― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சேவையே வாழ்வு என இருந்தவர்! சதியால் தற்கொலை செய்து கொண்டாராம்! மனதை உருக்கும் ஒரு மனிதரின்...

சேவையே வாழ்வு என இருந்தவர்! சதியால் தற்கொலை செய்து கொண்டாராம்! மனதை உருக்கும் ஒரு மனிதரின் பின்னணி!

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே அன்பு இல்லத்தின் கீழ் விவேகானந்த குருகுலம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வசதியற்ற ஏழைக் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.

6- ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகரன் (50) மாணவர்களிடம் தகாத முறையில் நடப்பதாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு பெற்றோர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் அதிகாரிகள். மேலும் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் ராகுல் என்பவர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகரனை கடந்த 22.9.19 அன்று கைது செய்தனர்.

தொடர்ந்து ஜாமின் பெற்று வெளியே வந்த அவர் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கரூர் அருகே விவசாய கிணற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திருப்பூரில் சுவாமி பூரணசேவானந்தர் கடந்த 10ஆம் தேதி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது. அவரது மரணத்திற்கு அவர் நடத்தி வந்த அறக்கட்டளையின் நிர்வாகி பாலசுந்தரம் என்பவர் தான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்! சேவானந்தர் மீது போக்சோவில் பொய்ப் புகார் அளித்து கைது செய்ய வைத்தனர் என்று அவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறப் படுவதாவது…. திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகரன் தனது பெயரை பூரண சேவானந்தர் என்று வைத்துக் கொண்டு சமூக சேவைகளில் இறங்கினார். அவருக்கு சுவாமி விவோகனந்தரின் கொள்கைகளில் பெரு விருப்பம் இருந்தது. விவேகானந்தரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு 1991ஆம் ஆண்டு முதல் பொது சேவைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

அதன் பின்னர் தனது சொத்துகளை விற்று அதில் கிடைத்த ரூ.10 லட்சத்தைக் கொண்டு, திருமுருகன்பூண்டியில் அன்பு இல்லம் என்ற சேவை அமைப்பையும், உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கினார் பூரண சேவானந்தா! நன்கொடைகள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்று விவோகனந்தா அறக்கட்டளை ஏற்படுத்தினார். அவரது நண்பர் பாலசுந்தரம் தலைமையிலான அறக்கட்டளையே, பள்ளியையும் இல்லத்தையும் நிர்வகித்து வந்தது.

பின்னாளில் நாமக்கல்லில் ராமகிருஷ்ண ஆசிரமம் என்ற பெயரில் தனி ஆசிரமமம் அமைத்து அங்கேயே வசித்து வந்தர் பூரண சேவானந்தர். 2019 செப்டம்பரில், விவேகானந்தா குருகுலப் பள்ளி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது! அதற்காக நாமக்கல்லில் இருந்து திருப்பூருக்கு இவர் சென்ற போதுதான், 4 சிறுவர்களிடம் பூரண சேவானந்தர் தவறாக நடந்து கொண்டார் என்று காவல்துறையில் சிலர் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை அடுத்து 2019 செப்டம்பர் 22ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பூரண சேவானந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்! ஆனால், 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் நிபந்தனை ஜாமீனில் பூரண சேவானந்தர் விடுவிக்கப் பட்டுள்ளார்.

இதனிடையே, இந்தப் புகார் குறித்து தனது நட்பு வட்டத்தில் பூரண சேவானந்தா கூறிய போது, தனக்கு எதிராக பொய் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று வருத்தப் பட்டுப் பேசியுள்ளார். கடந்த 5ஆம் தேதி திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்காக சென்றுள்ளார் பூரணசேவானந்தா.

அதன் பின்னர் தாமே கைப்பட ஒரு கடிதம் எழுதி, அதனை சிலருக்கு கூரியரில் அனுப்பி வைத்துள்ளார். தன் மீதான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, தனது சகோதரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என சிலருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி, கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுக்காலியூர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

பூரண சேவானந்தா எழுதிய கடிதங்களில், தாம் உருவாக்கிய அறக்கட்டளையின் சொத்து மதிப்பு தற்போது ரூ.60 கோடி என்றும், இந்தச் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே திட்டமிட்டு, தன் மீது 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தன் மீது பாலியல் பொய்ப்புகார்கள் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டி குறிப்பிட்டுள்ளார் பூரணசேவானந்தா.

அறக்கட்டளையின் தற்போதைய தலைவர் பாலசுந்தரம், தம்பி கனகராஜ், பணி நீக்கம் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்கள், ஊழியர் பிள்ளையார்சாமி என ஒரு குழு ஒன்று சேர்ந்து, தனக்கு எதிராக சதி செய்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்! மேலும், அவ்வாறு தன்னை இணைத்து சிறுவர்களிடம் பாலியல் குற்றம் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ள நாட்களிள், அந்தக் குறிப்பிட்ட நேரத்திள் தாம் தர்மபுரியில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள பூரணசேவானந்தா, திருப்பூர் பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக்கூட போலீசார் ஆய்வு செய்யவில்லை என்று விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சேவை செய்வதே லட்சியம் என்றும், தம்மால் சேவையாற்ற முடியாத நிலையில் இனி தாம் உயிருடன் இருந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதால், தாம் தற்கொலை முடிவை எடுத்ததாகவும், அந்தக் கடிதங்களில் பூரண சேவானந்தா குறிப்பிட்டுள்ளாராம்.

மேலும், அறக்கட்டளையின் நிறுவனர் என்ற அடிப்படையில், அதன் தலைவராக திருப்பூரின் பிரபல தொழிலதிபர் எக்ஸ்லான் ராமசாமியை நியமிப்பதாகவும், பாலசுந்தரத்தின் தலைமையின் கீழ் அறக்கட்டளை செயல்படக் கூடாது என்றும் பத்திரத்தில் எழுதி அதை மகளிர் நீதிமன்ற நீதிபதிக்கு பூரண சேவானந்தா அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

அறக்கட்டளை, இல்லம், பள்ளி என அனைத்தும் திருப்பூர் மக்களின் சொத்து என்றும், அதை தனிநபர் எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

இதனிடையே, பூரண சேவானந்தர் மீது புனையப்பட்டவை எல்லாம் பொய்ப்புகார்கள் என தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் அறக்கட்டளை செயலாளர் சண்முகம்!

இந்நிலையில், தனக்கு எதிரான பொய் வழக்குகளை சட்டப்படி சந்தித்து, அவற்றை வென்றெடுத்து, அமைப்பின் மீதான களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை அந்தக் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார் பூரண சேவானந்தர். இவர் குற்றம்சாட்டிய அறக்கட்டளை தலைவர் பாலசுந்தரம் இது குறித்துத் தெரிவித்த போது, தாம் ஒவ்வொரு விஷயத்திலும் அவரிடம் ஒப்புதல் பெற்றே முடிவு எடுத்ததாகத் தெரிவித்தார்!

வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், விவோகனந்த குருகுலம் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பூரண சேவானந்தர் தங்களுக்கு அனுப்பிய கடிதங்கள் மற்றும் அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சேவானந்தர் அடிப்படையில் நல்ல மனிதர் என்றும், எவரையும் எளிதில் நம்பி விடும் சாதுவான மனிதர், நல்லம் மனம் கொண்டவர், சேவைப்பணிகளில் ஆர்வம் கொண்டவர் என்று அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். சொத்துகளுக்காக ஒரு நல்ல மனிதரை சூழ்ச்சி செய்து இந்த உலகத்தை விட்டே போகச் செய்திருக்கிறார்கள் என்று வருத்தப் படுகின்றனர் அப்பகுதியினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version