― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?‘பத்மஸ்ரீ’க்காக Zoho ஸ்ரீதர் வேம்புவைப் பாராட்டி மகிழ்ந்தோம்!

‘பத்மஸ்ரீ’க்காக Zoho ஸ்ரீதர் வேம்புவைப் பாராட்டி மகிழ்ந்தோம்!

- Advertisement -
sridhar vembu2

பத்மஸ்ரீ. ஸ்ரீதர்வேம்பு அவர்கள்… நேற்று அவருடனான சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்!

தென்காசி மாவட்டம் மத்தாளம்பாறை பகுதியில் ZOHO என்ற மென்பொருள் ( Software என்று சொன்னால் எளிதில் புரியும்) நிறுவனம் நடத்தி வருபவர் தான் திரு. ஸ்ரீதர் வேம்பு.

2021ம் ஆண்டிற்கான மேதகு குடியரசு தலைவரின் பத்மஸ்ரீ விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நம் மண்ணின் மைந்தர். அருகாமையில் தென்காசியில் வசிக்கிறார்.அவரை சந்தித்து வாழ்த்து சொல்லுவோம் என்று அங்குள்ள இந்துமுன்னணி நிர்வாகிகள் மூலமாக நேரம் குறித்து இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் திரு.V.P.ஜெயக்குமார் ஜி அவர்களோடு சென்றோம்.

மதியம் 2 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் உணவை முடித்த பின்பே அவரை காண சென்றோம்.

அலுவலக வாயிலில் ஏற்கெனவே குறிப்பு வழங்கப்பட்டிருந்தது போல. நாம் சென்றதும் உள்ளே அழைத்து சென்றார் நிர்வாக மேலாளர்.

உள்ளே சென்றதும் அலுவலகத்தின் பிரதான வாயிலே உணவகம் தான். அதனை கடந்து தான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஆச்சரியத்தோடு மேலாளரிடம் கேட்ட போது பணிக்கு வருகிறவர்கள் எந்த அவசரத்தில் வந்தாலும் பசியோடு பணிபுரிய கூடாது. என்ற நோக்கிலேயே இவ்வாறு கட்டமைக்கபட்டதாக தெரிவித்தார்.

sridhar vembu3

சில நிமிடங்களில் அந்த உணவகத்திற்குள் நுழைந்தார் திரு.ஸ்ரீதர்வேம்பு

மென்பொருள் நிறுவன அதிபர் சென்னை ஐஐடியில் பொறியியல் முடித்து, அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக்கத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்து பின் இரண்டு ஆண்டுகள் குவால்காம் நிறுவனத்தில் பணிபுரிந்து 1996ல் அட்வெண்ட்னெட்.இன்க் (ஜோஹோவை ) நிறுவிய ஒரு அறிவு ஜீவியான கோடீஸ்வரர் என்றதும் கோட் சூட் டை சூ அணிந்து கொண்டு இருப்பார் என்ற நமது கற்பனைகளுக்கு கடிவாளம் போட்டது அவரது தோற்றம்

சாதாரண வெள்ளை கதர் வேட்டி சட்டை ரப்பர் செருப்பு என ஒரு கிராமத்து பெரிய மனிதர் போலவே இருந்தார். பாரம்பரிய சுக்கு காபி அருந்திவிட்டு பாரத தேசத்தின் பத்ம விருது பெறும் அவருக்கு அன்னைபாரதமாதா திருஉருவ படத்தை நினைவு பரிசாக வழங்கிய பின்னர் அலுவலகத்திற்கு செல்லுவோம் வாருங்கள் என அழைத்து சென்றார்.

பழைய நகரத்தார் வீடு போல தூண்கள் முகப்புகளுடன் பிரமாண்டமான கட்டிடம் தென்பட்டது. ஆனால் அதில் கோவில் போல காவி பட்டை அடிக்கப்பட்டு இருந்தது.

அவரிடம் கேட்ட போது ஆம் அது தான் அலுவலகம். நாம் பணிபுரியும் இடத்தை கோவிலாக கருத வேண்டும் என்ற எண்ணத்தோடே இவ்வாறு வடிவமைத்ததாக கூறினார். செய்யும் தொழிலே தெய்வம் என்று தானே நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்தார்கள் என்று பேசிக்கொண்டே அலுவலகத்திற்குள் இல்லை இல்லை அந்த கோவிலுக்குள் நுழைந்தோம்

sridhar vembu1

உள்ளே நவநாகரீகமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வந்த புது விருந்தாளிகளை குழந்தைகள் அழைத்து கொண்டு ஆர்வத்துடன் சுற்றி காண்பிப்பது போல அனைத்து தளங்களுக்கும் எங்களை அவரே அழைத்து சென்று என்ன வேலைகள் நடைபெறுகிறது என்பதை சொல்லி விறுவிறுப்பான அவரது வேகமான நடைக்கு சற்றே ஈடுகொடுத்து பேசிக்கொண்டே கோவிலின் வாசலில் இருந்த கல் திண்ணைக்கு வந்தமர்ந்து பொதிகை மலை தென்றலோடு திண்ணை பேச்சை துவக்கினோம்.

ZOHO என்றால் என்ன அர்த்தம்
Small OfficeHome Office என்பதன் சுருக்கமாக Sக்கு பதில் Z வைத்து ZOHO என உருவாகியுள்ளது

2020 ல் வீட்டிலிருந்தே மென்பொருள் வேலை என்பது கொராணாவால் காலத்தின் கட்டாயம் ஆனாலும் 2009லியே இதை தீர்க்கதரிசனமாக சிந்தித்து பெயரையும் வேலையையும் வடிவமைத்துள்ளார்

சென்னையிலும் பெங்களூரில் மட்டுமே மென்பொருள் நிறுவனங்கள் இருப்பதாக நினைத்து வந்த நமக்கு ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் கிளை நமது நெல்லை சீமையில் (இப்ப தென்காசி மாவட்டம் ) மத்தளம்பாறை என்ற சிறிய கிராமத்தில் இயங்கி வருவதே நமது கவனத்திற்கு இப்போது தான் வருகிறது.

மேதகு குடியரசு தலைவரின் பார்வைக்கும் பாரத பிரதமர் மத்திய அரசின் பார்வைக்கு இவரது பணிகள் சென்றது மத்திய ஆளுமையின் தகுதியை நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த நிறுவனத்தில் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் போதே வளாக நேர்முக தேர்வு (Campus interview) மூலம் விருப்பமுள்ள தகுதியுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ கேள்விபட்டிருக்கோம். பள்ளியிலேவா என்ற ஆச்சரியம் தான். அவர்களுக்கு மென்பொருள் துறை சார்ந்து இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுற்றுவட்டாரத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களே இங்கு அதிகம். சாதாரண கிராமத்து பின்னணியை கொண்ட மாணவ மாணவிகளை மென்பொருள் வல்லுநராக உருவாக்கி வருகிறார்.அவர்கள் அனைவருக்கும் இரண்டு வேளை உணவு , தேனீர் மட்டுமின்றி பயிற்சியின் போது மாதாமாதம் பத்தாயிரம் ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.

பல லட்சம் செலவழித்து பொறியியல் கல்லூரியில் படித்து மென்பொருள் அறிஞராக வேண்டிய சமூகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு மாதம் உதவி தொகை வழங்கி மென்பொருள் நிபுணராக்கும் அவரது மகத்தான பணியே மக்களின் சேவைக்கு மகத்தான விருதான பத்ம விருதிற்கு அவரை தகுதிபடுத்தியிருக்கிறது.

பயிற்சி முடிந்ததும் அவர்களது தகுதி திறமைக்கு ஏற்ப அங்கேயே பணியமர்த்தப்பட்டு மற்ற மென்பொருள் நிறுவனங்கள் போல ஆயிரகணக்கில் சம்பளம்.

உலகில் உள்ள பல அசுர வளர்ச்சி கண்ட மென்பொருள் நிறுவனங்களோடு போட்டியிடும் வகையில் சென்னை தென்காசி மட்டுமன்றி ரேணிகுண்டா முதல் கொலம்பியா அமெரிக்க போன்ற நாடுகளிலும் இதன் கிளை நிறுவனம் இயங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள், ஆரக்கிள் ,மற்றும் சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட பெருந்தலைகளுக்கு போட்டியாக வளர்ந்து வருகின்றது.இன்றைய நிலவரப்படி, ஜோஹோ உலகம் முழுவதும் 60 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது

மென்பொருள் நிறுவனம் என்றதும் நமக்கு பில்கேட்ஸ் தான் நினைவிற்கு வரும். இவர் தமிழகத்தை சார்ந்த இந்தியாவின் கிராமத்து பில்கேட்ஸ் என்று சொல்லும் அளவிற்கு மென்பொருள் துறையில் சாதனை படைத்து வருகிறார்.

ஒரு சிறு உதாரணம் சொல்ல வேண்டுமானால் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வாடட்ஸப் செயலி (App) உலக அளவில் பிரசித்தி பெற்ற அந்நிய நிறுவனம் சார்ந்தது. அதற்கு போட்டியாக இந்தியாவிலிருந்து ஒரு புதிய செயலியை தற்போது ZOHO நிறுவனம் தயாரித்து உள்ளது. IT நகரங்களில் இருந்து தான் ஒரு செயலியை உருவாக்க முடியும் என்று பலரும் நினைத்திருப்போம். ஆனால் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் இருந்தும், சர்வதேச அளவில் கோலேச்ச முடியும் என ZOHO காட்டியுள்ளது.

இந்தியா மென்பொருள் துறையில் சுயசார்பு பெறவேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசிக்கு கூட மூலப் பொருட்களை பெற பிற நாடுகளை சார்ந்து இன்றைக்கும் இருந்து வருகிறோம் . பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களை பிட்டிங் செய்யும் பணியே இங்கு நடைபெறுகிறது. நம்மாலும் அவைகளை உருவாக்க முடியும் அதற்காக எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவது தான் என்னுடைய தேசத்திற்கு நான் செய்யக்கூடிய பணியாக கருதுகிறேன் என்றார் நெகிழ்ச்சியோடு

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலான சந்திப்பு நேரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. உலக அரங்கில் இந்திய தேசத்தை முன்னேற்ற வேண்டும் தேச மக்களை வல்லுநர்களாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு பணிபுரியும் இந்த தேசியவாதிக்கு பத்மஸ்ரீ நிச்சயம் பொருத்தமானது தான்

மீண்டும் உணவறைக்கு வந்து தேனீர் பலகாரங்களுடன் அவரிடமிருந்து விடை பெற்றோம்

காரில் ஏறி ஒரு சில மணித்துளிகளில் வானொலி பண்பலையில் மான் கி பாத் நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மோடி பேசுகிறார்

பத்ம விருது பெற்றவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் அவர்களைப் பற்றி உங்கள் குடும்பத்தினரோடு உரையாடுங்கள் என்று பாரத பிரதமர் பேசுகிறார்

பாரதத் தலைவனின் எண்ணத்தின்படியே நாமும் செயல்படுகிறோம் என்கின்ற மகிழ்ச்சியோடு நமது பயணம்

  • கா.குற்றாலநாதன், நெல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version