More
  Homeசுய முன்னேற்றம்விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (16): சாமர்த்தியப் பேச்சு!

  To Read in other Indian Languages…

  விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (16): சாமர்த்தியப் பேச்சு!

  ராமரின் கதையை முழுவதும் கூறிய பின்னர்தான் ராமன் அளித்த மோதிரத்தை சீதையிடம் கொடுத்தார் அனுமன். இது புத்திகூர்மை

  vijayapadam 1 - Dhinasari Tamil

  விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் – 16 Communication & Inter Personal Relationship
  (சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

  தெலுங்கில் – பி எஸ் சர்மா
  தமிழில் ராஜி ரகுநாதன்

  Communication & Inter Personal Relationship
  பேச்சு சாமர்த்தியம் வேண்டும்!


  தனிமனித ஆளுமை என்ற பெயரில் மாணவர்களுக்கு தனி வகுப்புகள் எடுப்பது இப்போது வழக்கமாக உள்ளது. உபயோகமான விஷயங்கள் எதுவும் அவர்களுக்கு பள்ளிப் பாடத்தின் மூலம் கிடைப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

  பாரத வரலாற்று இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் இருந்து இன்றைய இளைய சமுதாயம் விலகி உள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று தேசத்தில் நுழைந்துள்ள லௌகீக வாதக் கல்வி. இரண்டாவது விடுதலைக்குப் பின் மதத் தீவிரவாதிகளின் கைகளிலும் இடதுசாரி போலி மேதாவிகளின் கைகளிலும் கல்விக் கடவுள் சிறைப்பட்டுள்ளாள்.

  ராமாயண, மகாபாரதத்திலும் பஞ்ச தந்திரக் கதைகளிலும் உள்ள பல்வேறு கதாபாத்திரங்களும் அதில் காணப்படும் கதைகளும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு பேச வேண்டும்? போன்ற விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் கல்வித் துறை நிர்வாகிகள் இவற்றையும் இவை போன்றவற்றையும் மாணவர்களின் கண்ணில் காட்டினால்தானே?
  வால்மீகி ராமாயணத்தின் தொடக்கத்திலேயே ராமனின் பல நற்குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ராமனை சகல சாஸ்திரங்களின் பொருளையும் அறிந்தவனாகவும் புத்தி கூர்மை கொண்டவனாகவும் நாரதர் வர்ணிக்கிறார்.

  புத்திகூர்மை என்றால் உசிதமாக சமய சந்தர்பத்திற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வது… பேசுவது. அது ஒரு கலை. இது இயல்பாக மனிதர்களிடம் குடி கொண்டிருந்து மாறும் சூல்நிலைக்கேற்பவும் தொடர் பயிற்சியின் மூலமும் மலர்கிறது.

  தலைவனுக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம் பலரையும் ஈர்க்கும்படியாகப் பேசி தன்னோடு அனைவரையும் இணைத்துக் கொள்ளும் குணம். ராமனை ‘ஸ்மிதபாஷி’ – புன்னகையோடு பேசுபவன் என்றும் ‘பூர்வபாஷி’ – தானே பிறரை முதலில் நலம் விசாரிப்பவன் என்றும் வால்மீகி வர்ணிக்கிறார். இந்த குணமே அயோத்தி மக்களையும் முனிவர்களையும் வானரங்களையும் ஆகர்ஷித்தன.

  விபீஷணன் சரணடைய வந்த போது அவனுடைய குணங்களை ஸ்ரீராமன் முதல் பார்வையிலேயே உணர்ந்து கொண்டான். அனைவரின் கருத்துகளையும் கேட்டபின் ஸ்ரீராமன் விபீஷணனை நண்பனாக ஏற்றதோடு லங்கா நகருக்கு அரசனாக பட்டபிஷேகமும் செய்வித்தான். விபீஷணன் கூறிய சொற்களைக் கேட்டு ஸ்ரீராமன், ‘கண்களால் அருந்துவது போல் அன்பே வடிவமாகப் பார்த்தான்’ என்று வால்மீகி வர்ணிக்கிறார். இனிமையாகப் பேசும் குணம் கொண்ட ஸ்ரீராமனே மெச்சிக் கொள்ளும் சிறந்த வாக்கு வன்மை கொண்டு, பேசுவதில் உயர்ந்தவர் ஆஞ்சநேயர்.

  ஸ்ரீராமன் அனுமனை அழைத்தபோது பயன்படுத்திய அடைமொழிகளில் முக்கியமானது, ‘பேச்சு வல்லமை கொண்ட ஓ அனுமா!’ என்பது. முதல் உரையாடலிலேயே ராமன் அனுமன் மீது நல்ல அபிப்பிராயத்தை அடைந்தான். சுக்ரீவனின் தூதனாக துறவி வடிவில் ராம, லடசுமணர்களை தரிசித்து மிருதுவாக மனோகரமான வார்த்தைகளால் அனுமன் உரையாடத் தொடங்கினான். ஹனுமன் சம்பாஷணையின் ஆரம்பத்திலேயே அவ்விருவரையும் கவர்ந்து விட்டான்.

  “நீங்கள் ராஜரிஷிகளைப் போலுள்ளீர்கள். தேவர்களைப் போலுள்ளீர்கள்” என்று தொடங்குகிறான் அனுமன் தன் உரையாடலை. வால்மீகி மகரிஷி கூட ஹனுமனை, ‘வாக் யஞ்ஞ’ – பேசத் தெரிந்தவன், ‘வாக்யகுசல’ பேச்சில் திறமைசாலி என்று புகழ்கிறார். சந்நியாசி உருவில் வந்த ஹனுமன் கூறிய சொற்களை ராமன் வியந்து கேட்டான். அனுமனின் பேச்சுத் திறமையைப் புகழ்ந்து லட்சுமணனிடம் இவ்வாறு கூறுகிறான்.

  அவிஸ்தரம் அஸந்திக்தம் அவிலம்பிதம் அவ்யதம் !
  உரஸ்த: கண்டகம் வாக்யம் வர்ததே மத்யமஸ்வரம் !!
  (கிஷ்கிந்தா காண்டம் -3-31)

  பொருள்:- ஹனுமனின் சொற்களில் அனாவசியமான நீட்டல் இல்லை. கூறிய விஷயத்தில் ஐயத்திற்கு இடமில்லை. உச்சரிப்பில் அவசரம் இல்லை. பேசுவதில் அவனுக்கும் சிரமமில்லை. கேட்பவருக்கும் தொந்தரவு இல்லை. ஹனுமனின் வாக்கு மார்பிலிருந்து தொண்டையை அடைந்து இனிமையாக நடுத்தர ஸ்வரத்தில் பேசுகிறான்” என்று ராமன் லட்சுமணனிடம் கூறியதாக வால்மீகி விவரிக்கிறார்.

  rama and hanuman - Dhinasari Tamil

  “வேதம் படித்தவர்தான் இவ்விதம் பேச முடியும். கடின சொல் இல்லாமல் இத்தனை நேரம் பேச முடிந்ததென்றால் இலக்கண அறிஞராக இருக்க வேண்டும். உச்சரிப்பில் தடங்கலின்றி உரையாடுகிறான். முகம் கண்கள் நெற்றி புருவங்களில் எவ்விதமான விகாரமும் இல்லாமல் பேசுகிறான்” என்று ராமன் புகழ்கிறான். அனுமனின் இந்த சொற்போழிவுத் திறன் பல தலைமுறைகளுக்கு உதாரணமாக இருக்கக் கூடியது.

  ஸ்ரீராமன் பகைவனை அழித்தபின் ஹனுமன் சீதையிடம் சென்று வெற்றிச் செய்தியை அறிவிக்கிறான். அந்த பிரியமான செய்தியை சுருக்கமாகத் தெரிவித்தபின் சீதை ஹனுமானைப் புகழ்ந்து இவ்வாறு கூறுகிறாள்… “வெள்ளியோ தங்கமோ பல்வேறு ரத்தினங்களோ மூவுலக சாம்ராஜ்யமா உன் பேச்சுக்கு நிகராகாது” என்று புகழ்கிறாள்.

  சீதாதேவி ஹனுமனின் தகவல் தொடர்புத் திறனை இவ்வாறு போற்றுகிறாள்…

  அதி லக்ஷண சம்பன்னம் மாதுர்ய குண பூஷிதம் !
  புத்த்யா வ்யஷ்டாஜ்கயா யுக்தம் த்வமேவார்ஷஸி பூஷிதம் !!
  (ராமாயணம் யுத்தகாண்டம் 113-26)

  பொருள்:- நல்ல உச்சரிப்போடு இனிமையான அலங்காரங்களோடு அஷ்டாங்க யுக்தமாகப் பேசுவதில் நீயே சிறந்தவன்.!

  அலங்காரங்கள் என்றால் உவமானம் போன்ற ஒப்பீடுகளான இலக்கிய அழகு. மேற்சொன்ன சுலோகத்தில் சீதாதேவி கூறிய அஷ்டாங்க யுக்தம் என்னும் எட்டுவித குணங்களை பாஷ்யம் எழுதியவர்கள் இவ்விதம் விவரிக்கின்றனர்.

  சுஸ்ரூஷா ஸ்ரவணம் சைவ க்ரஹணம் தாரணம் ததா !
  ஊஹா போஹோர்த விஞ்ஞானம் தத்வஞானம் ச தீகுணா: !!
  (பாலாநந்தினி வ்யாக்யானம்)

  பிறர் கூறுவதைக் கேட்பதில் விருப்பம் கொண்டிருப்பது
  பிறருக்கு கேட்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும்படி பேசுவது.
  பிறர் கூறுவதை செவிமடுப்பது
  செவி மடுத்ததை நன்கு புரிந்து கொள்வது.
  காதால் கேட்டதை ஞாபகம் வைத்துக் கொள்வது.
  கூறாத விஷயத்தையும் ஊகித்து உணர்வது.
  தேவையில்லாத விஹயங்களை விட்டு விடுவது.
  யதார்தத்தை பரிந்துரைப்பது.

  இவ்வாறு ஒரு பேச்சாளருக்கு இருக்க வேண்டிய குணங்களை சீதை கூறி, அனுமனின் பேச்சில் இந்த குணங்கள் இருப்பதாக புகழ்ந்து கூறுகிறாள்.

  rama and hanuman choodamani - Dhinasari Tamil

  தலைவன் அனைவருக்கும் பிரியமானவன் ஆக வேண்டுமென்றாலும் வெற்றிகளை சாதிக்க வேண்டுமென்றாலும் நண்பர்களையும் ஆதரவாளர்களையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்றாலும் இருக்க வேண்டிய குணம் மென்மையாகப் பேசுவது.

  அன்பாகப் பேசுபவருக்கு என்ன கிடைக்கும்? யோசித்துப் பணிபுரிபவர் என்ன பெறுவார்? நிறைய நண்பர்கள் உடையவர் என்ன சாதிக்கிறார்? தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடிப்பவர் எந்த நிலையை அடைவார்?
  மகாபாரதம் இவ்வாறு பதில் கூறுகிறது…

  ப்ரியவசன வாதீ ப்ரியோ பவதி விம்ருசிதகார்யகரோதிகம் ஜயதி !
  பஹுமித்ரகர: சுகம் வசதே யாஸ்ச தர்மரத: ஸ கதிம் லபதே !!
  (வனபர்வம் 313-113)

  பொருள்:- அன்பாகப் பேசுபவரை அனைவருக்கும் பிடிக்கும். யோசித்துப் பணி புரிபவர் வெற்றிகளை அடைவார். அவருக்கு அதிக நண்பர்கள் ஏற்படுவர். இவ்வாறு நிறைய நண்பர்கள் இருப்பவர் சுகமாக வாழ்வார். தர்மத்தில் நாட்டமுள்ளவர் சத்கதிகளைப் பெறுவார்.

  சொற்கள் அம்பை விடக் கூர்மையானவை:-

  அனுசாசன பர்வத்தில் பேச்சு பற்றி பீஷ்மர் இவ்வாறு கூறுகிறார்… “கடுமையாகப் பேசக் கூடாது. பிறர் மனம் புண்படும்படி கடும் சொற்களை உதிர்க்கக் கூடாது.. கோடாலியால் வெட்டிய மரம் துளிர்க்கும். ஆனால் பௌருஷமான வார்த்தை என்ற ஆயுதம் விளைவித்த காயம் ஆறாது”.

  கர்ணிநாலீகனாராசான் நிர்ஹரந்தி சரீரத: !
  வாக் ஸல்யஸ்து ந நிர்ஹர்தும் ஸக்யோ ஹ்ருதிஸயோ ஹிஸ: !!
  (அனுசாசன பர்வம் -104-34)

  பொருள்:- உடலில் குத்தியிருக்கும் அம்புகளை யுக்தியோடு நீக்கிவிடலாம். ஆனால் மனதில் பாய்ந்த சொல் என்னும் அம்புகளை நீக்க இயலாது.

  இனிமையான பேச்சே மனிதனுக்கு அலங்காரம் என்று கூறுகிறது இந்த பர்த்ருஹரி ஸ்லோகம்…

  கேயுராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்தரோஜ்வலா: !
  ந ஸ்நானம் ந விலேபனம் ந குசுமம் நாலங்க்ருதா மூர்தஜா: !
  வாண்யேகா ஸமலங்கரோதி புருஷம் யா சம்ஸ்க்ருதா தார்யதே !
  க்ஷீயந்தே கலு பூஷணானி சததம் வாக்பூஷணம் பூஷணம் !!

  பொருள்:- மனிதனுக்கு தங்கத் தோள்வளை, முத்துமாலை போன்றவை அலங்காரங்கள் அல்ல. பரிமள சுகந்த நீரில் குளியல், வாசனைத் திரவியங்கள், மணம் மிக்க மலர்கள் அலங்காரமல்ல. குற்றமற்ற சொற்களே மனிதனுக்கு உண்மையான அலங்காரம். மீதி அல்லாம் அழியக்கூடியவையே!

  இருபுறமும் கூர்மை:-
  ஹனுமன் பேசிய சொற்களில் தர்மம், அரசபக்தி, பணிவு அனைத்தும் நிறைந்து தென்பட்டன. அது அனுமனின் சிறந்த குணம். வெறும் சொற்பொழிவாற்றினால் போதாது. அந்த சொற்கள் தர்மத்தோடு கூடியவையாக இருக்க வேண்டும். ‘அர்பன் நக்சல்ஸ்’ என்று அழைக்கப்படும் சில வன்முறையாளர்கள் தம் வாக்கு சாதுர்யத்தால் மாணவர்களை ஈர்த்து தவறான வழியில் நடத்தி தேச துரோகச் செயல்களில் ஈடுபடுத்துவதாக செய்திகளில் படிக்கிறோம். இதனை சொல் நிபுணத்துவம் என்று நினைக்க முடியாது. ஏனென்றால் அந்த அர்பன் நக்சல்களின் செயல்கள் நாட்டு நலனுக்கும் பொதுமக்களின் நலனுக்கும் எதிரானவை.

  அனுமனின் புத்தி கூர்மை:-
  ராம காரியத்திற்காக அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டறிவதில் வெற்றி பெற்றார். ஜாம்பவான், அங்கதன் போன்றோரைச் சந்திக்க வேண்டுமென்ற உற்சாகத்தோடு ஹனுமன் வாயுவேகத்தில் திரும்ப புறப்பட்டார். கடலின் வடக்கு தீரத்தில் தனக்காக ஆர்வத்தொடு அவருடைய குழுவினர் எதிர்பர்த்திருந்தார்கள்.

  சீதையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று பரிதவித்து கவலை கொண்ட மனதோடு உள்ள அவர்களை எவ்வாறு மகிழ்ச்சியடைச் செய்வது? இந்த சுபச் செய்தியை எவ்வாறு தெரிவிக்கலாம்? சென்ற வேலை முழுமையடைந்தது என்ற செய்தி தன்னை விட முன்பாகச் சென்று சேர வேண்டுமென்று விரும்பினார் அனுமன்.

  தன் குழுவினரின் மனதில் எத்தகைய அழுத்தம் இருந்தாலும் அதனை நீக்கிவிட வேண்டுமென்று ஹனுமன் பெரியதாக ஜெயகோஷம் செய்தார். அதைக் கேட்டவுடன் ஜாம்பவானுக்கு ஹனுமன் சென்ற பணியை வெற்றிகரமாக முடித்து வருகிறார் என்று புரிந்து விட்டது. இவ்வாறு ஹனுமனின் வருகைக்கு முன்பே வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கி விட்டது. அனைவரும் மலர்கள், பழங்கள் ஆகியவற்றோடு தயாராக இருந்தனர். ஹனுமன் வந்து சேர்ந்தார்.


  “த்ருஷ்டா ஸா ஜனகாத்மஜா” – “கண்டேன் சீதையை!” என்ற சொற்களில் ஹனுமனின் புத்திகூர்மை, நேரத்திற்கேற்ற பொருத்தமான சொற்கள் (சமயஸ்பூர்த்தி), வாக்கு சாதுர்யம் பளிச்சென்று தெரிகிறது. “சீதையைக் கண்டேன்” என்பதற்கும், “கண்டேன் சீதையை” என்பதற்கும் உள்ள வேறுபாட்டை மானசீக நிபுணர்கள் ஆராய்ந்தனர். எதிர்பார்ப்போடு இருப்பவர்களுக்கு ‘சீதா’ என்று வாக்கியத்தைத் தொடங்கினால் கேட்பவருக்கு ‘சீதைக்கு என்ன ஆயிற்றோ?’ என்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ராமனிடம் சென்ற போதும் அனுமன் எப்படி பேசினார் என்பதை வால்மீகி முனிவர் வர்ணிக்கிறார்.

  த்ருஷ்டா தேவேதி ஹனுமத்வதநாதம்ருதோபமம்
  ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷமாப ஸலக்ஷ்மண: !!
  (சுந்தர காண்டம் – 64-37)

  பொருள்:- கண்டேன் சீதையை என்று ஹனுமனின் வாயிலிருந்து வந்த சொற்களை லட்சுமண சமேதனான ஸ்ரீராமன் கேட்டு ஆனந்தமடைந்தான்.

  கேட்பவருக்கு மானசீக அழுத்தம் ஏற்படுத்தாமல் இதமாகப் பேசுவது ஒரு கலை. அந்தக் கலையை அனுமனின் இந்த சம்பவத்திலிருந்து கற்க முடியும்.

  எவ்வாறு பேச வேண்டும்?

  ஸ்ரீராம காரியத்திற்காக வானர வீரரான ஹனுமன் இலங்கையைச் சென்றடைந்து மிகவும் சிரமப்பட்டு தேடி சீதையை தரிசித்தார். அதோடு அவர் கடமை முடியவில்லை. ஸ்ரீராமச்சந்திரப்பிரபு கொடுத்த மோதிரத்தை சீதா தேவியிடம் கொடுக்க வேண்டும். அவளோடு உரையாட வேண்டும். சீதாதேவியோடு உரையாடலை எவ்வாறு தொடங்குவது? எந்த மொழியில் பேசுவது… என்பது பற்றி மிகவும் யோசித்தார் அனுமன். சீதை தன் பேச்சக் கேட்டு பயந்துவிடக் கூடாது. அங்கு காவலிருக்கும் அரக்கிகளின் கண்ணிலும் படக்கூடாது. எவ்விதம் பேச்சைத் துவங்குவது? வால்மீகி முனிவர் இந்த கட்டத்தை அற்புதமாக வர்ணிக்கிறார்…

  இதி ஸ பஹுவிதம் மகாநுபாவோ
  ஜகதி பதே: ப்ரமதாமவேக்ஷமாண: !
  மதுரமவிததம் ஜகாத வாக்யம்
  த்ருமவிடபாந்தரமாஸ்திதோ ஹனூமான் !!
  (சுந்தரகாண்டம் 30-44)

  பொருள்:- மகானுபாவரான ஹனுமான் மரக்கிளைகளின் இடையில் மறைந்திருந்து ஸ்ரீராம பத்தினியான சீதையை தொலைவிலிருந்து பார்த்து, மதுரமான வீணில்லாத சொற்களைப் பேசினார். ஹனுமான் மிகவும் ஆலோசித்து, தசரதரின் பெயரோடு தொடங்கி ராம கதையைக் கூறி சீதைக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.

  ராமரின் கதையை முழுவதும் கூறிய பின்னர்தான் ராமன் அளித்த மோதிரத்தை சீதையிடம் கொடுத்தார் அனுமன். இது புத்திகூர்மை கொண்ட அனுமனின் சிந்தனைத் திறன்.

  பரத்யயார்தம் தவாநீதம் தேன தத்தம் மஹாத்மனா !
  ஸமாஸ்வஸிஹி பத்ரம் தே க்ஷீனம் து:கபலாஹ்யஸி !!
  (சுந்தரகாண்டம் -35-3)

  பொருள்:- மகாத்மாவான ராமர் அளித்த இந்த மோதிரத்தை உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எடுத்து வந்தேன். உங்களுக்கு நலமே விளையும். உங்கள் கஷ்டம் தீரும் நேரம் வந்துவிட்டது.

  ஸ்ரீராமன் அனுப்பிய மோதிரத்தைப் பார்த்து சீதை ஆனந்தமடைந்தாள். ராமதூதனிடம் முழு நம்பிக்கை ஏற்பட்டது. அனுமனிடம் வாத்சல்யம் மிகுந்த அன்னையாக அவரை பலவிதத்திலும் புகழ்ந்து பேசினாள்.

  “ஓ! வானரோத்தமனே! நீயே பராக்கிரமசாலி! நீயே சமர்த்தன்! நீயே புத்திசாலி! நீ சாமானிய வானரம் அல்ல! உன்னை சோதிக்காமல் ராமன் என்னிடம் அனுப்பியிருக்க மாட்டார் அல்லவா?” என்று புகழ்ந்தாள்.

  அதன் பின்னர் நடந்த கதை தெரிந்ததுதானே! தூதனாகச் செல்லும் போது எவ்வாறு பேச வேண்டும்? எவ்வாறு காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும்… என்பனவற்றைத் தெரிவிக்கும் அற்புதமாக நிகழ்ச்சி இது.

  அந்தக் காலத்தில் தூதன் என்றால்… தற்போது ஒரு அம்பாசிடர், ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி, மத்தியஸ்தர், ஏஜென்ட், மீடியேட்டர்.

  தொழில்… வியாபாரத்தில் இருப்பவர்கள் எப்படி உரையாடலைத் தொடங்குவது? தன்னைப் பற்றி தானே எவ்வாறு எடுத்தியம்புவது? எவ்வாறு தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது நம்பிக்கையை வளர்த்து வெற்றியை சாதிப்பது… போன்றவற்றை விளக்கும் பாடம் இந்த சம்பவம்.

  இது போன்ற சந்தர்ப்பம் நம் தொழில், வியாபாரத்தில் மட்டுமே அல்ல… தனிப்பட்ட விவகாரங்களிலும் கூட பல நேரங்களில் எதிர்ப்படும். புதியவர்களை முதன் முதலில் சந்திக்கும் போது, முக்கியமான வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் நேகோஷியேஷனுக்காக அமரும் போது, வேலைக்கான இன்டர்வ்யூவுக்குச் செல்லும் போது… எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது? என்ன பேசுவது? எப்படிப்பட்ட வினாக்கள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது? அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பது… போன்ற பல சிக்கலான சந்தர்பங்களில் மேற்சொன்ன பாடம் மிகவும் பயன்படும்.

  ஒரு நேர்முகத் தேர்வு தொடர்பான முழு வடிவமும் நம் மனப் பலகையில் தென்பட வேண்டும். அதன் தொடர்பான பயிற்சியை வீட்டில் கண்ணாடி முன் அமர்ந்து ஒரு முறைக்கு இருமுறை செய்து பார்க்க வேண்டும். வெற்றிகரமான, திறமையான உரையாடலுக்கான பயிற்சியளிக்கும் அறிவியல் ரீதியான முறை இது.

  தனி மனித வாழ்வில் நாம் அனைவரும் காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை யார் யாரையோ சந்திக்கிறோம். உரையாடுகிறோம். குடும்பத்தினரோடு, பக்கத்து வீட்டாரோடு, காய்கறி விற்பவரோடு… யாரோடு எப்படிப் பேசுவது? மதிப்போடு எப்படி நடந்து கொள்வது? பேசுவது ஒரு கலை. அதிலும் நன்றாகப் பேசுவது என்பது அற்புதமான கலை.

  சமஸ்கிருத இலக்கியத்தில் உள்ள இந்த சுலோகம் இனிப்பாகப் பேசும்படி ஹிதோபதேசம் செய்கிறது.

  ப்ரியவாக்ய பிரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ: !
  தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா !!
  (சாணக்கிய நீதி)

  பொருள்:- பிரியமாகப் பேசினால் அனைவரும் மகிழ்வர். அதனால் அனைவரோடும் மகிழ்ச்சி விளைவிக்கும்படி பேச வேண்டும். பேச்சுக்குக் கூடவா தரித்திரம்?

  சுபம்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  1 COMMENT

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  14 − eleven =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  Follow Dhinasari on Social Media

  19,055FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,432FollowersFollow
  17,300SubscribersSubscribe

  Cinema / Entertainment

  பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

  பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

  என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

  சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

  விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

  Latest News : Read Now...