
செங்கோட்டை அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாணம்
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் நாளான நேற்று திருக்கல்யாண மகோத்ஸவம் விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் அறநிலையத்துறையின் கீழ், சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இக்கோவிலில் திருக்கல்யாண வைபவம், கடந்த 1996 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் 23 ஆவது வருட கல்யாண வைபமாக புரட்டாசி முதல் நாள் நேற்று (செப்.18) புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் ஸ்ரீபூமி, நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒரு பக்கத்தில் பெருமாளும் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழுந்தருளச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து பாலும் பழமும் நிவேதித்து, திருக்கல்யாண சடங்கும் ஊஞ்சல் வைபவமும் சிறப்பும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப் பட்ட மணமேடை மண்டபத்தில் மூவரையும் எழுந்தருளச் செய்து, வேள்வி வளர்த்து, காப்பிடுதல், பூணூல் மாற்றுதல், கோத்திரம் மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.

திருக்கல்யாண வைபவத்தின் முக்கிய நிகழ்வான ஸ்ரீபூமி நீளா தேவியருக்கு சுந்தராஜப் பெருமாள் திருக்கரங்களால் திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சப்த அடி, பொரியிடுதல் போன்ற வைபவங்களும் நடைபெற்றன. தொடர்ந்து திவ்யதம்பதிகளுக்கு ஆரத்தி காட்டி மகாதீபாராதனை நடைபெற்றது.

நிறைவாக ஸ்ரீபூமி நீளாதேவி சமேதராய் அழகிய மணவாளப் பெருமாள் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.
இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் அருளைப் பெற்றனர்.