாய்ப்பில்லாமல் தான் எழுதிய படைப்புகள் அவரை கீர்த்திக்கு அழைத்துச் சென்றது.

கி.ரா. கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, ரசிகமணி போல ரசிகர் – விமர்சகர், இசையின் இலக்கணத்தை அறிந்தவர், வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர், பொதுவுடைமைவாதி, விவசாயிகள் நலனுக்காக போராடிய போராளி, பண்பாளர், ஏடுகளில் பத்தியாளர் என பன்முகத் தன்மையை தன்னகத்தே கொண்டவர்.

அவருக்கு கிடைக்க வேண்டிய ‘ ஞானபீடமும் ’ தள்ளிக்கொண்டு போகிறது. பட்டம் பெறாத சாமுவேல் ஜான்சனுக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அவருடைய அகராதி தயாரிப்பு பணிகளுக்கு டாக்டர் பட்டம் அளித்தது. வட்டார வழக்குச் சொல்லகராதியை பல சிரமங்களுக்கு இடையில் தயாரித்த கி.ராவிற்கு தமிழகத்தின் எந்த பல்கலைக்கழகமும் கி.ராவுக்கு டாக்டர் பட்டம் அளிக்காதது குறித்து கவிஞர் மீராவே வருத்தப்பட்டதுண்டு.

1965ல் ‘கதவு’ என்ற சிறுகதை தொகுப்பு வெளிவந்ததில் இருந்து இன்று வரை தவறாமல் 57 ஆண்டுகளாக வந்த வண்ணம் உள்ளது. வட்டார வழக்குச் சொல்லகராதி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இவருடைய படைப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இந்த இரு சாதனைகளையும் யாரும் தமிழ் இலக்கிய உலகத்தில் செய்யவில்லை என்பது தான் மகிழ்ச்சியான ஒரு மதிப்பீடு.

‘கி.ரா.வின் 60’ மணி விழாவை கவிஞர் மீரா மதுரையில் கொண்டாடினார். ‘ராஜநாரயணியம்’ என்ற கி.ரா.வின் படைப்புகளைக் குறித்தான விமர்சனத் தொகுப்பையும் வெளியிட்டார். ‘கி.ரா.வின் 80’ விழாவை மறைந்த இராமமூர்த்தி, காவ்யா சண்முகச்சுந்தரம் மற்றும் அடியேனும் சேர்ந்து சென்னை பிலிம் சேம்பரில் நடத்தினோம். ‘கி.ரா.வின் 85’ விழாவை அடியேன் அதே அரங்கில் சென்னையில் நடத்தினோம். ‘கி.ரா. வின் 90‘ விழாவை டெல்லி தமிழ் சங்கம், தினமணி நாளிதழ், அடியேன் இணைந்து புதுடில்லியில் நடத்தினோம். இன்றைக்கு கி.ரா.95ஐ எட்டிவிட்டார்.

வேடிக்கையாக அவருடைய பிறந்தநாளை, ‘பொடிக்கும் தாடிக்கும் இடையே பிறந்தவர்’ என்று சொல்வதுண்டு. ஏனெனில் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17, கி.ரா.வின் பிறந்தநாள் செப்டம்பர் 16 ஆகும். அவருடைய பணிகள் இப்போதும் தொடர்கின்றது.

அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அவருடைய கருத்துச் சுரங்கத்தில் இருந்து இன்னும் கிடைக்க வேண்டிய செல்வங்கள் உள்ளன. அதை தொடர்ந்து மீட்டுத் தருவார். பக்தி இலக்கியங்களில் உள்ள தமிழ் சுவை என்னை ஈர்க்கும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடிய,

“ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு”
என்ற பாசுரத்தின்படி கி.ரா. அவர்களும் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (வழக்குரைஞர், செய்தித் தொடர்பாளர், திமுக., [email protected] )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version